ரத்தசோகையை போக்கும் லெமன் கிராஸ்
லெமன் கிராஸ் சாற்றைப் பருகுவதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நோய் வராமல் தடுக்கும்.
'எலுமிச்சைப் புல்' எனப்படும் லெமன் கிராஸ் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலும், இமயமலை மலை அடிவாரத்திலும் பயிரிடப்படுகிறது.
லெமன் கிராசின் தண்டுப்பகுதியை சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். லேசான சிட்ரஸ் சுவை கொண்ட இதை சூப், இறைச்சி, கடல் உணவுகள் ஆகியவற்றில் சேர்க்கலாம். இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பல்வேறு நன்மைகள் கொண்டது.
லெமன் கிராஸ் தாவரத்தில் உள்ள மூலக்கூறுகள் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் போன்ற நுண்ணுயிர்களை எதிர்க்கும் ஆற்றல் பெற்றவை. இதில் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் காரணிகள் உள்ளன. லெமன் கிராசின் நன்மைகள் மற்றும் அதை பயன்படுத்தும் முறைகள் குறித்த மேலும் பல தகவல்கள் இதோ…
எடை குறைப்பு:
லெமன் கிராசை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். அதில் லெமன் கிராஸ் விழுதைப் போட்டு 10 நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க விடுங்கள். பின்னர் அதை ஒரு கோப்பையில் வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
இந்த லெமன் கிராஸ் தேநீரை, தினமும் காலையில் எழுந்ததும் உணவு சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.
செரிமானம்:
லெமன் கிராசில் உள்ள சிட்ரஸ் அமிலம், வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறுபோன்ற வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும்.
ரத்தசோகை:
லெமன் கிராஸ் சாற்றைப் பருகுவதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நோய் வராமல் தடுக்கும்.
ரத்த அழுத்தம்:
லெமன் கிராசில் நிறைந்திருக்கும் பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை சீராக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கல்லீரலை சுத்திகரிக்கும்.
தோல் பராமரிப்பு:
லெமன் கிராஸ் விழுதை, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தைலப் பதத்தில் சூடுபடுத்தி, வடிகட்டவும். இதனை தோல் நோய், விரல் இடுக்குகளில் ஏற்படும் அரிப்பு மற்றும் சேற்றுப்புண் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம்.
கூந்தல் பராமரிப்பு:
தேங்காய் எண்ணெய்யுடன், சில துளிகள் லெமன் கிராஸ் எண்ணெய் கலந்து தலையில் தடவி வந்தால் முடியின் வேர்க்கால்கள் வலுப்பெறும். லெமன் கிராஸ் நுண்ணுயிர் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டதால், ஆரோக்கியமான கூந்தல் பராமரிப்புக்கு உதவும்.
மாதவிடாய் பிரச்சினை:
லெமன் கிராஸ் மற்றும் கருஞ்சீரகம் இவை இரண்டையும் அம்மியில் வைத்து இடித்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக வற்றியதும் அடுப்பை அணைத்து வடிகட்டி கொள்ளவும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.