இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 3 Sept 2023 7:00 AM IST (Updated: 3 Sept 2023 7:01 AM IST)
t-max-icont-min-icon

நீங்கள் ஒரு தாயாகி குழந்தையை அரவணைத்து வளர்க்க விரும்பலாம். ஆனால், தாய்மையோடு உங்களுக்கு பெரிய பொறுப்புகளும் காத்திருக்கின்றன. அவற்றை நீங்கள் மட்டும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறீர்களா? என்று உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்.

1. ன் அக்காவுக்கு 3 மகள்கள். மூத்த மகள்கள் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டார்கள். சில வருடங்களுக்கு முன்பு அக்காவின் கணவர் உடல்நலக்குறைவால் காலமானார். தற்போது எனது அக்காவும், 30 வயதை நெருங்கிய அவரது கடைசி மகளும் மட்டும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் உறவினரின் மகன், கடைசி மகளை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். அவரது தாயாரோ, காதல் திருமணம் செய்த மூத்த மகள்கள் எந்தவிதத்திலும் எனது அக்காவையோ, கடைசி மகளையோ தொடர்புகொள்ளக் கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார். இந்த நிலையில் எவ்வாறு இவர்களின் திருமணத்தை நடத்தி வைப்பது?

திருமணத்துக்கு முன்பே அந்த நபரின் தாயார் விதிமுறைகளை விதிக்கிறார் என்பதும், அதற்கு அந்த நபர் எந்தவிதமான எல்லைகளையும் வகுக்கவில்லை என்பதும் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயமாகும். இத்தகைய சூழ்நிலையில் இந்த திருமணம் நடந்தால், உங்களுடைய சகோதரியின் மகளுடைய வாழ்க்கைத் தரம் எவ்வாறு இருக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும். மூத்த மகள்கள் தங்கள் தாயுடன் பேசக்கூடாது என்று, இளைய மகளுடைய மாமியார் கூறினால் அது அவர் வரம்புகளை மீறுவதாகும். அவருடைய மகனால், தான் திருமணம் செய்யப்போகும் பெண்ணின் சார்பாக பேச முடியாதது, திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். உங்களுடைய சகோதரியின் மகள் இந்த வரனை ஏற்றுக்கொண்டால், அவர் தன்னுடைய ரத்த உறவுகளை மறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எது வேண்டும் என்பதை அவரே தேர்வு செய்ய வேண்டும்.

2. எனக்கு திருமணம் நடந்து 3 வருடங்கள் ஆகிறது. என்னுடைய கணவருக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் இல்லை. "பிரசவம், மருத்துவம், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளின் கல்வி என பொருளாதார ரீதியில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும். அதனால் நமக்கு குழந்தை வேண்டாம்" என்கிறார். "நான் வேலைக்குச் சென்று குடும்ப செலவுக்கு உதவுகிறேன்" என்று சொன்னாலும் மறுக்கிறார். எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள மிகவும் ஆசையாக இருக்கிறது. எனது கணவரின் எண்ணத்தை மாற்றுவது எப்படி?

குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் உங்கள் கணவர் தெரிவிக்கும் கருத்து ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் தாய்மையை உங்களால் சரியான முறையில் கையாள முடியுமா? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு தாயாகி குழந்தையை அரவணைத்து வளர்க்க விரும்பலாம். ஆனால், தாய்மையோடு உங்களுக்கு பெரிய பொறுப்புகளும் காத்திருக்கின்றன. அவற்றை நீங்கள் மட்டும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறீர்களா? என்று உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். 'உங்களால் முடியும்' என்று உறுதியாக நீங்கள் நம்பினால், உங்கள் கணவரை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அதே சமயம் பொருளாதார ரீதியில் உங்களை பலமாக்கிக்கொள்ளும் அத்தனை முயற்சிகளையும் செய்யுங்கள். அதன்மூலம் உங்கள் கணவர் குறிப்பிடும் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும். இவ்வாறு தான் உங்கள் கணவருடைய எண்ணத்தை மாற்ற முடியும்.


வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in


Next Story