வீட்டில் இருந்தே 'பாஸ்தா' தயாரிக்கும் தொழில் முறை
பாஸ்தா, அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒன்று. ஆகையால், இதை சந்தைப்படுத்துதல் எளிதானது.
சமீபகாலமாக பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வது அதிகரித்து வருகிறது. அவற்றில் உணவு தொடர்பான தொழில்கள் எளிதில் வெற்றி பெறுபவையாகவும், வருமானம் தரக்கூடியவையாகவும் இருக்கின்றன.
இவ்வாறு தயாரிக்கும் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமாக மட்டுமில்லாமல், புதுமையாகவும் இருந்தால் அவற்றுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் பாஸ்தாவை வீட்டில் இருந்தபடியே தயாரித்து விற்பனை செய்யும் தொழில் முறை குறித்து இங்கு பார்ப்போம்.
பாஸ்தா தயாரிப்பு தொழிலை பகுதி நேரமாகவும் செய்யலாம். பாஸ்தாவில் மக்ரோனி, பார்பில்லி, கன்னெல்லொனி, கிரிஸ்டி டி கல்லி, ரகிடோனி, ஸ்பெகட்டி, அனீல்லி என பல வடிவங்கள் இருக்கின்றன.
பாஸ்தா தயாரிப்புக்கு மைதா, கோதுமை, முட்டை, உப்பு, பேக்கிங் கவர், லேமினேட்டி மிஷின் போன்ற தயாரிப்புப் பொருட்கள் தேவைப்படும். மதிப்பு கூட்டும் விதமாக மூலப்பொருட்களில் சிறு மாறுதல்களை செய்யலாம். உதாரணமாக கோதுமைக்குப் பதிலாக கம்பு, கேழ்வரகு, சிறு தானியங்கள், பழச்சாறுகள் போன்றவற்றை கலந்து தயாரிக்கலாம்.
பாஸ்தா தயாரிப்பதற்கு ரூபாய் 1,500 மதிப்புள்ள மேனுவல் இயந்திரமும், ரூபாய் ஒரு லட்சத்து நாற்பது ஆயிரம் மதிப்புள்ள தானியங்கி இயந்திரமும் பயன்படுத்தப்படுகிறது. தேவை மற்றும் முதலீட்டின் மதிப்பு பொறுத்து இவற்றில் ஏதேனும் ஒரு இயந்திரத்தை பயன்படுத்தலாம்.
பாஸ்தாவுக்கான தயாரிப்புப் பொருட்களை ஒன்றாகக் கலந்து சப்பாத்தி போன்றோ அல்லது நீள் உருண்டை போன்றோ உருட்டிக்கொள்ளவும். இப்போது அந்த மாவை இயந்திரத்தில் விட்டு, பாஸ்தாவுக்கான அச்சை தேர்வு செய்தால் போதும். சில நிமிடங்களில் பாஸ்தாவை தயாரித்து விடலாம். மாவின் ஈரப்பதம் உலரும் வகையில் பாஸ்தாவை தனித்தனியாக பிரித்து காய வைக்கவும்.
பாஸ்தாவை பேக்கிங் செய்யும்போது கவருக்குள் காற்று புகாதபடி சீலிங் மிஷினைப் பயன்படுத்தி பேக் செய்யவும். சீலிங் மிஷின் மற்றும் கவர் ஆன்லைனிலும், சந்தையிலும் எளிதாகக் கிடைக்கும். பாஸ்தாவுக்கு கண்ணாடி வகை கவர்களைக் கொண்டு பேக் செய்யலாம்.
பாஸ்தா, அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒன்று. ஆகையால், இதை சந்தைப்படுத்துதல் எளிதானது. தயாரித்த பாஸ்தாக்களை ஒரு கிலோ 500 ரூபாய் வரை விற்கலாம். ஒருவர் சாப்பிடும் வகையில் 200 கிராம் அளவில் பாஸ்தாவை பாக்கெட் போட்டு விற்கலாம். இது தினசரி வருமானம் கொடுக்கக்கூடியது.
இதுமட்டுமில்லாமல் ஆன்லைன் மூலமாகவும், மளிகை கடை, பல்பொருள் அங்காடி, பாஸ்ட் புட் உணவகங்கள், பெரிய உணவகங்கள் போன்ற இடங்களிலும் விற்கலாம். ஆர்டரின் பெயரிலும் தயாரித்துக் கொடுக்கலாம்.