தண்டுவட ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா


தினத்தந்தி 17 July 2022 7:00 AM IST (Updated: 17 July 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

உட்காருவது, நடப்பது, நிற்பது, பொருட்களை தூக்குவது போன்ற செயல்களின்போது நமது தோரணை சீரற்று இருப்பதால், தண்டுவடத்தில் பாதிப்புகள் ஏற்படும். இவற்றை கீழ்கண்ட ஆசனங்களை செய்வதன் மூலம் குணப்படுத்த முடியும். அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

டலின் முக்கியமான உறுப்பு தண்டுவடம். உடல் இயக்கத்துக்கு அடிப்படையான 33 நரம்புகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மூளை மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு இடையே உள்ள தகவல் பரிமாற்றத்துக்கு தண்டுவடம் அடிப்படையானது. உட்காருவது, நடப்பது, நிற்பது, பொருட்களை தூக்குவது போன்ற செயல்களின்போது நமது தோரணை சீரற்று இருப்பதால், தண்டுவடத்தில் பாதிப்புகள் ஏற்படும். இவற்றை கீழ்கண்ட ஆசனங்களை செய்வதன் மூலம் குணப்படுத்த முடியும். அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

ஆஞ்சநேயாசனம்:

விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். வலது காலை முன் நோக்கி நகர்த்தி தரையில் பாதம் பதியும்படி ஊன்றிக்கொள்ளவும். பின்பு இடது காலை பின்னோக்கி கொண்டு சென்று, முழங்கால் தரையில் படுமாறு கிடைமட்டமாக வைக்கவும். பின்னர் இரண்டு கைகளையும் கூப்பி தலைக்கு மேல் நேராக தூக்கவும். இந்த நிலையில் முதுகுப் பகுதியை பின் நோக்கி வளைக்க வேண்டும். பிறகு ஆரம்ப நிலைக்கு வரலாம். இதைப் போன்று மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும்.

பலன்கள்: பெண்களுக்கு கை மற்றும் இடுப்பு பகுதியில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். வாகனத்தில் பயணித்தல் மற்றும் பணியிடத்தில் கணினி முன்பு நீண்ட நேரம் வேலை பார்க்கும்போது ஏற்படும் தண்டுவட பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

வீரபத்ர ஆசனம்:

முதலில் நேராக நின்று நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். பின்னர் கால்களை 2 முதல் 3 அடி வரை நகர்த்திக் கொள்ளவும். பின்பு வலது புறம் உடம்பை திருப்பி வலது பக்க முழங்கால் பகுதியை சிறிது மடக்கி இடப்புற காலை சாய்வாக நீட்ட வேண்டும். வலது கையை முன்பும், இடது கையை பின்பும் என பக்கவாட்டின் இருபுறத்திலும் 360 டிகிரி கோணத்தில் நீட்ட வேண்டும். இந்த நிலையில் மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியிட வேண்டும். பின்னர் ஆரம்ப நிலைக்கு வரலாம். அதேபோன்று அடுத்த காலிலும் செய்ய வேண்டும்.

பலன்கள்: சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும். இழந்த சக்தியை மீட்டெடுக்கும். ரத்த அழுத்தம் மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

மர்ஜரி ஆசனம்:

இந்த ஆசனத்தை செய்வதற்கு முழங்காலிட்டு, கைகளைக் கீழே வைத்து, நான்கு கால்களில் நடப்பதுபோல வைத்திருக்க வேண்டும். மூச்சை உள்ளே இழுக்கும் போது கழுத்தை வளைத்து, மேலே பார்க்க வேண்டும். மூச்சை வெளியிடும் போது கீழ் நோக்கிப் பார்த்து முதுகை வளைக்க வேண்டும்.

பலன்கள்: வாகனம் ஓட்டும் போது ஏற்படும் முதுகு வலி, கழுத்து வலி பிரச்சினை நீங்கும்.


Next Story