செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கக்கூடாத உணவுகள்
உணவுகளுக்கு சுவையூட்டும் பூண்டு மற்றும் வெங்காயம் செல்லப்பிராணிகளுக்கு நல்லதல்ல. இவ்வகை உணவுகள் அவற்றின் ரத்த சிவப்பு அணுக்களை அழித்து, ரத்த சோகையை உண்டாக்கும். வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும்.
செல்லப்பிராணிகளை தங்கள் குழந்தைகளாகவே கருதி வளர்ப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவற்றுக்கு பிறந்தநாள் கொண்டாடி கேக், சாக்லெட் ஆகிய உணவுகளை ஊட்டி மகிழ்வார்கள். இதுதவிர ஸ்நாக்ஸ் வகைகள், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடும்போது, 'எனக்கும் கொஞ்சம் கொடு' என்று கேட்கும் முகபாவனையுடன் நம் எதிரே செல்லப்பிராணி நிற்கும்போது நம்மால் மறுக்க முடியாது. இவ்வாறு நாம் கொடுக்கும் பல உணவுகள் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளின் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கக் கூடாத உணவுகளின் தொகுப்பு இங்கே...
சாக்லெட்:
சாக்லெட்டில் இருக்கும் தியோப்ரோமைன், மனிதர்களுக்கு நல்லது. ஆனால் நாய், பூனை போன்ற விலங்குகள் அதை சாப்பிட்டால் அவற்றுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம். இதயத் துடிப்பு அதிகரிப்பது, வலிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு சில நேரங்களில் அவை இறக்கவும் நேரிடலாம்.
கொழுப்பு நிறைந்த மாமிசம்:
கொழுப்பு நிறைந்த மாமிச உணவுகள் செல்லப்பிராணிகளுக்கு கணைய வீக்கத்தை ஏற்படுத்தும். அதிக கொழுப்பு உள்ள இறைச்சியை செல்லப்பிராணிகளுக்கு கொடுப்பதைத் தவிர்க்கவும்.
உப்பு:
அதிக உப்புள்ள உணவுகள் செல்லப்பிராணிகளுக்கு சோடியம் அயன் பாய்சனிங், நீர்ச்சத்து குறைபாடு அல்லது அதிகப்படியான சிறுநீர் கழிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தலாம். மேலும் இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு, அசாதாரணமான இதயத்துடிப்பு, உடல் வெப்பநிலை அதிகரிப்பது மற்றும் வலிப்பு ஏற்படலாம்.
பூண்டு மற்றும் வெங்காயம்:
உணவுகளுக்கு சுவையூட்டும் பூண்டு மற்றும் வெங்காயம் செல்லப்பிராணிகளுக்கு நல்லதல்ல. இவ்வகை உணவுகள் அவற்றின் ரத்த சிவப்பு அணுக்களை அழித்து, ரத்த சோகையை உண்டாக்கும். வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும்.
பால் பொருட்கள்:
செல்லப்பிராணிகளின் உடலில், பாலில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகளை உடைக்கும் என்சைம்கள் இல்லை. சில நாய்களுக்கு லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்ற குறைபாடும் இருக்கலாம். அவற்றுக்கு பால் வழங்கினால் கணைய அழற்சி உண்டாகலாம்.
வேகவைக்காத உணவுகள்:
செல்லப்பிராணிகளுக்கு வேகவைக்காத மீன், முட்டை போன்றவற்றை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் உள்ள பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் செல்லப்பிராணிகளுக்கு நோய்த்தொற்றை உண்டாக்கலாம்.
பீனட் பட்டர்:
மிட்டாய், சூயிங்கம், பேக்கரி உணவுகள், இனிப்பு பண்டங்கள், பற்பசை மற்றும் டயட் உணவுகள் போன்றவற்றை செல்லப் பிராணிகளுக்கு கொடுக்கக்கூடாது. இவற்றில் உள்ள 'சைலிட்டால்' என்ற ரசாயனம் செல்லப் பிராணியின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து கல்லீரல் பாதிப்பை உண்டாக்கும்.