படைப்பாளிகளை ஊக்குவிக்கும் லட்சுமி பிரியா


தினத்தந்தி 10 July 2022 7:00 AM IST (Updated: 10 July 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

எனக்குத் தமிழ் மீது ஆர்வம் உண்டு. அம்மா மும்பையில் உள்ள பள்ளியில் பணியாற்றியதால், எனது இளமைக் காலத்தை அங்கு கழிக்க வேண்டி இருந்தது. ஆனாலும், வீட்டில் தமிழில் தான் பேசுவோம். பாரதியார் கவிதை மூலம் வாசிப்புக்கு அம்மா வழி காட்டினார். அதனால் தமிழ் மீது எனக்கு ஆர்வம் உண்டானது.

"ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புத்தகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புத்தகங்கள், கற்பனை உலகத்தை அறிமுகப்படுத்தி, வெளி உலகத்தைப் பற்றிய அறிவை வழங்கி, வாசிப்பு, பேசும் திறன்களை மேம்படுத்தி, புத்திசாலித்தனத்தை வளர்த்து, மனிதனை முழுமையாக்குகின்றன.

நமது அறிவின் எல்லைகளை விரிவுபடுத்த உதவுவ தோடு மட்டுமில்லாமல், நம்மைச் சுற்றியுள்ள உலகத் துடன் இணைக்கும் கதவுகளாகவும் புத்தகங்கள் செயல்படுகின்றன. புத்தகங்கள் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது. அவை உங்களுக்கு வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றன. வாழ்க்கையின் ஒவ் வொரு சிறிய விஷயத்தையும் கற்பிக்கின்றன" என்று புத்தகங்களின் பெருமை பேசுகிறார் லட்சுமி பிரியா.

கலை இலக்கிய அமைப்பு ஒன்றைத் தொடங்கி, இரண்டு ஆண்டுகளுக்குள் 300 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அவற்றை எழுதியவர்களில் பலரும் வளரும், வளரத் துடிக்கும் எழுத்தாளர்கள். இதில் குழந்தை எழுத்தாளர்களும் உண்டு.

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த லட்சுமி பிரியா, ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சர்வதேச தரத்திலான புத்தக வடிவமைப்பாளர், உலக சினிமா, ஓவியம் என பல துறைகளில் ஈடுபாடு உள்ளவர்.

இனி அவருடன் பேசுவோம்.

பதிப்புத்துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம் என்ன?

எனக்குத் தமிழ் மீது ஆர்வம் உண்டு. அம்மா மும்பையில் உள்ள பள்ளியில் பணியாற்றியதால், எனது இளமைக் காலத்தை அங்கு கழிக்க வேண்டி இருந்தது. ஆனாலும், வீட்டில் தமிழில் தான் பேசுவோம். பாரதியார் கவிதை மூலம் வாசிப்புக்கு அம்மா வழி காட்டினார். அதனால் தமிழ் மீது எனக்கு ஆர்வம் உண்டானது.

முதன் முதலில் ஆங்கிலத்தில் 'பாரம்பரியத்தை தேடி' என்ற கதை எழுதினேன். அதைப் பதிப்பிக்க பதிப்பாளரைத் தேடி மிகவும் சிரமப்பட்டேன்.

படைப்புகளை எழுதுவதைவிட, அதை வெளியிடுவது பெரிய போராட்டம் என்பதை உணர்ந்தேன். இந்த நிலை மற்றவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக பதிப்புத் தொழிலைத் தொடங்கினேன்.

கல்லூரிப் படிப்பை முடித்ததும், வெளிநாட்டில் நல்ல வேலை கிடைத்தது. கொரோனா பரவல் காரணமாக, வெளிநாடு செல்லும் முடிவை மாற்றிக் கொண்டு இங்கேயே தங்கி விட்டேன்.

நான் புத்தகங்கள் வடிவமைப்பாளராகவும் இருக்கிறேன். அதனால் எனக்குப் போதுமான வருமானம் வருகிறது. படைப்புகளை வெளியிட முடியாத படைப்பாளிகளுக்கு உதவிட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறேன். அதில் கிடைக்கும் ஆத்மதிருப்தி தனித்துவமானது.

படைப்புகளை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

முதல் முறையாக எழுதும் படைப்பாளிகளுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் அதேநேரம், பிரபலமானவர்களும் அணுகுகிறார்கள். அவர்களின் படைப்புகளை, வாசகர் குழுக்களை வாசிக்க வைத்து, கருத்தறிந்து, அதன் பின்னர்தான் புத்தகமாக வெளியிடுவோம். இவ்வாறு வாசிப்பதற்கு தன்னார்வ வாசகர் குழுக்கள் உள்ளன.

பொதுவெளியில் படைப்புகளை வெளியிட்டு வாசித்து வருவதால், அதன் தரத்திற்கு உத்தரவாதம் கிடைக் கிறது. மேலும், இறுதியாக வாசித்து முடிவெடுப்பதற்கு அனுபவமுள்ள குழு உள்ளது. அனைவருமே தன்னார்வத்தோடு செயல்படுகிறார்கள். இவ்வாறு புத்தகங்களை பல மாதங்கள் ஆய்வு செய்து வெளியிடுகிறோம்.

எப்படிப்பட்ட புத்தகங்களை வெளியிடுகிறீர்கள்?

பெண்ணியம் பேசும் கதைகள், குழந்தைகளுக்கான கதைகள், திகில் கதைகள் போன்ற புத்தகங்களை வெளியிடுகிறோம். உலக நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எழுதிய கவிதைகளை 'சங்கே முழங்கு' என்ற நூலாக வெளியிட்டுள்ளோம். 70 வயது மூதாட்டி, கீதா கண்ணன் எழுதிய புத்தகத்தைக்கூட வெளியிட்டிருக்கிறோம். மலேசியாவில் உள்ள கல்ச்சுரல் லிட்ரேச்சர் ரிசர்ச் அமைப்பின் சி.எல்.ஆர் விருதுகளை, எங்கள் எழுத்தாளர்கள் பலர் பெற்றுள்ளார்கள்.

குழந்தைகளுக்கு எப்படி வாய்ப்பு கொடுக்கிறீர்கள்?

குழந்தைகளைக் கதை எழுதித்தரச் சொல்லி, அதை மற்ற குழந்தைகள் குழுவிடம் கொடுத்து வாசிக்கச் செய்து, அவர்களுக்குப் பிடித்திருந்தால் வெளியிடுகிறோம். குழந்தைகளின் எழுத்துக்களை மேம்படுத்தும் வழிகள் இருந்தாலும் செய்கிறோம். கற்க ஆர்வமிருந்தால் பயிற்சிப் பட்டறையும் நடத்துகிறோம்.

புத்தகங்களை மொழியாக்கம் செய்கிறீர்களா?

இப்போது உலகம் சுருங்கிவிட்டது. ஆன்லைன் விற்பனை தளங்கள் மூலம், புத்தகங்கள் உலக நாடுகளுக்குச் செல்கின்றன. இன்றைக்கு உள்ள தகவல் தொடர்பினால் இது சாத்தியமாகிறது. பதிப்பிக்கும் படைப்புகளில் சிலவற்றை, ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து உலக அளவில் கொண்டு போய்ச் சேர்க்கும் பணியையும் செய்கிறோம்.

பவா செல்லத்துரை எழுதிய 'பங்குகறியும் பின்னிரவுகளும்', கார்த்திகைச் செல்வனின் 'மரநிற பட்டாம் பூச்சிகள்' போன்ற நூல்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து இருக்கிறேன்.

ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமி எழுதிய 'ஸ்புட்னிக் ஸ்வீட் ஹார்ட்' என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறேன்.

இப்போது 'ஹக் யுவர்செல்ப்' என்ற புத்தகத்தை குரூப் பண்டிங் மூலம், தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் உருவாக்கும் முயற்சியில் இருக்கிறோம். இது உலகளாவிய 30 பெண் எழுத்

தாளர்கள் எழுதும் 'உடல் தோற்றக் கேலி' என்கிற அவலம் பற்றியது. இப்படைப்பு மூலம் ஆண்-பெண் சமத்துவமற்ற போக்கை மாற்றி அமைக்க முனைகிறோம்.

இந்த எண்ணம் எப்படி வந்தது?

மனதால் ஒரு மனிதரை மதிப்பிடாமல், உடலால் மதிப்பிடுகிற மேலோட்டமான பார்வையே பாலியல் சமத்துவமற்ற போக்கிற்கு முக்கியமான காரணம். இந்த மனநிலை ஆண்-பெண் இருவரிடமும் இருக்கவே செய்கிறது.

ஒருவரை உடம்பை வைத்து அளவிடாமல், மனதை வைத்து அளவிட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே இந்த முயற்சி. பாலியல் சமத்துவத்தை நிலைநாட்ட, முன்னெடுக்கும் தொடக்கமாக இது இருக்கும்.


Next Story