நடனத்தில் அசத்தும் யோகா ஆசிரியை வைஷ்ணவி


நடனத்தில் அசத்தும் யோகா ஆசிரியை வைஷ்ணவி
x
தினத்தந்தி 29 Oct 2023 7:00 AM IST (Updated: 19 Nov 2024 1:21 PM IST)
t-max-icont-min-icon

யோகா பயிற்சி செய்வதால் ஞாபக சக்தி அதிகரித்தது. எல்லாவற்றையும் புரிந்து படிப்பதால் உடனேயே ஞாபகம் வைத்துக்கொள்ளவும் முடிகிறது.

ந்தோனேஷியா, தாய்லாந்து, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பல தங்கப் பதக்கங்களை வென்றவர் வைஷ்ணவி. யோகா பயிற்சி செய்வதால் உடலில் ஏற்பட்ட நெகிழ்வுத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு தற்போது நடனத்தில் அசத்தி வருகிறார். தனது பயிற்சி வகுப்புகளின் மூலம், பலருக்கும் யோகா கலையின் நன்மைகளை எடுத்துரைக்கிறார். யோகா பயிற்சியில் தன்னை மென்மேலும் மெருகேற்றிக் கொண்டு, அதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று முயற்சித்து வரும் வைஷ்ணவியின் பேட்டி.

"திருப்பூர் எனது பூர்வீகம். தற்போது கோவை கருமத்தம்பட்டியில் வசித்து வருகிறேன். பள்ளி மற்றும் இளங்கலை விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பையும் இங்குதான் முடித்தேன். தற்போது சமூகப்பணி குறித்த படிப்பில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.

சிறு வயதில் இருந்தே எனக்கு யோகா கலையின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. அதனால் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் யோகாவை முழுமையாகக் கற்றுக் கொண்டேன். என்னுடைய 9-வது வயதில் இருந்து யோகா பயிற்சி செய்து வருகிறேன். தற்போது எனக்கு 20 வயது ஆகிறது.

பள்ளியில் கூடுதல் பாடமாக யோகாவை கற்றுக் கொண்டேன். என்னுடைய ஆர்வத்தை கண்ட ஆசிரியர் என்னை மேலும் ஊக்குவித்தார். அதன்பிறகு யோகா பயிற்சி நிறுவனம் ஒன்றில் இணைந்து யோகா கலையில் என்னை மேம்படுத்திக் கொண்டேன்.

தற்போது யோகா பயிற்சி பட்டறையை தொடங்கி, அதன் மூலம் பலருக்கும் கற்றுக் கொடுத்து வருகிறேன். பல மேடைகளில் யோகா பயிற்சியில் சாதனைகளை நிகழ்த்தி உள்ளேன். தற்போது நடனக் கலைஞராகவும் இருக்கிறேன்.

என்னுடைய தந்தை சரவணகுமார் யோகா கலையின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தை உணர்ந்து எனக்காக தானும் யோகா கற்றுக் கொண்டார். யோகா கலையில் என்னுடைய திறமைகளை அறிந்த, தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் சி.இ.ஓ. அனுஷா ரவி, எனக்கும், என் தங்கைக்கும் இலவச கல்வி வழங்க ஏற்பாடு செய்தார். அவரது உதவியால் படித்துக்கொண்டு, பல்வேறு வகையில் எனது திறமையை வெளிப்படுத்தி வருகிறேன்".

யோகாவின் மூலம் நீங்கள் பெற்ற நன்மைகள் என்ன?

நான் கடந்த 11 வருடங்களாக யோகா பயிற்சி செய்து வருகிறேன். சிறு வயதில் எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும். ஆனால், நான் யோகா பயிற்சி செய்யத் தொடங்கியது முதல் தற்போது வரை எவ்விதமான உடல்நலக்குறைவும் ஏற்பட்டது இல்லை. மாதவிடாய் நாட்களில் வலியால் சிரமப்பட்டது இல்லை. படிக்கும்போது எளிதாக மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க முடிகிறது.

யோகா பயிற்சி செய்வதால் ஞாபக சக்தி அதிகரித்தது. எல்லாவற்றையும் புரிந்து படிப்பதால் உடனேயே ஞாபகம் வைத்துக்கொள்ளவும் முடிகிறது.

நீங்கள் புரிந்த சாதனைகள் பற்றி சொல்லுங்கள்?

கால் பாதங்களை கொண்டு 6 முட்டைகளை 'கான்ட்ரோசன் செஸ்ட்' முறையில் 18.28 நொடிகளில் எடுத்து சாதனை படைத்துள்ளேன். நாடியால் உடலை தாங்கிக்கொண்டு 26.33 நிமிடங்கள் நின்று சாதனை படைத்துள்ளேன். சக்ராசனத்தில் 12 நிமிடங்கள் 1.27 நொடிகள் வரை இருந்து சாதனை செய்துள்ளேன். திம்பாசன நிலையில் முதுகுக்கு இடையே 3 பலூன்களை வைத்து 6.84 நொடிகளில் அவற்றை உடைத்து சாதனை படைத்துள்ளேன். அதே சக்ரா சனத்தில் 18 நிமிடங்கள் 13 நொடிகள் வரை இருந்து, நான் முன்பு செய்த சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளேன்.

நீங்கள் நிகழ்த்திய உலக சாதனைகள் பற்றி சொல்லுங்கள்?

இந்தோனேஷியா, தாய்லாந்து, சீனா, மலேசியா, இலங்கை, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளேன். ஐரோப்பா வில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு ஓவர் ஆல் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தேன். 2014-ம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில், இந்திய அளவில் 6-வது இடத்தை பிடித்தேன். 2022-ம் ஆண்டு நடைபெற்ற 36-வது நேஷனல் விளையாட்டு போட்டிகளில், யோகாவில் ஆர்டிஸ்டிக் தனிப்பிரிவில் தங்கமும், பொதுப்பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளேன்.

நடனக் கலைஞராக உங்களது அனுபவங்கள் குறித்து சொல்லுங்கள்?

யோகா பயிற்சியின் மூலமாகவே நான் நடனக் கலைஞராக மாறி இருக்கிறேன். யோகா பயிற்சி செய்வதால் எனக்கு உடலில் ஏற்பட்ட நெகிழ்வுத்தன்மை காரணமாக நடனத்தில் எனது திறமையை வெளிப்படுத்தினேன். கடந்த நான்கு வருடங்களாக நடன ஆசிரியர் சந்தோஷ் மூலம் நடனம் கற்று வருகிறேன். அதன்மூலம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். மேலும் பல மாநிலங்களில் நடைபெற்ற நடனப் போட்டிகளிலும் கலந்து கொண்டு, எனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறேன்.

இதுவரை நீங்கள் வாங்கிய விருதுகள் பற்றி கூறுங்கள்?

உமன் அச்சீவர் அவார்டு 6 முறையும், சவுத் இந்தியன் லிட்டில் சாம்ப் விருது 2 முறையும் பெற்றிருக்கிறேன். ரப்பர் கேல் ஆப் இந்தியா, இளம் யோகி, யோக நட்சத்திரா, கோமகள், தங்கப் பெண்ணே உள்பட 14 வகையான விருதுகளை வாங்கி இருக்கிறேன்.

உங்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு எவ்வாறு உள்ளது?

என்னுடைய தந்தை கபடி விளையாட்டு வீரர். அவருடைய இளமை பருவத்தில் போதுமான வசதி இல்லாதது மற்றும் வீட்டு சூழ்நிலைக் காரணமாக அவரால் கபடியில் சாதிக்க முடியவில்லை. யோகா மீது எனக்கு ஆர்வம் இருப்பதை உணர்ந்ததும் நான் அதில் சாதிக்க வேண்டும் என்று என்னை ஆயத்தப்படுத்தியவர் அவர்தான். ஆரம்பத்தில் என்னை விமர்சித்த பலரும் தற்போது என்னுடைய திறமையைக் கண்டு பாராட்டுகிறார்கள்.

உங்கள் எதிர்கால திட்டம் என்ன?

பலரும் பயன்பெறும் வகையில் என்னுடைய யோகா பயிற்சி பட்டறையை தமிழ்நாடு முழுவதும் விரிவு படுத்த வேண்டும். யோகாவில் என்னை மென்மேலும் வளர்த்துக்கொண்டு இந்தியா சார்பாக பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்.


Next Story