பன்னீர் ரோல்
சுவையான பன்னீர் ரோல் ரெசிபியின் செய்முறை விளக்கத்தை இங்கே காண்போம்.
பன்னீர் ரோல்
தேவையான பொருட்கள்:
மேல் மாவு தயாரிக்க:
மைதா அல்லது கோதுமை
மாவு - 2 கப்
உப்பு - ½ டீஸ்பூன்
சர்க்கரை - ½ டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - ¼ டீஸ்பூன்
பால் - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு
மசாலா தயாரிக்க:
பச்சை, மஞ்சள், சிவப்பு
நிற குடைமிளகாய் - 2 கப்
(நீளவாக்கில் நறுக்கியது)
வெங்காயம் - 1 கப்
(பொடிதாக நறுக்கியது)
பன்னீர் - 200 கிராம்
(நீளவாக்கில் நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
(நீளவாக்கில் நறுக்கியது)
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
புதினா சட்னி - ½ கப்
தக்காளி சாஸ் - ¼ கப்
எலுமிச்சம் பழச்சாறு - ¼ கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் மாவைக் கொட்டி, அத்துடன் உப்பு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலக்கவும். பின்பு அதில் பாலைச் சிறிது சிறிதாக ஊற்றிப் பிசையவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம். இப்போது 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மாவு மென்மையாக மாறும் அளவுக்கு அடித்துப் பிசையவும். பின்னர் இந்த மாவை மூடி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு மிதமான தீயில் வதக்கவும். பின்பு குடைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். பின்னர் அதில் உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் ஆகியவற்றைப் போட்டுக் கலக்கவும். அடுத்து பன்னீரைச் சேர்த்து லேசாகக் கிளறவும் (பன்னீர் பாதி வெந்தால் போதும்). பிறகு அதில் கொத்தமல்லித்தழையைத் தூவி கிளறி இறக்கவும்.
இப்போது, பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து உருண்டைகள் செய்து அவற்றை மெல்லிய வட்டமாக திரட்டிக் கொள்ளுங்கள்.
அதன் மீது லேசாக வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி, சிறிது உலர் மாவைத் தூவுங்கள். 5 நிமிடங்கள் கழித்து அந்த மாவை கைகளால் அழுத்தி தட்டையாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் வட்ட வடிவமாகத் திரட்டிக் கொள்ளுங்கள். அதை சூடான தவாவில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கங்களும் பொன்னிறமாக மாறும்படி சுட்டு எடுங்கள்.
அதன் மீது ஒரு டீஸ்பூன் புதினா சட்னியைத் தடவவும். பிறகு சிறிது தக்காளி சாஸ் ஊற்றி, பன்னீர் மசாலாவைப் படத்தில் காட்டியபடி, நடுவில் வைக்கவும். அதன் மேல் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை தெளிக்கவும்.
இப்போது இதனை மெதுவாகச் சுருட்டவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, இந்த ரோலை அதன் மேல் வைத்து சூடுபடுத்தினால் சுவையான 'பன்னீர் ரோல்' தயார்.