உயிர் காக்கும் தாய்ப்பால் தானம்
தாய்ப்பால் தானம் கொடுப்பவர்களிடம், தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தது போக மீதம் இருக்கும் பாலைத்தான் பெற்றுக்கொள்கிறோம். எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவின் மூலம் தானம் கொடுப்பவர்களின் வீடுகளுக்கே சென்று சேகரிக்கிறோம்.
"தாய்ப்பால் தானம் அளிப்பதன் மூலம், குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவதோடு, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. தாய்ப்பால் கிடைக்காமல் குழந்தைகள் இறக்கும் துயரம் நிகழக்கூடாது என்பதே எங்கள் இலக்கு" என்கிறார் அனிதா.
ஈரோட்டைச் சேர்ந்த இவர், தங்கள் குழுவினரோடு சேர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பெண்களிடம் தாய்ப்பால் தானம் பெற்று அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கிறார். அதன் மூலம் பல குழந்தைகள் பயன் பெற்று வருகிறார்கள். அவரது பேட்டி…
"சிறுவயதில் இருந்தே எனக்கு சமூக சேவையில் ஆர்வம் அதிகம். அதன் காரணமாக, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்று தலைமுடியை தானமாக அளித்து வந்தேன். அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகளின்போது கொண்டைக்கடலை மற்றும் பயறு வகைகளில் சுண்டல் தயாரித்து வழங்கி வந்தேன். அரசு நூலகங்களுக்கு புத்தகங்களையும் சேகரித்து தருகிறேன்.
இந்த நிலையில்தான் தாய்ப்பால் தானம் வழங்கும் 4 பெண்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பார்த்தேன். ஆரம்பத்தில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் மட்டும்தான் தாய்ப்பால் தானம் பெறப்பட்டு வந்தது.
2020-ம் ஆண்டில், நான் அந்தக் குழுவில் இணைந்த பிறகு, ஈரோடு மாவட்டம் முழுவதும் தாய்ப்பால் தானம் பெற்றுத்தந்தேன். மக்களிடம் தாய்ப்பால் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். அது நல்ல பலனைக் கொடுத்தது. பல பெண்கள் தாய்ப்பால் தானம் கொடுக்க முன் வந்தார்கள்.
தற்போது எங்கள் குழுவில் உள்ள 8 பெண்கள் மூலம், தமிழகம் முழுவதும் 3,500 பெண்களிடம் இருந்து தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ரத்த வங்கியில் ரத்தம் சேமிக்கப்படுவது போல், தாய்ப்பாலுக்கென, தாய்ப்பால் வங்கியும் உள்ளது. நாங்கள் பெறும் தாய்ப்பாலை, தமிழகம் முழுவதும் உள்ள 22 தாய்ப்பால் வங்கிகளுக்கு அனுப்புவோம். அங்கிருந்து அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
தாய்ப்பால் தானம் கொடுப்பவர்களிடம், தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தது போக மீதம் இருக்கும் பாலைத்தான் பெற்றுக்கொள்கிறோம். எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவின் மூலம் தானம் கொடுப்பவர்களின் வீடுகளுக்கே சென்று சேகரிக்கிறோம்.
குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் மற்றும் உடல் எடை குறைவான குழந்தைகளுக்கு நேரடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாததால், இது போன்ற வங்கிகளில் இருந்து பெறப்படும் தாய்ப்பால் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவதோடு, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் கணிசமாக அதிகரிக்கிறது.
எங்கள் குழுவில் உள்ள 8 பெண்களும், வேலை அல்லது சுயதொழில் செய்து கொண்டே இந்த சேவைகளில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார் அனிதா.