குளு குளு குல்பி ரெசிபிகள்
சுவையான குல்பி பலூடா, குல்பி ஷேக் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
குளு குளு குல்பி ரெசிபிகள்
குல்பி தயாரிக்க தேவையான பொருட்கள்:
கொழுப்பு நீக்காத பால் - 4¼ கப்
சாதாரண பால் - ¼ கப் (காய்ச்சி மிதமாக ஆறவைத்தது)
குங்குமப்பூ - ¼ டீஸ்பூன்
சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி - ¼ டீஸ்பூன்
செய்முறை:
சிறிதளவு பாலில் குங்குமப்பூவைப் போட்டு ஊறவைக்கவும். ¼ கப் பாலில், சோளமாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும்.
அகலமான நான்-ஸ்டிக் கடாயில் மீதமுள்ள பாலை ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். பால் கொதிக்கும்போது அதில் சோளமாவு கரைசல் மற்றும் சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். 20 நிமிடங்களுக்கு கட்டிகள் உருவாகாமல் தொடர்ந்து கிளறவும். பால் சற்று கெட்டியானதும் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். பின்பு அதில் குங்குமப்பூ கரைசலை ஊற்றிக் கலக்கவும். இந்தக் கலவையை குல்பி மோல்டில் ஊற்றி பிரீசரில் 4 மணி நேரம் வைக்கவும்.
குல்பி பலூடா
தேவையான பொருட்கள்:
தயாரித்து வைத்திருக்கும் குல்பி - விருப்பத்திற்கேற்ப
ரோஸ் சிரப் - 4 டேபிள் ஸ்பூன்
பலூடா சேமியா - ½ கப் (ஊற வைத்தது)
சப்ஜா விதை - 8 டேபிள் ஸ்பூன் (ஊற வைத்தது)
முந்திரி, பிஸ்தா, பாதாம் - 1 டேபிள் ஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)
டூட்டி புரூட்டி - 2 டேபிள் ஸ்பூன்
காஸ்டர் சுகர் - 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு கண்ணாடி டம்ளரில் சேமியா, சப்ஜா விதைகள், டூட்டி புரூட்டி, ரோஸ் சிரப், தயாரித்து வைத்திருக்கும் குல்பி சிறிதளவு, முந்திரி, பாதாம் பருப்பு என ஒவ்வொரு அடுக்காக நிரப்பவும். உங்கள் விருப்பத்திற்கேற்ப 2 அடுக்குகள் வரை நிரப்பி கடைசியாக முந்திரி, பாதாம் பருப்பு ஆகியவற்றை மேலே தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
குல்பி ஷேக்
தேவையான பொருட்கள்:
தயாரித்து வைத்திருக்கும் குல்பி - 2 கப்
கொழுப்பு நீக்காத பால் - 1 கப் (காய்ச்சி ஆறவைத்தது)
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 1 டீஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)
குங்குமப்பூ - ¼ டீஸ்பூன்
செய்முறை:
பிளண்டரில் பால், சர்க்கரை, ஒரு கப் குல்பி ஆகியவற்றை போட்டு நுரைக்கும்வரை பிளண்ட் செய்யவும். பின்னர் அதை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே துண்டுகளாக வெட்டிய ஒரு கப் குல்பியை போடவும். பின்பு அதன் மேல் முந்திரி மற்றும் குங்குமப்பூவைத் தூவி சில்லென்று பரிமாறவும்.