இப்படிக்கு தேவதை


தினத்தந்தி 28 Aug 2022 7:00 AM IST (Updated: 28 Aug 2022 7:01 AM IST)
t-max-icont-min-icon

வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

1. எனக்கு திருமணம் நடந்து 15 வருடங்கள் ஆகிறது. கணவர் மற்றும் மகன்களுடன் வாழ்ந்து வருகிறேன். தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றுகிறேன். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக என் உடன் பணிபுரியும் நபரின் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது.

அவருடன் பேச காரணம் கிடைக்குமா என்று மனம் ஏங்குகிறது. ஒரு நாள் அவரை பார்க்கவில்லை என்றாலும், அன்று முழுவதும் வேலையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. இது தவறு என்று தெரிந்தாலும் என்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என் கணவருக்கு துரோகம் செய்கிறேன் என்று மனசாட்சி உறுத்துகிறது. வேலையை விட்டுவிடலாமா என்று யோசிக்கிறேன். எனது முடிவு சரியா என்று தெரியவில்லை. தயவு செய்து உதவுங்கள்.

வேலையை ராஜினாமா செய்வதன் மூலம் தற்போதைய சூழ்நிலையைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, உங்கள் சக ஊழியரிடம் நீங்கள் எதன் காரணமாக ஈர்க்கப்பட்டீர்கள் என்று ஆராயுங்கள். காரணத்தை கண்டறிந்தால், அதை உங்கள் கணவரிடம் நீங்கள் உணரவில்லையா? என்று உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். வெளித்தோற்றம் மற்றும் தேவையற்ற காரணங்களால் நீங்கள் ஈர்க்கப்பட்டிருந்தால், அதனால் ஏற்படும் நன்மை-தீமைகளை மனதுக்குள் பகுப்பாய்வு செய்யுங்கள்.

சக ஊழியரிடம் ஈர்க்கப்பட்டதற்காக குற்ற உணர்ச்சியுடன் இருக்காதீர்கள். அதற்குப் பதிலாக உங்கள் எண்ணங்களை ஏற்றுக்கொண்டு, அந்த ஈர்ப்பில் இருந்து வெளிவருவதற்காக உடல், மனம், அறிவு மற்றும் உணர்ச்சி ரீதியாக எத்தகைய கட்டுப்பாடுகளை மேற்கொள்ளலாம் என்று யோசித்துப் பாருங்கள். நல்வழி கிடைக்கும்.

2. எனக்கு சில மாதங்களுக்கு முன்புதான், பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் மணவாழ்க்கை நன்றாக போய்க்கொண்டு இருந்தது. மாதவிலக்கின் காரணமாக ஒரு நாள் நான் தனியாகத் தூங்கினேன். திடீரென இரவில் கண்விழித்து பார்த்தபோது எனது கணவர் தூங்காமல், தனது மொபைல் போனில் பாலியல் தொடர்பான வீடியோக்களை பார்த்துக்கொண்டு இருந்தார்.

தொடர்ந்து அவரிடம் அந்தப் பழக்கம் இருப்பதை தெரிந்துகொண்டேன். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, அவர் எதுவும் சொல்லவில்லை. இதை எனது குடும்பத்தினரிடம் தெரிவிக்கலாமா? அல்லது அவரை இதில் இருந்து எப்படி வெளியே கொண்டு வருவது? உங்கள் ஆலோசனைக்கு காத்திருக்கிறேன்.

ஆபாச வீடியோக்களை தொடர்ந்து பார்த்து அதற்கு அடிமை ஆவது, நீங்கள் இருவரும் இணைந்திருக்கும்போது இல்லாமல் ஆபாச வீடியோக்கள் பார்க்கும்போது மட்டுமே பாலியல் ரீதியாக தூண்டப்

படுவது, அத்தகைய வீடியோக்களில் வருவதைப் போன்ற பாலியல் அணுகுமுறைகளை உங்களிடம் எதிர்பார்ப்பது, பாலியல் நெருக்கத்திலிருந்து விலகி ஆபாசத்தைப் பார்க்கும் போது மட்டுமே உச்சக்

கட்டத்தை அடைவது போன்ற நடைமுறைகள் உங்கள் கணவரிடம் இருந்தால், நீங்கள் இருவரும் மனநல நிபுணரை அணுக வேண்டியது அவசியம். இதை குடும்பத்தில் உள்ளவர்களிடம் தெரிவிப்பது, உங்களது இல்லற வாழ்க்கையை சிக்கலுக்கு உள்ளாக்கிவிடும். அவரது பாலியல் ரீதியான உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் அத்தகைய வீடியோக்களை பார்த்திருக்கலாம். அவருடன் இணக்கத்தை அதிகரிக்கும் உங்கள் அணுகுமுறை மூலம், இந்தச் சூழ்நிலையை எளிதாக நீங்கள் கையாளலாம்.

வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.

1 More update

Next Story