வாழ்க்கை சொல்லும் செய்தியை கேளுங்கள் - வாணி பிரதீப்


வாழ்க்கை சொல்லும் செய்தியை கேளுங்கள் - வாணி பிரதீப்
x
தினத்தந்தி 13 Aug 2023 7:00 AM IST (Updated: 13 Aug 2023 7:01 AM IST)
t-max-icont-min-icon

நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ, வாழ்க்கை ஏதாவது ஒரு செய்தியை சொல்லிக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். இதை சரியான விதத்தில் கற்றுக்கொண்டு, கடைப்பிடித்தால் அனைத்து பெண்களும் வாழ்க்கையில் உயரலாம்

சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகிறார் வாணி பிரதீப். உலக அமைதிக்கான இவரது கவிதைகள், கனடா இன்டர்நேஷனல் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த நாட்டிலும், கொலம்பியா மற்றும் பிரிட்டிஷ் பல்கலைக்கழக அரங்குகளிலும் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. டொரான்டோவில் ஒரு தனியார் பதிப்பகம் சார்பில் 'இலக்கிய சர்வதேச விருது', சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் 'மாணவ அரசி' விருது போன்ற 10-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற இவர் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். பெண் தொழில்முனைவோருக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி வரும் அவருடன் ஒரு சந்திப்பு.

பெண் தொழில்முனைவோருக்கு நீங்கள் கொடுக்கும் பயிற்சிகள் குறித்து சொல்லுங்கள்?

பெண்கள் பல செயல்களை ஒரே நேரத்தில் செய்யும் திறமை கொண்டவர்கள். வீட்டு நிர்வாகம், குடும்பத்தினரை அரவணைத்து செல்வது, தோல்வி ஏற்படும் சமயம் துவண்டு போகாமல் திட்டமிடுவது, பொறுமை, நம்பிக்கை ஆகியவற்றை சரியான விதத்தில் கடைப்பிடிப்பது வாழ்வில் வெற்றியை நிலைநிறுத்தும். இதை அடிப்படையாக வைத்து பெண் தொழில் முனைவோருக்கு நேருக்கு நேர் பேசுதல், அவர்களை பற்றி மதிப்பீடு செய்தல், சவால்களை சமாளித்தல், தொழில் சார்ந்த தடைகள் ஏற்படும்போது அதைக் கடந்து செல்லுதல், எந்த செயலையும் விரும்பி மேற்கொள்ளுதல் போன்ற பயிற்சிகளை வழங்குகிறேன். இந்த பயிற்சியின் மூலமாக வீட்டில் இருந்தபடியே, பெண்கள் சுயதொழில் தொடங்கி வெற்றிகரமான தொழில் வல்லுநர்களாக உருவாகி வருகின்றனர்.

பெண்கள் வாழ்க்கையில் உயர நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?

பல பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் எதிர்மறையான செயல்களுக்கு மற்றவர் மீது பழி போடுகிறார்கள். இன்னும் சிலர் 'நல்ல நேரம் வரவில்லை' என்று சொல்லி, தங்களை தாங்களே ஆறுதல்படுத்திக் கொள்கின்றனர். உலகத்திலேயே தலைசிறந்த ஆசிரியர், உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள்தான். அவை உங்களுக்கு கற்றுத்தராத பாடத்தை, மற்றவர்களால் எவ்வாறு கற்றுத்தர முடியும்? நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ, வாழ்க்கை ஏதாவது ஒரு செய்தியை சொல்லிக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். இதை சரியான விதத்தில் கற்றுக்கொண்டு, கடைப்பிடித்தால் அனைத்து பெண்களும் வாழ்க்கையில் உயரலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

உங்களுடைய கவிதை எழுதும் திறன் குறித்து சொல்லுங்கள்?

ஷேக்ஸ்பியரின் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட நான், தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு புதுக்கவிதைகள் எழுதுகிறேன். மனிதனை இயற்கையோடு ஒப்பிட்டு எழுதுவதால் என்னுடைய கவிதைகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது. என்னுடைய முதல் கவிதையான 'மதர்' சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றுத்தந்தது. கவிதைகள், படிப்பவர்களுக்கு அறிவார்ந்த அனுபவத்தை அளிப்பதோடு மட்டுமில்லாமல், உணர்ச்சியை தூண்டுவதாகவும் அமைய வேண்டும் என்பது எனது கருத்தாகும்.


Next Story