இப்படிக்கு தேவதை
கருத்துக்களை வெளிப்படுத்தும்போது, ஒருவரின் மனதுக்குள் மற்றவரை பற்றி எவ்வித கணிப்போ, முடிவோ இல்லாமல் கவனிக்க சொல்லுங்கள். அப்போதுதான் ஒருவரின் மனதில் உள்ள உண்மையான எண்ணத்தை, மற்றவர் புரிந்துகொள்ள முடியும்.
1. எனக்கு 26 வயது ஆகிறது. நான் 5 வருடங்களாக ஒருவரை காதலித்து வருகிறேன். எங்கள் காதல் இரு வீட்டாருக்கும் தெரியும். நாங்கள் இருவருமே நல்ல வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால், எனது காதலர் மாற்றுத்திறனாளி என்பதால் திருமணத்திற்கு எங்கள் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 40 வயதுக்கு மேல் அவரது உடல்நிலை பாதிக்கப்படுமோ என்று அஞ்சுகின்றனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். இந்த சூழ்நிலையை சுமுகமாக கையாள்வது எப்படி?
உங்கள் காதலர் உடல் ரீதியாக எத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார் என்று நீங்கள் குறிப்பிடவில்லை. வயதை அடிப்படையாக வைத்து ஒருவரின் உடல்நிலையை கணிக்க முடியாது. உங்கள் காதலரின் உடல்நிலை பற்றிய தெளிவான தகவல்களை, நீங்கள் உங்களுடைய பெற்றோருக்கு தெரியப்படுத்துவது நல்லது. தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெறுங்கள். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு, சரியான தகவல்களை தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் செயல்படுங்கள். இதுவே உங்கள் இருவருக்கும், எதிர்காலம் குறித்த நிறைவான மனநிலையைக் கொடுக்கும்.
2. நான் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறேன். என்னுடைய தாயார், எனது தம்பி மற்றும் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். மாமியார்-மருமகள் இருவரின் குணமும் பல விஷயங்களில் ஒன்றாக இருக்கும். ஆனால், சில நேரங்களில் அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் ஒருவர் மற்றவரின் மனம் புண்படும்படியாக நடந்துகொள்கிறார்கள். இருவரையும் சமாதானப்படுத்தும் பொறுப்பை என் தம்பி என்னிடம் கொடுத்துவிடுகிறார். நான் தலையிட்டால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும் என்று நினைக்கிறேன். இந்த சூழ்நிலையைச் சீராக்குவது எப்படி?
நீங்கள் அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள தகவல் தொடர்பை சீராக்க முயற்சிக்கலாம். உங்கள் தாயும், தம்பியின் மனைவியும் நடுநிலையான மன நிலையில் இல்லை. அவர்களுக்கு நீங்கள் அறிவுரை வழங்குவதை விட, அவர்களையே மனம்விட்டு பேசி நல்ல முடிவை எடுக்கும்படி கூறலாம். கருத்துக்களை வெளிப்படுத்தும்போது, ஒருவரின் மனதுக்குள் மற்றவரை பற்றி எவ்வித கணிப்போ, முடிவோ இல்லாமல் கவனிக்க சொல்லுங்கள். அப்போதுதான் ஒருவரின் மனதில் உள்ள உண்மையான எண்ணத்தை, மற்றவர் புரிந்துகொள்ள முடியும். அதுவே அவர்களுடைய உறவுக்கு, ஒரு உணர்வுப் பாதுகாப்பை கொடுக்கும். நீங்களும், உங்கள் தம்பியும், அவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளை மேம்படுத்துபவராக மட்டுமே செயல்படுங்கள். இதன் மூலம் உறவுகளுக்குள் ஏற்படும் தேவையில்லாத எண்ண மாற்றங்களையும், கருத்து வேறுபாடுகளையும் தடுக்க முடியும்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in