லாபம் தரும் ரோஜா குல்கந்து தயாரிப்பு


லாபம் தரும் ரோஜா குல்கந்து தயாரிப்பு
x
தினத்தந்தி 15 Jan 2023 7:00 AM IST (Updated: 15 Jan 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

ரோஜா குல்கந்தை 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் உட்பட அனைவரும், தினமும் காலை மற்றும் இரவில் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிடலாம்.

'ரோஜா குல்கந்து' உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்விக்கும். உடல் சூட்டால் ஏற்படும் வாய்ப்புண், குடல்புண், மூலம் போன்ற பிரச்சினைகளுக்கு இது சிறந்த தீர்வாகும். ரத்தத்தை சுத்திகரிக்கும். ரோஜா குல்கந்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி மேம்படும். வயிற்று உப்புசம், பொருமல் நீங்கும். உடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் அகன்று சருமப் பொலிவு அதிகரிக்கும். இதயம் பலம் பெறும். இதன் துவர்ப்புச் சுவை ஆண்களுக்கு தாது விருத்தி அளிக்கும். பெண்களின் கர்ப்பப்பையை வலுப்படுத்தும். வாய் மற்றும் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.

ரோஜா குல்கந்தை 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் உட்பட அனைவரும், தினமும் காலை மற்றும் இரவில் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ரோஜா குல்கந்தை அப்படியே சாப்பிடக் கொடுக்கலாம். பாலில் கலந்து மில்க் ஷேக் தயாரித்தும் கொடுக்கலாம். ரொட்டி, சப்பாத்தி போன்றவற்றின் மேல் ஜாம் போலத் தடவியும் கொடுக்கலாம். விருந்து உணவுக்குப் பின்னர் வெற்றிலை பீடாவில் குல்கந்து சேர்த்து சாப்பிட்டால் சுவையும், ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

ரோஜா குல்கந்தை எவ்வித செயற்கை ரசாயனமும் கலக்காமல், வீட்டில் இயற்கையாகவும், சுத்தமாகவும் தயாரிக்க முடியும்.

நம்முடைய பயன்பாட்டுக்கு மட்டுமில்லாமல், இதை அதிக அளவில் தயாரித்து சந்தைப்படுத்தும்போது லாபகரமான சுயதொழிலாக இருக்கும். சிறு முதலீட்டில் எளிதாகத் தொடங்கலாம். சந்தைப்படுத்தும் முன்பு, உணவுப் பொருட்களுக்கான உரிமங்கள் பற்றி தெரிந்துகொள்வது முக்கியம்.

உங்களுக்கு அருகில் இருக்கும் மளிகைக் கடைகள், ஆர்கானிக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகியவற்றை அணுகுங்கள். சமூக வலைத்தளங்களில் சந்தைப்படுத்துவது எப்படி? என்ற உத்தியை தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் சிறிய அளவில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்து பார்த்தால் சரியான பக்குவத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

ரோஜா குல்கந்து தயாரிப்பு

தேவையான பொருட்கள்:

பன்னீர் ரோஜா இதழ்கள் - 100 கிராம்

பனங்கற்கண்டு - 350 கிராம்

தேன் - 500 கிராம்

செய்முறை:

பன்னீர் ரோஜாவை தண்ணீரில் போட்டு நன்றாக சுத்தப்படுத்தி, வடிதட்டில் வைத்து தண்ணீரை முழுவதுமாக வடிய விடுங்கள். பிறகு சுத்தமான பருத்தித் துணியில் பன்னீர் ரோஜா இதழ்களை உதிரி உதிரியாகப் பரப்பிவிடுங்கள். இதனை வீட்டிற்குள் காற்றோட்டமான இடத்தில் 3 நாள்கள் வரை உலர வையுங்கள். ரோஜா குல்கந்தை கோடைகாலத்தில் தயாரிப்பது நல்லது. பூஞ்சைகள் பாதிப்பு ஏற்பட்டு கெட்டுப் போகாமல் இருக்கும்.

பனங்கற்கண்டை பொடித்துக் கொள்ளுங்கள். அத்துடன் ரோஜா இதழ்களை சேர்த்து கொரகொரப்பான பதத்தில் அரையுங்கள். மிக்சி அல்லது கல் உரலில் அரைக்கலாம்.

பின்னர் அந்த விழுதை சுத்தமான உலர்ந்த கண்ணாடி பாட்டிலில் எடுத்துக் கொள்ளுங்கள். ரோஜா விழுது மூழ்கும் அளவுக்கு பாட்டிலில் தேன் ஊற்றுங்கள். பாட்டிலின் வாய்ப்பகுதியை சுத்தமான பருத்தித் துணியால் கட்டி வெயிலில் 10 நாட்கள் வைத்து எடுங்கள்.

சுத்தமான கரண்டியால் கலவையை அவ்வப்போது கிளறி வையுங்கள். பாட்டிலில் தேன் அளவு குறையும்போது, மேலும் கொஞ்சம் தேன் ஊற்றுங்கள். தேன் பூஞ்சைகள் வராமல் தடுக்கும்.

10 நாட்களுக்குப் பிறகு ரோஜா குல்கந்தைப் பயன்படுத்தலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.


Next Story