மறுசுழற்சிப் பொருட்கள் தயாரிக்கும் மாமியார்-மருமகள்


மறுசுழற்சிப் பொருட்கள் தயாரிக்கும் மாமியார்-மருமகள்
x
தினத்தந்தி 2 Oct 2022 7:00 AM IST (Updated: 2 Oct 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும். அதே நேரத்தில் தனித்த தொழில்முனைவாகவும் இருக்க வேண்டும் என நினைத்தோம். எங்களுடைய முயற்சி இன்று வெற்றி பெற்றிருக்கிறது. வாடிக்கையாளர்கள், தங்கள் பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல் பிறருக்கு பரிசாக அளிக்கவும் வாங்கிச் செல்கிறார்கள்

"சுற்றுச்சூழல் மீது எங்களுக்கு இருந்த ஆர்வமும், அக்கறையும்தான் மீதமாகும் கழிவுத் துணிகளில் இருந்து, மறுசுழற்சிப் பொருட்கள் தயாரிக்கத் தூண்டியது" என்கிறார்கள் கோயம்புத்தூரைச் சேர்ந்த மாமியார்-மருமகள், சாந்தி வாசுதேவன் மற்றும் அஜிதா ராம்குமார்.

ஒருமித்த புரிதலோடு ஆக்கப்பூர்வமாக சிறுதொழில் செய்துவரும் இவர்களை சந்தித்தோம்.

"நான் பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி. திருமணத்திற்குப் பின்பு கணவர் மற்றும் இரட்டைக் குழந்தைகளுடன் கோயம்புத்தூரில் வசிக்கிறேன். கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நான் கம்ப்யூட்டர் துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இல்லத்தரசியாக மட்டும் இருக்காமல் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தேடுதல் இருந்தது.

எனது மாமியார் சாந்தி வாசுதேவன் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மீது அதிக ஆர்வமும், அக்கறையும் கொண்டவர். எங்கள் வீட்டின் கொல்லைப் பகுதியில் ஆர்கானிக் தோட்டம் ஒன்றை அமைத்து பராமரித்து வருகிறார்.

ஒருநாள் யதார்த்தமாக இருவரும் பேசிக் கொண்டு இருந்தபோது, "தையலகங்களிலும், ஆடை நிறுவனங்களிலும் மீதமாகும் துண்டுத் துணிகள் மக்காத கழிவாக மாறி, அவற்றால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது" என்று கூறினார். அப்போதுதான் 'அவற்றைப் பயனுள்ள வகையில் மறுசுழற்சி செய்தால் என்ன?' என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.

ஆடைகளைத் தைத்த பிறகு, தேவையில்லை என்று எறியப்படும் எஞ்சியுள்ள துண்டுத் துணிகளைக் கொண்டு அழகான பயன்பாட்டுப் பொருட்கள் உருவாக்க முடியும் என்று தெரிவித்தேன்" என்றார் அஜிதா.

சாந்தி வாசுதேவன் கூறும்போது, "எங்கள் இருவரின் கூட்டு முயற்சியில் உருவானதுதான், கழிவுத் துணிகளில் இருந்து மறுசுழற்சிப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம். தையலகங்களிலும், நிறுவனங்களில் இருந்தும் 'வீணான குப்பைகள்' என்று கருதப்படும் மீதமான சிறிய துண்டுத் துணிகளை சேகரிக்கிறோம். அவற்றை பிரித்து சீரமைத்த பிறகு, பல வகையான பைகள், பர்சுகள், சிறிய பைகள், ஸ்லிங் பேக்ஸ், சானிட்டரி பவுச், பயணப் பைகள், நகை வைப்பதற்கான பைகள் என பலவிதமாக தயாரிக்கிறோம்.

சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும். அதே நேரத்தில் தனித்த தொழில்முனைவாகவும் இருக்க வேண்டும் என நினைத்தோம். எங்களுடைய முயற்சி இன்று வெற்றி பெற்றிருக்கிறது. வாடிக்கையாளர்கள், தங்கள் பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல் பிறருக்கு பரிசாக அளிக்கவும் வாங்கிச் செல்கிறார்கள்" என்றார்.

"தற்போது எங்கள் பகுதியில் வசிக்கும் தையல் தெரிந்த, பொருளாதாரத்தில் நலிவடைந்த மகளிருக்கு வேலைகளின் நுணுக்கங்களைக் கற்று கொடுத்து, அவர்களிடம் தைத்து வாங்குகிறோம். அதன் மூலம் அவர்கள் வருவாய் ஈட்டுகிறார்கள். வருங்காலத்தில் மேலும் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ஆர்வத்துடன் உழைக்கிறோம்'' என்று மருமகள் அஜிதா கூறியதை, மாமியார் சாந்தியும் ஆமோதித்தார்.


Next Story