தன்னம்பிக்கையால் வாழ்கிறேன் - மும்தாஜ்


தன்னம்பிக்கையால் வாழ்கிறேன் - மும்தாஜ்
x
தினத்தந்தி 22 Oct 2023 7:00 AM IST (Updated: 22 Oct 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

பல மாநிலங்களில் இருப்பது போன்ற, பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களில் இருக்கும் ‘தலசீமியா குறைபாடு’ உள்ள குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பு தமிழ்நாட்டில் இல்லை. அதை உருவாக்கி அவர்களுக்காக உழைக்க முயன்று வருகிறேன்.

திருப்பத்தூர், ரெட்டைமலை சீனிவாசன் பேட்டையில் வசிக்கும் மும்தாஜ் சூர்யா 'தலசீமியா' என்ற மரபுவழி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். பல்வேறு வலிகளைக் கடந்து தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார். தன்னைப்போல 'தலசீமியா' குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக உழைத்து வருகிறார். அவரது பேட்டி…

"என்னுடைய சிறு வயதில் எப்போதும் சோர்வுடன் காணப்பட்டேன். யாரிடமும் பேச மாட்டேன். மிகவும் மெதுவாகவே நடப்பேன். ஓடுவது என்பதே எனக்கு தெரியாது. இதைப் பார்த்து கவலை அடைந்த என்னுடைய பெற்றோர் மருத்துவர்களிடம் என்னை அழைத்துச் சென்றனர். அப்போதுதான் எனக்கு 'தலசீமியா மேஜர்' என்ற மரபுவழி குறைபாடு இருப்பது தெரிய வந்தது. சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர் என்னை பரிசோதித்துவிட்டு 'பதினைந்து வயது வரைதான் நான் உயிரோடு இருக்க வாய்ப்பு உள்ளது' என்று கூறினார். அந்த செய்தி என்னுடைய பெற்றோரின் மனதில் இடியாக இறங்கியது.

ஆனாலும், என்னுடைய அப்பா மன உறுதியோடு இருந்தார். நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளால் என்னையும், என்னுடைய அம்மாவையும் தேற்றினார். பாச மகளை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று என்னுடைய பெற்றோர் முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள்.

அப்போதுதான் ஹோமியோபதி மருத்துவராக இருந்த என்னுடைய சித்தப்பா வெங்கட்ராமன் மற்றும் அவரது நண்பர் மங்களூரூவைச் சேர்ந்த பேராசிரியர் மருத்துவர் ஜோசப் ஆகியோர் என்னை பரிசோதித்தனர். அவர்கள் பரிந்துரை செய்த மருந்துகளை இன்று வரை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறேன். ஒவ்வொரு மாதமும் இரண்டு யூனிட் புதிய ரத்தம் எனது உடலுக்குள் செலுத்தப்பட்டு வருகிறது. அப்பா, சகோதரி, தோழிகள், உறவினர்கள் மற்றும் மனிதநேயமுள்ள பலரும் எனக்கு மாதம்தோறும் 'ரத்ததானம்' செய்து வருகிறார்கள். இதனால்தான் இன்று வரை நான் உயிரோடு இருக்கிறேன்.

புதுடெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் அவ்வப்போது நடைபெறும் சர்வதேச தலசீமியா மாநாடுகளுக்கும் என் பெற்றோர் என்னை அழைத்து சென்று வருகிறார்கள்.

உங்களுக்கு ஆத்ம திருப்தி தந்த விஷயங்கள் என்ன?

சட்டப்படிப்பு படித்து வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதை என்னுடைய லட்சியமாக கொண்டு இருந்தேன். அதை நிறைவேற்றி இருக்கிறேன். 2011-ம் ஆண்டு நிறைய பயணங்கள் செய்து புதுப்புது அனுபவங்கள் பெற்றேன். மதுரையில் உள்ள, தலசீமியா குழந்தைகளுக்கு சேவை செய்யும் அமைப்பிற்கு சென்று அந்த குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு உற்சாகம் அளித்து விட்டு திரும்பினேன்.

தலசீமியா பாதிப்பு உள்ள குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று தன்னம்பிக்கை சொற்பொழிவுகள் ஆற்றி வருவதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?

பல மாநிலங்களில் இருப்பது போன்ற, பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களில் இருக்கும் 'தலசீமியா குறைபாடு' உள்ள குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பு தமிழ்நாட்டில் இல்லை. அதை உருவாக்கி அவர்களுக்காக உழைக்க முயன்று வருகிறேன்.


Next Story