தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடக்கம்


தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடக்கம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 5 May 2023 12:24 PM IST (Updated: 5 May 2023 1:41 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் 431 கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு 1,48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

http://tneaonline.org, http://tndte.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 40-க்கும் அதிகமான இலவச சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ரேண்டம் எண் ஜூன் 7-ல் வெளியாகும் நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 12-ம் தேதி வெளியிடப்படுகிறது.

இதையடுத்து முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ந்தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ந்தேதி முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி, கால அட்டவணையை மாணவர்கள் இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story