மக்களுக்காக தொண்டாற்றும் மதுராந்தகி
ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கை நிறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து நன்றாக வாழ முயற்சி செய்யுங்கள். பெண்கள், அழகின் அடையாளம் என்பதை மாற்றி, அறிவின் பிறப்பிடம் எனும் நிலையை அடைவதற்கு கல்வியை முழுமையாகக் கற்று சாதனைகள் படைக்க முற்படுங்கள்.
மலைவாழ் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்குவது, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்கு தேவைப்படும் பொருட்களை அளிப்பது, கைம்பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிப்பது, அவர்கள் கணினி சார்ந்த பயிற்சிகளை பெறுவதற்கு கட்டணம் செலுத்துவது என மக்களுக்கான சேவை செய்வதில் மனநிறைவு கண்டு வருகிறார் மதுராந்தகி சோழன் என்ற அபிராமி.
கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் வசிக்கும் மதுராந்தகி, தன்னம்பிக்கை பேச்சாளராகவும், தொழில் முனைவோராகவும் செயல்பட்டு வருகிறார். அவரது பேட்டி.
மலைவாழ் மக்களுக்கு உதவுவது பற்றி சொல்லுங்கள்?
மலைப் பகுதிகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வேன். அவ்வாறு சென்றபோது ஒருநாள் அங்கு வாழும் மலைவாழ் மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில்தான், தனியார் அறக்கட்டளையின் நிறுவனர் முருகன், மலைவாழ் மக்கள் சார்ந்த ஒரு நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். அன்று முதல் அவரது அறக்கட்டளையுடன் இணைந்து மலைவாழ் மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன்.
தன்னம்பிக்கை பேச்சு மூலமாக பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பெண்கள் முதலில் தங்களை தாங்களே சில கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டும். அவற்றில் முதலாவது என்னவென்றால், 'பிறந்ததற்கு அடையாளமாக இந்த உலகில் நான் விட்டுச் செல்ல போவது, சோதனைத் தழும்புகளையா? அல்லது சாதனை மைல் கற்களையா? பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தை நான் எவ்வாறு அமைத்துக்கொள்ளப் போகிறேன்? என்று உங்களுக்குள்ளேயே கேளுங்கள்.
ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கை நிறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து நன்றாக வாழ முயற்சி செய்யுங்கள். பெண்கள், அழகின் அடையாளம் என்பதை மாற்றி, அறிவின் பிறப்பிடம் எனும் நிலையை அடைவதற்கு கல்வியை முழுமையாகக் கற்று சாதனைகள் படைக்க முற்படுங்கள்.
நீங்கள் மேற்கொண்டு வரும் ஆர்கானிக் சானிட்டரி நாப்கின் தொழில் பற்றி சொல்லுங்கள்?
பெண்கள் தங்கள் வாழ்நாளில் சுமார் 1,800 மாதவிடாய் நாட்களை எதிர்கொள்கின்றனர். பலரும் அந்த நாட்களை கடப்பதற்கு சிரமப்படுகின்றனர். அந்த சமயங்களில் அவர்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, உடலுக்கு தீங்கிழைக்காத மருத்துவ குணம் கொண்ட ஆர்கானிக் சானிட்டரி நாப்கின்களை தயாரித்தேன். இப்போது அதை சந்தைப்படுத்தி வருகிறேன்.
கைம்பெண்களுக்கு நீங்கள் செய்யும் சேவைகள் என்ன?
நானும், என்னுடைய தோழிகளும் சேர்ந்து கைம்பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவ எண்ணினோம். அதன் தொடர்ச்சியாக சில கைம்பெண்களுக்கு இலவச தையல் இயந்திரமும், கணினி பயிற்சிக்கான கட்டணத்தையும் வழங்கி வந்தோம். கொரோனா காலகட்டத்தில் இதன் எண்ணிக்கை குறைந்தது. இப்போது மீண்டும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறோம்.