பாரம்பரிய கலைகளை பெண்கள் கற்க வேண்டும் - நிவேதா


பாரம்பரிய கலைகளை பெண்கள் கற்க வேண்டும் - நிவேதா
x
தினத்தந்தி 27 Aug 2023 7:00 AM IST (Updated: 27 Aug 2023 7:01 AM IST)
t-max-icont-min-icon

எந்த விளையாட்டிலும் ஈடுபடாமல், உடல் உழைப்பு இல்லாமல் இருக்கும் பல பெண்களுக்கு கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை ஏற்படுகிறது. என்னுடன் சேர்ந்து சிலம்பப் பயிற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவும் இல்லை. மேலும் அவர்களுக்கு பிரசவமும் எளிதாக நடைபெற்றது.

த்தனையோ தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் தாண்டி, முயற்சியால் பெண்கள் தற்போது பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக காலூன்றி வருகிறார்கள். இருந்தாலும் விளையாட்டுத்துறையில் பெண்களின் பங்களிப்பு சற்று குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக, திருமணமான பெண்கள் விளையாட்டுத் துறையில் தொடர்ந்து ஈடுபடுவது குறைவுதான். அதிலும் பாரம்பரிய விளையாட்டுகளில் தொடர்ந்து நீடிப்பது வெகு சிலரே. அந்த வரிசையில், 25 வயதான நிவேதா திருமணத்துக்கு பின்னும் சிலம்பத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தான் கற்ற பாரம்பரிய கலையை தன்னைப் போன்ற பெண்களுக்கும், மாணவர்களுக்கும் கற்பித்து வரும் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு...

"எனது பூர்வீகம் ராமநாதபுரத்திலுள்ள களரி கிராமம். ஆனால் என்னுடைய குழந்தைப் பருவத்திலேயே குடும்பத்துடன் கோயம்புத்தூருக்கு குடிபெயர்ந்தோம். நான் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே, எனது தந்தை பெரியசாமி படிப்பை விட விளையாட்டில் ஈடுபடுவதற்கு என்னை அதிக அளவு ஊக்கப்படுத்தினார். பெண்ணாக இருந்தாலும், நான் அனைத்து விதமான கலைகளிலும் பயிற்சி பெற வேண்டும் என்று உற்சாகப்படுத்தினார்.

6 வயதிலேயே என்னை சிலம்பம் வகுப்பில் சேர்த்து விட்டார். இதற்கு என்னுடைய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சமயங்களில் எல்லாம் என்னுடைய அம்மா அருணா, அவர்களை சமாதானப்படுத்தி எனக்கு உறுதுணையாக இருந்தார். என்னுடைய குரு துரோணாச்சார்யா அங்கப்பன் எனக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்தார்.

நான் சிலம்பம் கற்றுக்கொண்ட ஆரம்பகாலத்தில், என்னுடைய வகுப்பில் என்னைத் தவிர எல்லோரும் ஆண்கள். இதனால் சில சிரமங்களை எதிர்கொண்டாலும் நாளடைவில் பழகிக்கொண்டேன். நான் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்லும் நேரத்தில், விளையாட்டுப் பிரிவுக்கான கோட்டாவில் சிலம்பம் இடம்பெறவில்லை. இதனால் கராத்தே கற்று 'பிளாக் பெல்ட்' வாங்கினேன். பாக்ஸிங்கும் கற்றுக்கொண்டேன். அதன் மூலமாகவே கல்லூரியில் சேர்ந்தேன். தொடர்ந்து சிலம்பம், டேக்வாண்டோ போட்டிகளில் கலந்துகொண்டு, மாவட்ட மற்றும் மாநில அளவில் பல பதக்கங்களை வென்றேன்.

2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட 'முதல்-அமைச்சர் கோப்பை' போட்டியில் கலந்துகொண்டு பாக்ஸிங் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். அதைத் தொடர்ந்து கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றேன். அதே ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற தெற்கு ஆசிய அளவிலான போட்டியில் சிலம்பம் பிரிவில் உள்ள நெடுங்கம்பு, நடுகம்பு ஆகிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கமும், சுருள் வாள் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ஆல்ரவுண்டர் பிரிவில் தங்கப்பதக்கமும் வென்றேன்.

2022-ம் ஆண்டு இந்தோ-நேபாள் சர்வதேச போட்டிகளிலும் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றேன். தற்பொழுது பயிற்சியாளராக இருக்கிறேன். ஆரம்பத்தில் 'அப்பா சேர்த்து விட்டார்' என்பதற்காக மட்டுமே விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டேன். ஆனால் நாளடைவில் அதில் ஆர்வம் அதிகரித்து முழுமுயற்சியோடு கற்றுக்கொண்டேன். இப்போது சிலம்பம் என்னுடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது".

விளையாட்டில் உங்களுக்கு முதலில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் பற்றி கூறுங்கள்?

9-ம் வகுப்பு படித்தபோது நான் முதன் முதலாக, மாநில அளவில் நடைபெற்ற தொடுமுறை போட்டியில் கலந்துகொண்டேன். அப்போது என்னை எதிர்த்து போட்டியிட்டவர், போட்டியின் விதிமுறைகளை மீறி மூக்குத்தி அணிந்திருந்தார். தொடுமுறை விளையாட்டில் எதிர்த்து விளையாடுபவரை தொட்டால்தான் நமக்கு மதிப்பெண் கிடைக்கும். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அவருடைய மூக்குத்தியின் மீது கம்பு பட்டதும் அவருடைய மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. இதனால் நான் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருந்த போதும் எனக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டது. அது நான் தவறவிட்ட முதல் தங்கப் பதக்கம் என்பதால் அதை என்னால் மறக்க முடியாது.

நீங்கள் யாரை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறீர்கள்?

எனது ஆசான் துரோணாச்சார்யா அங்கப்பனை தான். தன்னுடைய தந்தையிடம் தான் கற்றுக்கொண்ட கலையை அவர் மற்றவர்களுக்கு கற்பித்து வருகிறார். அவர் எனக்கு கற்றுக்கொடுத்தது களத்தூர் வகை சிலம்பு. தனது 90-வது வயதிலும் மனம் தளராமல் அவரின் சொந்த ஊரில் இருந்து வந்து எங்களுக்கு பயிற்சி கொடுத்தார். அது உண்மையிலேயே மிகவும் அசாதாரணமாக எனக்குத் தோன்றியது. பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை அனைவருமே கற்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.

தமிழ்நாட்டில் சிலம்பம் விளையாட்டில் பெண்களின் நிலை பற்றி உங்கள் கருத்து என்ன?

நகரங்களில் முறையாக சிலம்பம் கற்பிக்கும் பயிற்சியாளர்கள் குறைவாகவே உள்ளனர். நான் கற்றுக்கொண்ட ஆரம்ப காலகட்டத்தில் அனுபவம் பெற்ற மூத்த பயிற்சியாளர்கள் அதிக அளவில் இருந்தனர். ஆனால் தற்பொழுது கிராமத்தில் ஆங்காங்கே தான் அத்தகைய பயிற்சியாளர்களை காண முடிகிறது.

நகரத்தைவிட கிராமங்களில் உள்ள பெண்கள் அதிகளவில் சிலம்பம் கற்றுக்கொள்கின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர், திருமணம் ஆனவுடன் முழுமையாக சிலம்பத்தில் இருந்து விலகி விடுவது வேதனையாக இருக்கிறது. எனவேதான் நான், என் கணவருடைய கிராமத்தில் சிலம்பம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். திருமணத்துக்கு பிறகும் நான் சிலம்ப விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுவதைப் பார்த்த பல பெண்கள் மீண்டும் சிலம்பத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

திருமணத்துக்கு பிறகும் பெண்கள் விளையாட்டில் ஈடுபட வேண்டியதன் அவசியம் என்ன?

எந்த விளையாட்டிலும் ஈடுபடாமல், உடல் உழைப்பு இல்லாமல் இருக்கும் பல பெண்களுக்கு கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை ஏற்படுகிறது. என்னுடன் சேர்ந்து சிலம்பப் பயிற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவும் இல்லை. மேலும் அவர்களுக்கு பிரசவமும் எளிதாக நடைபெற்றது. பலரும் சுகப்பிரசவ முறையில் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். எனவே பெண்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவதோடு, விளையாட்டு பயிற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

சிலம்ப பயிற்சியாளராக சமூகத்துக்கு உங்களுடைய பங்களிப்பு என்ன?

என்னிடம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் சிலம்பம் கற்று வருகிறார்கள். இதில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி கொடுக்கிறேன். கோடை விடுமுறை காலத்தில், என்னுடைய சக பயிற்சியாளர்களுடன் இணைந்து பல்வேறு கிராமங்களுக்கு சென்று இலவசமாக சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறேன்.

சிலம்பம் எல்லா வகையான பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் முதன்மையானது. தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் சிலம்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அதையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும்.


Next Story