இப்படிக்கு தேவதை
உங்கள் மகன் அவருடைய நினைவுகளை உங்களுக்காக விட்டுச் சென்றிருக்கிறார். அவற்றுடன் நீங்கள் ஒன்றி இருக்கும்போது, அவரோடு இருக்கும் உணர்வை உங்களால் பெற முடியும். அதைக்கொண்டு புதிய நல்ல நினைவுகளை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.
1. எனக்கு 55 வயது ஆகிறது. என்னுடைய ஒரே மகன் சமீபத்தில் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு இறந்தான். சில நாட்களிலேயே மருமகள் குழந்தைகளோடு தாய் வீட்டுக்கு சென்று விட்டாள். மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் நானும், எனது கணவரும் தனிமையில் வாடுகிறோம். பேரக்குழந்தைகளையும் தொடர்புகொள்ள முடியவில்லை. எந்த செயலிலும் ஈடுபட முடியாமல் இருக்கிறோம். இதில் இருந்து மீண்டு வாழ்நாளை நிம்மதியாக கழிக்க வழி சொல்லுங்கள்.
இது உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு. உங்கள் மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கும் இந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்கு போதுமான அவகாசம் தேவை. உங்கள் மகன் அவருடைய நினைவுகளை உங்களுக்காக விட்டுச் சென்றிருக்கிறார். அவற்றுடன் நீங்கள் ஒன்றி இருக்கும்போது, அவரோடு இருக்கும் உணர்வை உங்களால் பெற முடியும். அதைக்கொண்டு புதிய நல்ல நினைவுகளை உருவாக்க முயற்சி செய்யுங்கள். உதாரணத்துக்கு, அவரை இழப்பதற்கு காரணமாக இருந்த நோய் பற்றி பேசி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் மகனைப் போன்ற பலரது வாழ்வை காப்பதற்கு காரணமாக இருப்பீர்கள். உங்கள் மகனின் ஆத்ம சாந்திக்கும் இது உதவும். இந்த சோகத்தில் இருந்து உடனே வெளியில் வர முயற்சிக்காதீர்கள். இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு உங்களுக்கு அதிக நேரம் தேவைப்படும். மாற்றங்கள் மெதுவாக நிகழும். உங்கள் மகனின் நினைவாக நீங்கள் செய்யும் சேவைகள் உங்களை பலப்படுத்தும்.
2. நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். சமீபத்தில் கல்லூரி தோழிகளுடன் வெளியே சென்றபோது, என்னுடைய தந்தை மற்றொரு பெண்ணுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றதைப் பார்த்தேன். அவரும் என்னை பார்த்தார். உடனே அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஏதேதோ சொல்லி மழுப்பினார். வீட்டுக்கு சென்று தனிமையில் கேட்டபின்பு அவருக்கும், அந்த பெண்ணுக்கும் தவறான தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டார். இதை என்னுடைய தாயிடமோ, குடும்பத்தினரிடமோ கூற வேண்டாம் என்று என்னுடைய காலில் விழுந்து அழுதார். அந்த தொடர்பில் இருந்து எவ்வாறு அவரை விடுவிப்பது? இதைப் பற்றி நான் எனது தாயிடம் சொல்லலாமா?
உங்கள் தந்தையின் தவறான உறவைப் பற்றி நீங்கள் அறிந்தது துரதிருஷ்டவசமானது. அவருடைய இந்த உறவுக்கு வழிவகுத்தது எது என்பதைக் கண்டறியுங்கள். அதில் இருந்து வெளிவருவதற்கு ஏதாவது உதவி தேவையா? என்று கேளுங்கள். அவர் உண்மையாகவே அதில் இருந்து வெளியே வர விரும்புகிறாரா அல்லது அவர் கையும் களவுமாக பிடிபட்டதால் உங்களிடம் இவ்வாறு சொல்கிறாரா என்பதை ஆராயுங்கள். அவருக்கு உண்மையிலேயே உதவி தேவை என்று நீங்கள் உணர்ந்தால், இந்த உறவில் இருந்து வெளியே வருவதற்கு அவருக்கு கால அவகாசம் கொடுங்கள். அதற்குள் அவரால் அதைச் செய்ய முடியாவிட்டால், இந்த விஷயத்துக்கு தீர்வுகாண நம்பகமான குடும்ப உறுப்பினரின் உதவியைப் பெறுங்கள். அப்போதும் மாற்றம் எதுவும் நடக்கவில்லை என்றால், உங்கள் தாயிடம் விஷயத்தைக் கொண்டு செல்லுங்கள். இது தொடர்பாக அவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் ஆதரவு அளியுங்கள்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in