இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 24 Sept 2023 7:00 AM IST (Updated: 24 Sept 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

புதிய இடத்தில் நீங்கள் சமரசம் செய்து கொண்டு, சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உண்மைதான். அதேசமயம் உங்கள் மகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை நீங்கள் செய்வீர்கள். அதனால் உங்களை கவனித்துக்கொள்வது அவருக்கு கூடுதல் சுமையாக இருக்காது.

1. எனது மகன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறான். மிகவும் நன்றாகப் படிப்பான். எப்போதும் வகுப்பில் முதல் மாணவனாக வருவான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவனுடைய பிறந்தநாளை முன்னிட்டு, அவனுக்கு ஸ்மார்ட் போனை பரிசளித்தோம். அன்று முதல் படிப்பில் அவனது கவனம் குறைய ஆரம்பித்தது. தொடர்ந்து வந்த தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்ததால் அவனைக் கண்டித்தோம். இருப்பினும் அவனால் மொபைல் போன் பயன்படுத்துவதை குறைக்க முடியவில்லை. பொதுத் தேர்வு நெருங்கி வரும் வேளையில் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை. வழிகாட்டுங்கள்.

பொதுத் தேர்வுக்கு படிக்க வேண்டிய நேரத்தில் மொபைல் போன் வாங்கிக் கொடுத்தது உங்களுடைய தவறாகும். மொபைல் போனில் மூழ்குவது என்பது மது, புகை போன்ற போதைப் பழக்கங்களை போன்றதாகும். 17 வயது சிறுவனுக்கு மொபைலைப் பயன்படுத்துவதன் மூலம் 'டோபமைன்' எனும் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும். அதுவே அவனுக்கு மகிழ்ச்சியை தருவதால், படிப்பில் அவனது கவனம் குறைய ஆரம்பிக்கும். இதை உடனேயே முழுவதுமாக நிறுத்துவது சாத்தியமற்றது. எனவே உங்கள் மகன் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பியுங்கள். முதலில் ஒரு மணி நேரம் படிப்பு, அரை மணி நேரம் மொபைல் பயன்பாடு என்று வரையறையை நிர்ணயம் செய்யுங்கள். பின்பு ஒன்றரை மணி நேரம் படிப்பு என கல்விக்கான நேரத்தை அதிகப்படுத்தி, மொபைல் பயன்பாட்டுக் கான நேரத்தைக் குறைக்க முயற்சிக்கவும். இது உங்களுக்கும், உங்கள் மகனுக்கும் சிரமமாகவே இருக்கும். இருந்தாலும் அவருக்கு உங்களுடைய முழு ஆதரவையும் வழங்குங்கள்.

2. எனக்கு வயது 64. எனது மகன் இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். மகள், கணவர் வீட்டில் மாமனார்-மாமியாரோடு கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். நானும், கணவரும் சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் எங்களின் பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்தோம். எனது மகன் உயிரோடு இருக்கும்போதே, மருமகள் சொத்துக்களை தனது பெயரில் மாற்றி எழுதிக் கொண்டார். இப்போது எங்களுக்கு எந்த உதவியும் செய்வது இல்லை. நானும், கணவரும் தனிமையில் வாழ்ந்து வருகிறோம். எனது மகள் தங்கள் வீட்டில் வந்து வசிக்குமாறு அழைக்கிறார். எங்களுக்கு தயக்கமாக உள்ளது. இந்த நிலையில் நாங்கள் என்ன செய்வது?

நீங்கள் உங்கள் மகனை இழந்தது துரதிருஷ்ட வசமானது. மருமகள் உங்களை கவனித்துக்கொள்ளாத சூழ்நிலையில், உங்கள் மகள் தங்கள் வீட்டில் வந்து வசிக்குமாறு அழைக்கிறார் என்கிறீர்கள். இதை நீங்கள் ஏற்றுக்கொள்வதே உங்களுக்கு நல்லது. மகளுடைய வீட்டில் பொறுத்துக் கொண்டு வாழ முடியாது என்று நினைக்கிறீர்களா அல்லது சமூகத்துக்காக யோசிக்கிறீர்களா? இந்த அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் சிரமப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புதிய இடத்தில் நீங்கள் சமரசம் செய்து கொண்டு, சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உண்மைதான். அதேசமயம் உங்கள் மகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை நீங்கள் செய்வீர்கள். அதனால் உங்களை கவனித்துக்கொள்வது அவருக்கு கூடுதல் சுமையாக இருக்காது. உங்களுடைய வாழ்க்கை சற்று வித்தியாசமாக இருந்தாலும் சிறப்பாக இருக்கும்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in


Next Story