இப்படிக்கு தேவதை
ஆன்மிக வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவளுடைய விருப்பமாக இருக்கிறது. உங்கள் மகள் எடுத்திருக்கும் முடிவு உங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தாலும், அவளுடைய விருப்பத்துக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும்.
1. எனக்கு திருமணமாகி 10 வருடங்கள் கழித்து ஒரு மகள் பிறந்தாள். அவளை கண்ணும் கருத்துமாக வளர்த்து படிக்க வைத்தேன். தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறாள். அவளுடன் பணிபுரியும் சக பெண் ஊழியருடன் சேர்ந்து, அடிக்கடி கோவில்களுக்கு பயணம் செல்வாள். வீட்டில் தியானம் செய்வது, பக்தி பாடல்கள் பாடுவது என இருந்தவள், திடீரென துறவு வாழ்க்கை ஏற்க போகிறேன் என்று கூறுகிறாள். அவளது நடவடிக்கைகள் அனைத்தும் அதற்கு ஏற்றதுபோல மாறி வருகிறது. என்னுடைய ஒரே பெண்ணாகிய அவளின் திருமணம் குறித்து எனக்கு பல கனவுகள் இருக்கிறது. ஆனால் இல்லற வாழ்க்கையே வேண்டாம் என்று அடம் பிடிக்கும் அவளுடைய மனதை எவ்வாறு மாற்றுவது? வழிகாட்டுங்கள்.
தாமதமாக பிறந்த குழந்தையாக இருந்ததால் இத்தனை வருடங்களாக உங்கள் மகளுக்காக மட்டுமே வாழ்க்கையை வாழ்ந்து வருகிறீர்கள். அதனால் அவள் உங்களுடையவள் என்றும், அவள் எத்தகைய வாழ்க்கை வாழ வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அத்தகைய வாழ்க்கையை அவள் வாழ்வாள் என்றும் நீங்கள் கருதியிருக்கலாம். அவள் தனிப்பட்ட விருப்பங்கள், கனவுகள் கொண்ட ஒரு நபர் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள். உங்கள் மகளின் விருப்பு, வெறுப்புகளை உணர்ந்து, அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்தால் மட்டுமே நீங்கள் முழுமையான பெற்றோராக இருக்க முடியும். ஆன்மிக வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவளுடைய விருப்பமாக இருக்கிறது. உங்கள் மகள் எடுத்திருக்கும் முடிவு உங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தாலும், அவளுடைய விருப்பத்துக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். அவளுடைய வாழ்க்கையை வாழ்வதற்கு அவளுக்கு வழிவிடுங்கள்.
2. எனக்கு திருமணமாகி 5 வருடங்கள் கழித்து மகன் பிறந்தான். இப்போது மகள் பிறந்து இருக்கிறாள். அதே நேரத்தில் எனது மாமியாரும் இறந்துவிட்டார். என் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். எனது பெற்றோரும் எனக்கு உறுதுணையாக இல்லை. திருமணம் செய்து கொடுத்ததுடன் எங்கள் கடமை முடிந்து விட்டது என்கின்றனர். எனது சொந்த ஊரில் வசிக்க வேண்டும் என்பது என் விருப்பம். கணவர் அதற்கு சரி என்றாலும், எனது பெற்றோர் அதை எதிர்க்கின்றனர். மிகவும் தனிமையாகவும், ஒதுக்கப்படுவதாகவும் உணர்கிறேன். இந்த நிலையில் நான் என்ன செய்வது?
நீங்கள் தனிமையாக உணர்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இருந்தாலும் உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே பொறுப்பேற்கத் தொடங்குவதும் முக்கியம். குழந்தைகளை கவனித்துக்கொள்வதிலேயே உங்களுடைய பெரும்பாலான நேரம் செலவாகக்கூடும். எனவே உதவிக்கு யாரும் இல்லை என்று நினைத்து, நீங்கள் விரக்தி அடைவது இயல்பானதுதான்.
எல்லா வேலைகளையும் நீங்களே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். தொடர்ந்து வேலைப்பளுவில் சிக்கிக்கொண்டு இருந்தால், அந்தக் கோபத்தை உங்கள் குழந்தைகளின் மேல் காட்டக்கூடிய சூழல் உண்டாக நேரிடலாம். உங்கள் வீட்டு வேலைகளை செய்வதற்கு உதவியாளரை நியமியுங்கள். உங்களுக்கு கிடைக்காததை நினைத்து வருத்தம் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தேவையான உதவியையும், ஆதரவையும் நீங்களே ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புங்கள். உங்கள் பெற்றோரிடம் இருந்து மட்டும்தான் உதவியைப் பெற முடியும் என்று நினைக்காதீர்கள். இந்த உலகம் பெரியது. உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் கூட சில மணி நேரங்கள் நட்பாக உங்கள் குழந்தையை கவனித்துக்கொள்ள முடியும். உலகில் யாரும் தனியாக இல்லை. உங்களுடைய குறுகிய வட்டத்தில் இருந்து வெளிவந்தால் மட்டுமே, பரந்து விரிந்திருக்கும் உலகை உங்களால் பார்க்க முடியும். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.