பாரம்பரிய சமையல் அறை பழக்கங்களும், நன்மைகளும்
சமையலுக்குத் தேவையான தண்ணீர் பிடித்து வைப்பதற்கு பலவகை உலோகங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்தினாலும், குடிப்பதற்கான தண்ணீரை சேமித்து வைப்பதற்கு மண்பானைகளையே பெரும்பாலும் உபயோகப்படுத்தினார்கள்.
பாரம்பரியமாக நமது முன்னோர்கள் மேற்கொண்ட பழக்க வழக்கங்கள், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் இருந்தன. தற்போதைய சூழ்நிலையில் அவற்றை கடைப்பிடிப்பது சற்றே கடினமானதாக இருந்தாலும், அவற்றின் பலன்கள் அளவிட முடியாதவை. அந்தவகையில், நமது பாட்டிமார்கள் பின்பற்றிய சில சமையலறை பழக்கங்களைத் தெரிந்துகொள்வோம்.
அந்தக் காலங்களில் சைவம் மற்றும் அசைவம் சமைப்பதற்கு தனித்தனியாக பாத்திரங்கள் வைத்திருந்தார்கள். வெட்டுவதற்கு பயன்படுத்தும் அரிவாள்மனை, சுத்தம் செய்வதற்கு உதவும் சட்டி முதல் சமைத்து பரிமாறுவதற்கான பாத்திரங்கள் வரை எல்லாமே சைவம், அசைவம் என தனித்தனியாக இருக்கும். இதனால் நோய் பரப்பும் நுண்ணுயிர்கள் உற்பத்தி ஆவது குறைவாக இருந்தது.
சமையல் அறையில் வாழை இலை மற்றும் மந்தார இலைகள் எப்போதும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டிருக்கும். இதனால் விருந்தினர்கள் மற்றும் வெளியாட்கள் சாப்பிட வரும்போது, அவர்களுக்கு உணவு பரிமாறுவது எளிதாக இருந்தது. விருந்தினர்களை உபசரிப்பது என்பது இதன் முக்கியமான நோக்க
மாக கருதப்பட்டாலும், நோய்த் தொற்றை தடுப்பது உள்ளார்ந்த நோக்கமாக இருந்தது.
சமையலுக்குத் தேவையான தண்ணீர் பிடித்து வைப்பதற்கு பலவகை உலோகங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்தினாலும், குடிப்பதற்கான தண்ணீரை சேமித்து வைப்பதற்கு மண்பானைகளையே பெரும்பாலும் உபயோகப்படுத்தினார்கள்.
மண்பானையில் இருக்கும் தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக்கும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கக்கூடியது.
அனைத்து சமையல் அறைகளிலும் அஞ்சறைப்பெட்டி இடம்பெற்றது. இதில் இடம்பெற்றிருந்த மசாலாப் பொருட்கள், உணவாக மட்டுமின்றி தக்க சமயத்தில் மருந்தாகவும் பயன்பட்டன.
அரைத்தல், பொடித்தல் போன்ற பயன்பாடுகளுக்கு அம்மி, ஆட்டுஉரல் போன்றவை உபயோகப்படுத்தப்பட்டன. அவை சமையலுக்கு மட்டுமில்லாமல், பெண்களின் உடற்பயிற்சிக்கும் மறைமுகமாக உதவி செய்தன.
குழந்தைகளுக்கான சத்துள்ள தின்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு பித்தளை மற்றும் மண்பானைகளில் சேமிக்கப்பட்டு மஞ்சள் தோய்த்த பருத்தித் துணியால் மூடப்பட்டிருக்கும். இதன் மூலம் கிருமிகள் அவற்றை அண்டாமல் பாதுகாப்பாக இருக்கும். ஓடி விளையாடி பசியோடு வரும் குழந்தைகள், தேவையற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதைத் தவிர்த்து சத்துள்ள உணவுகளை சாப்பிட்டனர்.