தனிநபர் கடன் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை


தனிநபர் கடன் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை
x
தினத்தந்தி 31 July 2022 7:00 AM IST (Updated: 31 July 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

நீங்கள் பல்வேறு காரணங்களுக்காக கடன் பெற முற்படலாம். உங்கள் தேவையை கருத்தில் கொண்டு உங்களுக்கு வேண்டிய கடன் தொகையை திட்டமிடுங்கள். உங்களால் திரும்ப செலுத்துவதற்கு இயன்ற தொகையை, உங்கள் வருமானத்திற்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட நேரிடும்.

திடீரென்று வரும் பணத் தேவைகளுக்காக, வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களில் தனி நபர் கடன் வாங்கி சமாளிக்க முற்படுகிறோம். சில நேரங்களில் கடன் பெறுவதிலும், திரும்ப செலுத்துவதிலும் பலர் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். இதனை தவிர்க்க சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். அவை இங்கே….

சிறந்த நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள்:

கடன் பெறுவதற்கு நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனத்தை தேர்வுசெய்வது முக்கியமானது. தற்போது பல நிறுவனங்கள் விரைவாகவும், வசதிக்கேற்றவாறும் தனி நபர் கடன் வழங்குகிறார்கள். நீங்கள் யாரிடம் கடன் வாங்கினாலும் அவர்களின் மதிப்புரைகளையும், ஏற்கனவே அவர்களிடம் கடன் பெற்றவர்களின் கருத்துக்களையும் கேட்டு நம்பகத்தன்மையை ஆராய்ந்த பின்னர் அணுகுங்கள்.

தவணைகளை தவறாமல் செலுத்துங்கள்:

நீங்கள் கடனை திருப்பி செலுத்தும் முறையை வைத்தே, உங்கள் கடன் பெறும் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. தவணைகளை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் கிரெடிட் ஸ்கோர், சிபில் ஸ்கோர் போன்றவை சரியான அளவில் பராமரிக்கப்படும். குறைந்த ஸ்கோர் இருக்கும் பட்சத்தில், உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். நிலுவை தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம், நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்க முடியும்.

கடன் தொகையை தீர்மானியுங்கள்:

நீங்கள் பல்வேறு காரணங்களுக்காக கடன் பெற முற்படலாம். உங்கள் தேவையை கருத்தில் கொண்டு உங்களுக்கு வேண்டிய கடன் தொகையை திட்டமிடுங்கள். உங்களால் திரும்ப செலுத்துவதற்கு இயன்ற தொகையை, உங்கள் வருமானத்திற்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட நேரிடும்.

ஆவணங்களை சரிபாருங்கள்:

சரியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே உங்களால் கடனுக்காக விண்ணப்பிக்க முடியும். அடையாள சான்று, முகவரி ஆதாரம், வருமான ஆதாரம் போன்றவை அடிப்படை ஆவணங்கள். கூடுதல்

ஆவணங்கள் தேவைப்பட்டால் கடன் அளிக்கும் நிறுவனங்கள் உங்களிடம் தெரிவிப்பார்கள். அந்த ஆவணங்களையும் ஒப்படைத்த பின்னரே கடன் பெற முடியும்.

வட்டி விகிதங்களை ஒப்பிடுங்கள்:

பல்வேறு நிறுவனங்களின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம், சிறந்த வட்டி விகிதங்களை கண்டறிய முடியும். இது குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடனைப் பெறுவதற்கு உதவும்.

கட்டணங்களை மதிப்பிடுங்கள்:

தனி நபர் கடனுக்காக விண்ணப்பிக்கும் முன்னரே, அந்த நிறுவனங்கள் வசூலிக்கும் பல்வேறு கட்டணங்களையும் கவனியுங்கள். செயலாக்க கட்டணம், தாமதமாக செலுத்தும் கட்டணம், முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் போன்ற உங்கள் செலவுகளை மதிப்பீடு செய்யுங்கள்.

திரும்ப செலுத்தும் திட்டத்தை கவனியுங்கள்:

தனி நபர் கடனுக்காக அணுகுவதற்கு முன்னர், உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் அனைத்து நிதி சார்ந்த கடமைகளையும் கருத்தில் கொள்ளுங்கள். வருமானத்திற்கு அதிகமாக கடன் பெறுதல், உங்களால் திரும்ப செலுத்த முடியாத சூழலை உருவாக்கி விடும். தெளிவான திருப்பி செலுத்தும் திட்டத்தை வைத்திருப்பதன் மூலம் உங்கள் நிதியை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.


Next Story