வருமானம் தரும் நக அலங்காரம்


வருமானம் தரும் நக அலங்காரம்
x
தினத்தந்தி 25 Sept 2022 7:00 AM IST (Updated: 25 Sept 2022 7:01 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப விழாக்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, அணிந்திருக்கும் ஆடைகளுக்கு பொருத்தமாக நகத்திற்கும் அலங்காரம் செய்து கொள்வது இன்றைய டிரெண்டாக உள்ளது.

"கை நகங்களை நீளமாக வளர்த்து, அதில் அழகாக வண்ணம் பூசி, அதன் மேல் அலங்கரிப்பது தனிக்கலை. இதைக் கற்றுக்கொள்ளவும், செயல்படுத்தவும், பொறுமையும், கலை உணர்வும் அவசியம். இன்றைய பேஷன் உலகில் நக அலங்கரிப்புக்குத் தனி இடம் உண்டு" என்று பேச ஆரம்பித்தார் ஷாரஞ்சனி.

சென்னையில் வசிக்கும் கல்லூரி மாணவியான இவர், நக அலங்காரத்தைப் பொழுதுபோக்காகக் கற்றுக் கொண்டு, பகுதிநேரத் தொழிலாக செய்து வருமானம் ஈட்டுகிறார். அவரது பேட்டி…

"குடும்ப விழாக்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, அணிந்திருக்கும் ஆடைகளுக்கு பொருத்தமாக நகத்திற்கும் அலங்காரம் செய்து கொள்வது இன்றைய டிரெண்டாக உள்ளது.

அழகுக்கலை படிப்பில், நகங்களை அலங்கரித்தல் பற்றி தனிப் பாடம் உண்டு. வெளிநாடுகளில் இதற்கு வரவேற்பு அதிகம்.

எனக்கு 'நெயில் ஆர்ட்' மீது ஆர்வம் இருந்தது. நான் அழகான பல வண்ண நகப்பூச்சுக்களின் காதலி. ஷாப்பிங் செல்லும் போதெல்லாம் என் கண்கள் நகப்பூச்சு வைத்திருக்கும் இடங்களைத் தேடிக் கண்டுபிடித்துவிடும். பேஸ்டல், பிரைட், கிளாசி பினிஷ், மேட் பினிஷ் என விதவிதமான நிறங்களில் பல வகையான நகப்பூச்சுக்களை சேகரித்து வைத்திருக்கிறேன்.

நக அலங்காரத்திற்கு என்றே சிறிய கற்கள், ஜிகினாத் தூள்கள், ஸ்டிக்கர்கள், செயற்கை நகங்கள் என பல பொருட்கள் உண்டு. நக அலங்காரம் செய்வதற்கு பிரஷ் போன்ற சிறிய உபகரணங்களும் உள்ளது.

தொடக்கத்தில் என் நகங்களை அலங்கரித்துக் கொள்வதற்காக 'நெயில் ஆர்ட்' பற்றி பல தகவல்களை சேகரித்துக் கற்றுக் கொண்டேன். அதை செயல்படுத்தும்போது, அதிலிருக்கும் நுணுக்கங்களை அறிந்தேன். அமெரிக்காவில் வசிக்கும் என் உறவினர் அங்கிருந்து நக அலங்காரத்துக்கான சில உபகரணங்களைப் பரிசாக அனுப்பி வைத்திருந்தார். சிகாகோவில் படித்துக் கொண்டிருக்கும் என் தோழி ஸ்வாதியும் அவ்வப்போது நக அலங்காரப் பொருட்களைப் பரிசாக அளிப்பார். நாங்கள் இருவரும் இணைந்து சில புதிய நக அலங்காரங்களை முயற்சித்துப் பார்ப்பது வழக்கம். இவ்வாறு படிப்படியாக நக அலங்காரத்தில் தேர்ச்சி பெற்றேன்.

எனது நகங்களை அலங்கரித்திருப்பதைப் பார்த்த தோழிகளும், தெரிந்தவர்களும், தங்களுக்கும் அதை செய்து விடுமாறு கேட்டனர். இப்படிதான் மற்றவர்களுக்கு நக அலங்காரம் செய்யத் தொடங்கினேன். இன்று அதுவே பகுதி நேர வேலையாக மாறிவிட்டது. நக அலங்காரம் கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு அடிப் படைப் பயிற்சிகளும் அளிக்கிறேன்."

இவ்வாறு நக அலங்காரம் பற்றிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் ஷாரஞ்சனி.


Next Story