பெண்கள் நீச்சல் பயிற்சியாளர் ஆகலாம் - ஷீஜா


தினத்தந்தி 14 Aug 2022 7:00 AM IST (Updated: 14 Aug 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் அதிக அளவில் நீச்சல் கற்றுக் கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். 7 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளால் தான் நன்றாக நீச்சல் கற்றுக் கொள்ள இயலும்.

"பெண்கள், பரபரப்பான வேலை மற்றும் குடும்ப பொறுப்புகளில் இருந்து சற்றே விலகி புத்துணர்ச்சி பெறுவதற்கு நீச்சல் சிறந்த வழி. இது எளிமையான ஏரோபிக் பயிற்சி ஆகும். நீச்சல் பயிற்சியால் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு கரைந்து, தசைகள் வலிமை பெறும். மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு நீச்சல் தீர்வாக அமையும்" என நீச்சல் பயிற்சியின் பயன்களை பட்டியலிடுகிறார் பயிற்சியாளர் ஷீஜா.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நீச்சல் சொல்லிக்கொடுத்து வரும் இவர், கர்ப்பக் காலம் மற்றும் மாதவிடாய் காலங்களில் நீச்சல் செய்யலாமா? பெண்களுக்கு ஏற்ற நீச்சல் டெக்னிக்குகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

"எனது சொந்த ஊர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம். கணவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். சென்னையில் தொழில் செய்து வந்தார். அதனால் குடும்பத்தோடு சென்னையில் குடியேறினோம். எங்களுக்கு மகனும், மகளும் இருக்கின்றனர். அவர்களை சிறுவயதில், பொழுதுபோக்காக நீச்சல் குளத்துக்கு அழைத்துச் செல்வோம். இருவரும் ஆர்வத்துடன் நீந்துவார்கள். நானும் அவர்களுடன் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவேன்.

பின்பு, பிள்ளைகள் இருவரும் முறையாக நீச்சல் கற்றுக் கொண்டு, போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார்கள். அவ்வாறு போட்டிகளில் கலந்துகொள்ள செல்லும்போது, நானும் அவர்களுடன் சென்று அனைத்து வகையான நீச்சல் குளங்களிலும் பயிற்சி செய்திருக்கிறேன்.

கடந்த 18 வருடங்களாக நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எனது மகன் தற்போது போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். மகள் தேசிய மற்றும் சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற்று வருகிறார். மகன் தொடங்கிய நீச்சல் பயிற்சி நிறுவனத்தில், அவருடைய பயிற்சியாளரிடம் முறையாக பயிற்சி பெற்று, கடந்த 5 வருடங்களாக நீச்சல் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறேன்.

பெண் நீச்சல் பயிற்சியாளர்கள் தமிழகத்தில் குறைவு. அதன் காரணமாக, கேரளாவில் இருந்து அதிக அளவில் வரவழைக்கப்படுகிறார்கள். குழந்தைகள், குடும்பச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பெண்கள் நீச்சல் துறையை தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கின்றனர். பெண் நீச்சல் பயிற்சியாளர்

களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

5 வயது குழந்தை முதல் 70 வயது பெண்கள் வரை நீச்சல் பயில்வதற்காக வருகின்றனர். அனைத்து நோய்களுக்குமான சிறந்த மருந்து நீச்சல். அதனால்தான் பல மருத்துவர்கள் நீச்சல் பயிற்சியைப் பரிந்துரைக்கிறார்கள். முதுகு வலி, மூட்டு வலி, ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனை பெற்று நீச்சல் பயிற்சியில் ஈடுபடலாம். அனைத்து வயதினரும் நீச்சல் பழகலாம். மூட்டு வலி உள்ள வயதானவர்கள், படிகளில் ஏறுவதற்கு சிரமப்படுவார்கள். ஆனால், நீச்சல் பயிற்சி செய்ய ஆரம்பித்த சில நாட்களிலேயே வலியின்றி ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருப்பதாக கூறுகின்றனர்.

நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவத்தை இன்னமும் பலர் உணரவில்லை. அதனால் தான் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்கள் குறித்த செய்திகளை தொடர்ந்து கேள்விப்படுகிறோம்" எனும் ஷீஜாவிடம், நீச்சல் குளங்களில் தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? எனக் கேட்டோம்.

"நீச்சல் குளங்களில் தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. நீரில் குளோரின் கலப்பதால் அனைத்து கிருமிகளும் இறந்துவிடும். ஆனால், தொடுதல் மூலம் தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளது.

கர்ப்பிணி பெண்கள் ஏற்கனவே நீச்சல் தெரிந்திருந்தால் மட்டும் பயிற்சி செய்ய வேண்டும். புதிதாக பழக நினைக்கும் கர்ப்பிணிகள் நீரில் இறங்க பயப்படுவது மற்றும் அதிர்ச்சியாகும் வாய்ப்புகள் உள்ளதால், குழந்தை பிறந்த பின்னர் நீச்சல் பழகலாம். மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் நீச்சல் பயிற்சி செய்யலாம். அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

குழந்தைகள் அதிக அளவில் நீச்சல் கற்றுக் கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். 7 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளால் தான் நன்றாக நீச்சல் கற்றுக் கொள்ள இயலும். வெளிநாடுகளில் வீடியோக்களில் பார்த்துவிட்டு 2 முதல் 4 வயது குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்குமாறு கேட்கிறார்கள். அந்த வயது குழந்தைகள் கற்றுக் கொள்ள கூடுதல் நேரம் தேவைப்படும். ஆனால் பெற்றோர்களுக்கு அது புரிவதில்லை.

4 வயது குழந்தைகளுக்கு நாம் சொல்லி கொடுக்கும் நுட்பங்கள் உடனடியாக புரியாது. ஒரு ஸ்ட்ரோக் கற்றுக் கொடுக்க வெளிநாடுகளில் 6 மாதங்கள் பயிற்சி கொடுப்பார்கள். அவ்வாறு நீண்ட நாட்கள் பயிற்சி வழங்கிதான், வெளிநாடுகளில் வீடியோக்கள் வெளியிடுகிறார்கள் என்பதை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" எனும் ஷீஜா, நீச்சலின் நுணுக்கங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

பிரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பிரஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் பட்டர்பிளை என நீச்சலில் மொத்தம் 4 ஸ்ட்ரோக்குகள் உள்ளது. நேராக நீந்துவது பிரீ ஸ்டைல், பின்னாடி திரும்பியவாறு நீந்துவது பேக் ஸ்ட்ரோக், தவளை போல் நீந்துவது பிரஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் கையும், காலும் ஒரே மாதிரி தூக்கி நீந்துவது பட்டர்பிளை ஸ்டைல் ஆகும். இதில் கடினமானது பட்டர்பிளை முறையாகும். தவளை போல் நீந்துவது மெதுவாக செல்வதற்கு உதவும். ஆபத்தான காலங்களில் முதல் மூன்று ஸ்ட்ரோக்குகள் பயன்படும்" என்கிறார் ஷீஜா.


Next Story