பாரம்பரிய விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்
பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடும்போது மூளையின் எல்லா பகுதியும் சமமாக வேலை செய்யும். உதாரணத்துக்கு, ‘பல்லாங்குழி’ விளையாட்டு கணிதத் திறனை வளர்க்கும். சிறு கற்களைக் கொண்டு விளையாடும் ‘சுங்கரக்காய்’ விளையாட்டு கண் மற்றும் கைகளின் செயல்திறனை மேம்படுத்தும்.
பாரம்பரியமான விஷயங்களை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் நாள் 'உலக பாரம்பரிய தினம்' கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையில், பாரம்பரிய சிறப்புமிக்க நமது விளையாட்டுகளை அழிந்து விடாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது முக்கியமானது.
சில தலைமுறைகள் முன்பு வரை, அருகருகே உள்ள வீடுகளில் வசித்த சிறுவர்-சிறுமிகள் அனைவரும் ஒன்றாக விளையாடினர். வீட்டின் திண்ணைகளும், தெருக்களும் அவர்களின் விளையாட்டு இடங்களாக அமைந்தன. விளையாட்டு அவர்களுக்கு ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, குழு உணர்வு, விடாமுயற்சி ஆகியவற்றை கற்றுக் கொடுத்தது. உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாகவும் வளர்ந்தனர்.
தற்போதைய காலத்தில், அடுத்த வீட்டில் இருக்கும் நபர்களையே அடையாளம் தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வாழ்க்கைமுறை மாறி இருக்கிறது. குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் அளவுக்கு இடவசதியும் இல்லை. வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்தபடி மொபைல் போன் மற்றும் கணினியில் தன்னந்தனியாக விளையாடுகின்றனர்.
ஸ்மார்ட்போன் விளையாட்டுகள் குழந்தைகளின் உடலுக்கும், மனதுக்கும் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. கண் பார்வை பாதிப்பு, உடல் உழைப்பு இல்லாமை, பசியின்மை, அதீத கோவம், குணாதிசய சிக்கல்கள் என ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடும்போது மூளையின் எல்லா பகுதியும் சமமாக வேலை செய்யும். உதாரணத்துக்கு, 'பல்லாங்குழி' விளையாட்டு கணிதத் திறனை வளர்க்கும். சிறு கற்களைக் கொண்டு விளையாடும் 'சுங்கரக்காய்' விளையாட்டு கண் மற்றும் கைகளின் செயல்திறனை மேம்படுத்தும். 'கோலி குண்டு' விளையாட்டு, கண் பார்வையை கூர்மையாக்கவும், மணிக்கட்டு நரம்புகள் புத்துயிர் பெறவும் உதவும். 'உறியடி' போன்ற விளையாட்டுகள், மூளையின் செயல்பாட்டை தூண்டிவிடும்.
குழந்தைகள் கூடி விளையாடும் 'சொப்புச்சாமான்' விளையாட்டுகள் ஒற்றுமை உணர்வு, சிக்கனம், சேமிப்பு, பகிர்ந்து உண்ணுதல் போன்ற பண்புகளை அவர்களிடம் வளர்க்க உதவும். களிமண் கொண்டு சிற்பங்கள் போன்ற கலைப்படைப்புகளை தயாரிக்கையில் குழந்தைகளின் கற்பனைத்திறன் அதிகரிக்கும்.
'பாண்டி ஆட்டம்' கால்களின் செயல்திறனை மேம்படுத்தும். பம்பரம் விளையாடுகையில் நுண்திறன் மேம்படும். பச்ச குதிரை தாண்டும் விளையாட்டில் சிறந்தவர்கள் நீளம் தாண்டுதல் - உயரம் தாண்டுதலில் சாதிக்கலாம். ஆடுபுலி ஆட்டம் விளையாடுவோர், ஓட்டப் பந்தயத்தில் சிறந்து விளங்கலாம்.
ஓடி ஆடி விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகள் குழந்தைகளை மனதளவில் உற்சாகப்படுத்தும். உடல் பருமன் அடைவதைத் தடுக்கும். பசியைத் தூண்டும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஆழ்ந்து தூங்கச் செய்யும். குழுவாக இணைந்து விளையாடுகையில், நட்புணர்வு பலப்படும்.
குழந்தைகளிடம் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் அதேசமயம், சில விஷயங்களை கவனத்தில் கொள்வதும் அவசியம். மூச்சுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, 'கபடி' போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்தும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது
முக்கியம். கண்ணாமூச்சி விளையாடுகையில், குழந்தைகள் ஆபத்தான இடங்களில் ஒளிந்துகொள்வதைத் தடுக்க வேண்டும். குழந்தைகள் விளையாடும்போது யாரேனும் பெரியவர்கள் உடன் இருந்து கண்காணிப்பது நல்லது.