சிரிப்பினால் மேம்படும் ஆரோக்கியம்
சிரிக்கும்போது இயல்பாக சுவாசிப்பதைவிட ஆழ்ந்த சுவாசம் நடைபெறும். இதனால் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். மூளை மற்றும் உள் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இது உதவும்.
மனிதர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளில் அனைவரையும் ஈர்க்கக்கூடியது சிரிப்பு. மகிழ்ச்சியின் வெளிப்பாடாக திகழும் சிரிப்பினால், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் மனநிலை மற்றும் எண்ண ஓட்டங்களை மாற்ற முடியும். சிரிப்பதால், உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுகிறது. சிரிப்பின் பயன்களைப் பற்றிய மேலும் பல தகவல்கள் இங்கே…
- சிரிக்கும்போது முகத்தில் உள்ள தசைகளின் இயக்கம் மேம்படும். முகம் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் நிகழ்வதுடன், தசை நார்கள் விரிவடைந்து முகத்தின் தோற்றத்தையும் மெருகேற்றும். இயற்கையான அழகு அதிகரிக்கும்.
- புன்னகையுடன் இருக்கும் முகம், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நேர்மறையான எண்ணத்தை உண்டாக்கும். புன்னகைக்கும்போது உடலில் உள்ள மகிழ்ச்சி ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இது இயற்கையாகவே ஆயுளை நீட்டிக்க வழிவகுக்கும்.
- ஒருவருடைய உள் உணர்வில் ஊடுருவக்கூடிய புன்னகை, உடல் மற்றும் மனச் சோர்வை நீக்கும் தன்மை கொண்டது. சிரிக்கும்போது மூளையில் சிறிய அளவில் 'நியூரோபெப்பட்கள்' எனும் ரசாயனங்கள் வெளியாகும். இது நரம்பியல் மண்டலத்தில் டோபைமைன், எண்டோர்பின் மற்றும் செரோடோனின் ஆகிய ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும். இதனால் மன அழுத்தம், மன உளைச்சல் மற்றும் அதீத சிந்தனையில் இருந்து மீள முடியும். எண்ணங்களை தெளிவாக வகைப்படுத்தும் திறனும், நிர்வகிக்கும் திறனும் மேம்படும்.
- சிரிக்கும்போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே, எண்ண ஓட்டங்களை மாற்ற பெரிதும் உதவுகிறது. சிரிப்பு, மூளையின் உணர்ச்சி நிலை பாதையில் அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதன் மூலம் இனிப்பு சுவையினால் ஏற்படும் எண்ண ஓட்டத்தை விட, அதிக அளவு நேர்மறையான எண்ண மாற்றங்கள் நிகழ்கின்றன. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
- புன்னகையால் எளிதாக மற்றவரின் முக பாவனையையும், மனதையும் மாற்ற முடியும். இயல்பாகவே மூளை, புன்னகைக்கும் முக பாவனைக்கு தன்னிச்சையான கவனத்தை உண்டாக்கும். இதன் மூலம் எதிரில் இருப்பவர் மனதில் எளிதாக நேர்மறை எண்ணத்தை உண்டாக்க முடியும்.
- சிரிக்கும்போது இயல்பாக சுவாசிப்பதைவிட ஆழ்ந்த சுவாசம் நடைபெறும். இதனால் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். மூளை மற்றும் உள் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இது உதவும்.
- சிரிக்கும்போது இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், ரத்த அழுத்தம் குறைந்து உடலும், மனமும் புத்துணர்வு பெறும். சிரிப்பு உடல் மற்றும் மனதில் ஏற்படும் வலிகளைக் குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- சிரிப்பு சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். மனம்விட்டு சிரிக்கும்போது வலியைக் குறைக்கும் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும்.
- ஒரு நாளுக்கு 15 நிமிடங்கள் சிரிப்பது 40 கலோரிகளை எரிக்க உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story