உங்கள் உணவுப் பழக்கம் உடல் எடையைக் குறைக்குமா?


உங்கள் உணவுப் பழக்கம் உடல் எடையைக் குறைக்குமா?
x
தினத்தந்தி 12 March 2023 7:00 AM IST (Updated: 12 March 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

தினசரி உணவில் 5 பங்கு அளவு காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்ப்பதால், உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். இவற்றில் இருக்கும் நார்ச்சத்து, உடல் எடை குறைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

டல் எடையை குறைக்கும் விஷயத்தில் அனைத்து சத்துக்களும் நிறைந்த, 'சரிவிகித உணவு' முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உணவு முறை எத்தகையது? நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் ஊட்டச்சத்து தேவையை நிறைவேற்றுகிறதா? அதனால் உங்கள் உடல் எடையை சீராக பராமரிக்க முடியுமா? போன்ற சந்தேகங்களுக்கு விடை தெரிந்துகொள்ள, பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.

1. வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் காலை உணவைத் தவிர்க்கிறீர்களா?

2. வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் மதிய உணவைத் தவிர்க்கிறீர்களா?

3. வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் இரவு உணவைத் தவிர்க்கிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் 'ஆம்' எனும் பதில் அதிகமாக இருந்தால், நீங்கள் உங்களுடைய உணவு பழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

உணவைத் தவிர்ப்பது, குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பதால், உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு உண்டாகும். இது உங்களின் எடை குறைப்பு முயற்சிக்குப் பலன் கிடைக்காமல் செய்துவிடும்.

1. உங்கள் தினசரி உணவில் 5-க்கும் மேற்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்கிறதா?

2. நீங்கள் ஒவ்வொரு வாரமும், குறைந்தது 4 வெவ்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுகிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் 'இல்லை' எனும் பதில் அதிகமாக இருந்தால், நீங்கள் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தினசரி உணவில் 5 பங்கு அளவு காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்ப்பதால், உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். இவற்றில் இருக்கும் நார்ச்சத்து, உடல் எடை குறைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடுங்கள்.

பழச்சாறுகளுக்குப் பதிலாக, பழங்களை துண்டுகளாக வெட்டி சாப்பிடுங்கள்.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பழத்துண்டுகள் மற்றும் பழச்சாறுகளில், சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரையின் அளவை கவனமாகப் படியுங்கள்.

சாலட்டுகளில் சிரப் மற்றும் சாஸ் கலப்பதை தவிருங்கள். இதன் மூலம் தேவையற்ற கலோரிகள் உடலில் சேர்வதை தவிர்க்கலாம்.

1. சிப்ஸ், ஸ்நாக்ஸ், மீன் போன்றவற்றை எண்ணெய்யில் பொரித்தெடுக்காமல், பேக்கிங் மற்றும் கிரில் செய்து சாப்பிடுவீர்களா?

2. இறைச்சிகளில் மேல் தோல் நீக்கி சாப்பிடுவீர்களா?

3. உணவில் விதைகள், பருப்புகள் மற்றும் நட்ஸ்வகைகளைச் சேர்த்துக்கொள்கிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் 'இல்லை' எனும் பதில் அதிகமாக இருந்தால், குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

நல்ல கொழுப்பு நிறைந்த மீன்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

1. உங்கள் உணவில் முழு தானியங்களை அடிக்கடி சேர்க்கிறீர்களா?

2. தினமும் பருப்பு வகைகளை சாப்பிடுகிறீர்களா?

3. வெள்ளை ரொட்டிக்குப் பதிலாக முழு தானிய ரொட்டியை சாப்பிடுகிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் 'இல்லை' எனும் பதில் அதிகமாக இருந்தால், நீங்கள் உணவில் முழுதானியங்களை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முழு தானியங்களில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தைச் சீராக்கும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

முழு தானிய உணவுகளைச் சாப்பிடும்போது, அவற்றுடன் கொழுப்பு நிறைந்த சிரப், சாஸ் மற்றும் கிரீம் கலப்பதைத் தவிருங்கள்.


Next Story