பிறந்த குழந்தையின் தலை சரியான வடிவம் பெற


பிறந்த குழந்தையின் தலை சரியான வடிவம் பெற
x
தினத்தந்தி 6 Nov 2022 7:00 AM IST (Updated: 6 Nov 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

பெரியவர்கள் குளிப்பாட்டும்போது குழந்தையின் தலை, கை கால்கள், மூக்கு போன்ற பகுதிகளை மென்மையாக அழுத்தியும், பிடித்தும், நீவியும் விடுவார்கள். இதனால் அந்த உறுப்புகள் சரியான வடிவம் பெறும்.

சில தலைமுறைகள் முன்புவரை கர்ப்பிணி பெண்களுக்கு வீட்டிலேயே சுகப்பிரசவம் நடந்தது. வீட்டில் இருந்த பெரியவர்களே புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, மருந்து ஊட்டுவது என அனைத்துப் பராமரிப்புப் பணிகளையும் சிறப்பாகச் செய்தார்கள். சிலர் இதற்கெனத் தாதிகளை (குழந்தை பராமரிப்பாளர்) நியமித்துப் பராமரித்தார்கள்.

கருப்பையில் வளரும் குழந்தையின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மென்மையாக இருக்கும். பிரசவத்தின் போது பிறப்புப் பாதை வழியாக சிரமப்பட்டு வெளியே வருவதால் குழந்தையின் தலைப்பகுதி நீண்டு இருக்கும். பெரியவர்கள் குளிப்பாட்டும்போது குழந்தையின் தலை, கை கால்கள், மூக்கு போன்ற பகுதிகளை மென்மையாக அழுத்தியும், பிடித்தும், நீவியும் விடுவார்கள். இதனால் அந்த உறுப்புகள் சரியான வடிவம் பெறும்.

குழந்தையைப் பாயில் படுக்க வைத்து தூங்கச் செய்வது மற்றும் விளையாடச் செய்வதன் மூலம் அதன் நீளமான தலைப்பகுதி உருண்டையான வடிவம் பெறும்.

குழந்தையை அதன் தாய் உபயோகப்படுத்திய சேலையைக் கொண்டு தூளி கட்டி அதில் படுக்க வைப்பார்கள். இது குழந்தைக்குத் தாயின் அரவணைப்பு உணர்வை கொடுப்பதோடு மட்டுமில்லாமல் தலைப்பகுதி இயல்பாக உருண்டை வடிவம் பெறுவதற்கும் உதவும்.

குழந்தையை ஒரே நிலையில் படுக்க வைக்காமல், வெவ்வேறு நிலைகளில் மாற்றிப் படுக்க வைக்கலாம். தலைப்பகுதிக்குத் துணிகளை அடுக்கி தலையணை போல அமைப்பதைத் தவிர்க்கவும்.

குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்து மருத்துவரின் ஆலோசனையுடன், குளிப்பாட்டுவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய்யை உடல் முழுவதும் தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம்.

குழந்தை நடை பழகும் வயதில் கட்டை வண்டியில் கைப்பிடித்து நடக்கும் போது, கால் தசைகளுக்கு வலிமை கிடைக்கும்.

பாயில் படுக்க மற்றும் விளையாட வைப்பது, தூளியில் தூங்க வைப்பது போன்ற முன்னோர்களின் பழக்கங்களைக் கடைப்பிடித்தால், குழந்தையின் தலைப் பகுதியை சரியான வடிவத்திற்கு கொண்டு வர முடியும்.

அதேநேரம், இயல்பிலேயே நீண்டு இருக்கும் தலைப்பகுதியை உருண்டையாக மாற்றுவதற்காக தவறான முறைகளைப் பின்பற்றக் கூடாது.

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதன் பலன்கள்

குழந்தைகளுக்கு இயற்கையான எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதால் அவர்களின் சரும ஆரோக்கியம் மேம்படும். தசை மற்றும் எலும்புகள் வலுப்பெறும். குழந்தைக்கும் அன்னைக்குமான பாசம் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தில் தொற்று மற்றும் வறட்சி ஏற்படாமல் காக்கும்.

சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய்யை உபயோகப்படுத்தினால் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பாதாம் எண்ணெய் தோல் நோய்கள் உண்டாகாமல் காக்கும். சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.


Next Story