மின்னொளியில் செடி வளர்ப்பு
சூரிய வெளிச்சம் படியாத இடங்களில் தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்க சாதாரண விளக்குகளை சிலர் பயன்படுத்துவர். ஆனால், பலன்கள் சிறப்பாக இருக்காது. எல்.இ.டி. விளக்குகள்தான் செடிகளின் வளர்ச்சிக்கு உகந்தது.
செடிகள் வளர்வதற்கு சூரிய ஒளி மிக அவசியம். அந்த ஒளிச்சேர்க்கை மூலம்தான் அவை வேர் பிடித்து வளருகின்றன. சூரிய ஒளிக்கு மாற்றாக அதிக செயல்திறன் கொண்ட எல்.இ.டி. விளக்கு ஒளி மூலமாகவும் செடிகளை வளர்க்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவை குறித்த சில தகவல்களை இங்கு பார்ப்போம்.
செடி வளர்ப்புக்குப் பயன்படுத்தப்படும் செயற்கை ஒளி விளக்கு:
சூரிய வெளிச்சம் படியாத இடங்களில் தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்க சாதாரண விளக்குகளை சிலர் பயன்படுத்துவர். ஆனால், பலன்கள் சிறப்பாக இருக்காது. எல்.இ.டி. விளக்குகள்தான் செடிகளின் வளர்ச்சிக்கு உகந்தது.
செடிகள் வளர மின்னொளியின் செயல்பாடு:
எல்.இ.டி. விளக்குகள் மின் ஆற்றலை போட்டான்களாக மாற்றுகின்றன. அவை ஒளிச்சேர்க்கையைத் தூண்டுவதுடன், செடிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒளித் துகள்களாக செயல்படுகின்றன. அதனால், மின்னொளியில் செடிகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
செடிகள் வளர உதவும் வண்ண எல்.இ.டி. விளக்குகள்:
செடிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிறமியான குளோரோபில்லை உற்பத்தி செய்வதில் நீல நிற ஒளி உதவியாக இருக்கும். நீல நிறம் இளம் செடிகள், அதன் நாற்றுகளின் முளைப்புத் திறன் மற்றும் வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. சிவப்பு நிற விளக்குகள் செடிகளின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்தவும், பூக்கள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.
செடி வளர்க்கும் செயற்கை ஒளி விளக்குகளை பயன்படுத்தும் முறை:
ப்ளோரெசெண்ட் விளக்குகளை செடி வளர்க்க பயன்படுத்தினால், மண்ணிற்கும் விளக்கிற்குமான இடைப்பட்ட தூரம் 6 முதல் 8 அங்குலம் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். எல்.இ.டி. விளக்குகளை தரையில் இருந்து 12 முதல் 30 அங்குல உயரத்தில் அமைப்பது போதுமானது. மேலும், செடிகளின் நாற்றுகளை சிறப்பாக வளர்க்க 5,000 முதல் 6,500 வரையுள்ள கெல்வின் மதிப்பீட்டையும், குறைந்தது 2,500 லுமன்களின் வெளியீட்டையும் கொண்ட பல்பு வகைகளைப் பயன்படுத்தலாம்.
குரோ விளக்கு மூலம் வளர்க்கக்கூடிய செடிகளின் வகைகள்:
கற்றாழை, சதைப்பற்றுள்ள தாவரங்கள், பூச்செடிகள், கீரை வகைகள், இன்டோர் தாவரங்கள், நாற்றுகள் மற்றும் அழகுச் செடிகள் ஆகியவற்றை செயற்கை ஒளி விளக்கைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
எல்.இ.டி. குரோ விளக்குகளை பயன்படுத்தும் கால வரையறை:
நாற்றுகளாக வளரும் செடிகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. முதிர்ந்த செடிகளுக்கு 8 முதல் 10 மணி நேரம் தேவைப்படுகிறது. எனவே, செடிகளை வளர்த்து, அவற்றிலிருந்து பூப்பது மற்றும் பழங்கள் விளைவதை தூண்ட முயற்சிக்கும் நிலையில், ஒரு நாளைக்கு 14 முதல் 16 மணி நேரம் வெளிச்சம் தேவைப்படும். இது தவிர, செயற்கை ஒளி விளக்குகளைப் பயன்படுத்தி செடி வளர்க்கும்போது, அவற்றுக்கு சொட்டு நீர் அல்லது நேரடியாக பூந்தொட்டிக்கு மட்டும் நீர் செல்லும் முறைகளைப் பின்பற்றலாம். இவை, செடிக்கு ஊற்றும் நீரால் ஒளி விளக்குகளில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவும்.