எளிதாக தயாரிக்கக்கூடிய இயற்கை 'லிப் ஸ்கிரப்கள்'
ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும், மென்மையாகவும் இருக்கும் உதடுகள், உங்கள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும். உதட்டில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு, கருமை போன்றவற்றை போக்கி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றக்கூடியவை ‘லிப் ஸ்கிரப்கள்’.
ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும், மென்மையாகவும் இருக்கும் உதடுகள், உங்கள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும். உதட்டில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு, கருமை போன்றவற்றை போக்கி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றக்கூடியவை 'லிப் ஸ்கிரப்கள்'. நமக்கு அருகிலேயே எளிதாக கிடைக்கக்கூடிய, இயற்கையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே லிப் ஸ்கிரப்களை தயாரிக்க முடியும். அதற்கான குறிப்புகள் இதோ...
6 டீஸ்பூன் வெள்ளை சர்க்கரையுடன், 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்பு அதில் 3 டேபிள் ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு, 1 டீஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய் ஊற்றி கலந்தால் 'எலுமிச்சை லிப் ஸ்கிரப்' தயார்.
1 டீஸ்பூன் பூசணிக் கூழுடன், 1 டீஸ்பூன் பழுப்புநிற சர்க்கரை (பிரவுன் சுகர்) சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்பு அதில் 1 டீஸ்பூன் காபி தூள், ¼ டீஸ்பூன் இனிப்பு பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். 'பூசணி லிப் ஸ்கிரப்' தயார்.
ஒரு கிண்ணத்தில் ¼ டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள், ¼ டீஸ்பூன் பழுப்புநிற சர்க்கரை மற்றும் ¼ டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த லிப் ஸ்கிரப்பை உதடுகளின் மீது பூசி வட்ட இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவவும். இவ்வாறு செய்துவர உதடுகள் மிருதுவாகும்.
2 டீஸ்பூன் பழுப்புநிற சர்க்கரை, 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த லிப் ஸ்கிரப், உதட்டில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி உதடுகளை பளபளப்பாக்கும்.
1 டீஸ்பூன் பழுப்புநிற சர்க்கரையுடன், 1 டீஸ்பூன் இனிப்பு பாதாம் எண்ணெய்யை சேர்த்து கலக்கவும். பிறகு அதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் பெப்பர்மிண்ட் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனை உதட்டில் பூசி வந்தால் உதடுகளில் உண்டாகும் வறட்சி நீங்கும்.
ஒரு சிறிய கிண்ணத்தில், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 4 டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை, 1 டீஸ்பூன் தேன், 8 துளிகள் திராட்சைப்பழ எசென்ஷியல் எண்ணெய் மற்றும் 8 துளிகள் எலுமிச்சை எசென்ஷியல் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த லிப் ஸ்கிரப் உதட்டில் இருக்கும் கருமையை நீக்கும்.
உலர்ந்த ஆரஞ்சு பழத்தோலை பொடியாக அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் பழுப்புநிற சர்க்கரை மற்றும் சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து உதட்டில் பூசி 30 வினாடிகள் ஸ்கிரப் செய்து வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவவும். இது உதடுகளுக்கு ஈரப்பதத்தை கொடுக்கும்.