இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 1 Oct 2023 7:00 AM IST (Updated: 1 Oct 2023 7:01 AM IST)
t-max-icont-min-icon

ஒருவரின் புறத்தோற்றம், அவரின் திருமண வாழ்க்கையின் தரத்தை பாதிப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். திருமண வாழ்க்கையில் ஈடுபடும்போது, அவருடைய எண்ணங்கள் மாறக்கூடும்.

1. னக்கு இரண்டு மகள்கள். இருவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள். மகன் இல்லாத குறையை போக்க, இளைய மகளை ஆண் மகனாக நினைத்து வளர்த்து வருகிறார் எனது கணவர். அவளும் எப்போதும் ஆண்களைப் போலவே உடை அணிவது, இருசக்கர வாகனம் ஓட்டுவது என்று ஒரு ஆணைப் போலவே நடந்துகொள்கிறாள். இது எதிர்காலத்தில் அவளது குடும்ப வாழ்வை பாதிக்குமோ என்று எனக்கு கவலையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் மகள்கள் இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள் என்கிறீர்கள். இந்த பருவத்தில், எதிர்காலத்தில் அவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அவர்களுக்கான அடையாளத்தை, அவர்கள் ஏற்கனவே உருவாக்கி இருப்பார்கள். எனவே உங்கள் இளைய மகளை நினைத்து கவலைப்படுவதை நிறுத்துங்கள். மாறாக ஆரோக்கியமான திருமண வாழ்க்கையைப் பற்றி அவளுக்கு சொல்லிக்கொடுங்கள். ஒருவரின் புறத்தோற்றம், அவரின் திருமண வாழ்க்கையின் தரத்தை பாதிப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். திருமண வாழ்க்கையில் ஈடுபடும்போது, அவளுடைய எண்ணங்கள் மாறக்கூடும். எனவே முன்கூட்டியே நீங்களாக எதையேனும் முடிவு செய்துகொண்டு தவிக்காதீர்கள். அதேநேரம் ஆரோக்கியமான திருமண வாழ்க்கையைப் பற்றி உங்கள் மூத்த மகளுக்கும் அறிவுறுத்துங்கள்.

2. எனக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. அதற்கான சிகிச்சை பெற்று வருகிறேன். நடுத்தர குடும்பம் என்பதால் கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறோம். சில நேரங்களில் என் கணவர் "நீ வீட்டை கவனித்துக்கொள். நான் பொருளாதாரத்தை பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறுகிறார். அடுத்த வாரமே பொருளாதார நிலையை நினைத்து புலம்புகிறார். சில நாட்களில் மீண்டும் "நீ வீட்டில் இரு" என்கிறார். இதுவே என் வாழ்வில் தொடர்கதை ஆகிறது. வீட்டில் இருந்தபடி ஏதாவது சுயதொழில் செய்வதற்கும் என்னை அனுமதிக்கவில்லை. இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது?

கருத்தரிக்க இயலாமைக்கும், நீங்கள் வேலையில் சேர்ந்து பணியாற்றுவதற்கும் எந்தவிதமான நேரடி தொடர்பும் இல்லை. நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு பிடித்து இருந்தால், அதில் அதிக உடல் உழைப்பு இல்லை என்றால், தொடர்ந்து அந்த வேலை செய்வதால் எந்தவகையான பாதிப்பும் ஏற்படாது. நீங்கள் பணியாற்றலாமா? வேண்டாமா என்ற முடிவை எடுப்பதற்கு முன்பு, உங்களுடைய மகளிர் நல மருத்துவரிடம் தகுந்த ஆலோசனையை பெறுங்கள். ஒருவேளை அவர் நீங்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினால், அதன்படி நடப்பது நல்லது. இல்லையென்றால், பணியாற்றி பொருளாதார ரீதியில் உங்களை வலுவானவராக மாற்றிக்கொள்வதே சிறந்தது.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in


Next Story