அழகான எழுத்துக்களையே தனது அடையாளமாக்கிய வர்ஷிதா
பெண்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் அதனை குடும்பத்தினர் முன்னிலையில் செய்து காண்பிக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் சம்மதத்துடன் தனக்குப் பிடித்த மற்றும் ஏற்ற தொழிலை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்.
தங்களது கனவுகளை நிறைவேற்றத் துடிக்கும் நேரத்தில் அதற்கு தடைகள் வரும்போது, சில பெண்கள் அதை எதிர்த்து போராடுவார்கள். சிலர் துவண்டுப் போய் கனவையே கலைத்து விடுவார்கள். ஆனால் சில பெண்கள் மட்டுமே அந்த இக்கட்டான சூழலிலும், தனக்கான வாய்ப்புகளை உருவாக்கி சாதிப்பார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம், குதிரைச்சந்தல் பகுதியைச் சேர்ந்த வர்ஷிதா, இந்த விஷயத்தில் மூன்றாவது ரகத்தைச் சேர்ந்தவர்.
படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்த வர்ஷிதா, பொறியியல் பட்டம் பெற்றதும் ஐ.டி. துறையில் பணியாற்ற ஆர்வத்துடன் முயற்சி செய்தார். பெண்களை பணிக்கு அனுப்பும் பழக்கம் இல்லாத இவருடைய குடும்பத்தில், இவர் பணியாற்றுவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதையே நினைத்து முடங்கிவிடாமல், சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதற்கான வழிகளைத் தேட ஆரம்பித்தார் வர்ஷிதா. ஓவியக்கலையில் கைதேர்ந்த இவர் அதையே தனக்கான வழியாக தேர்வு செய்தார்.
வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு ஏற்ப ஓவியங்கள் வரைவது மட்டுமில்லாமல், இணையம் வழியாக வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும் ஓவியம் வரைய கற்றுக்கொடுத்து வருகிறார். 'காலிகிராபி' எனப்படும் அழகிய எழுத்துக்கள் வரைவதில் கைதேர்ந்தவர் வர்ஷிதா. ஆங்கில எழுத்துக்களை மட்டுமே பெரும்பாலானவர்கள் எழுதி வரும் வேளையில், காலிகிராபி முறையில் தமிழ் எழுத்துக்களை உருவாக்கி கவனம் ஈர்க்கிறார். தனது கிராமத்தில் உள்ள மற்ற இளம்பெண்களுக்கு உதாரணமாக திகழ்ந்து வரும் வர்ஷிதாவுடன் ஒரு சந்திப்பு.
"சிறுவயதில் இருந்தே எனக்கு ஓவியம் வரைவது பிடிக்கும். இப்போது அதையே தொழிலாக மாற்றி உள்ளேன். ஆன்லைனிலும் ஓவிய வகுப்புகள் எடுத்து வருகிறேன். 3 மாணவர்களுடன் வகுப்பை ஆரம்பித்தேன். இப்பொழுது என்னிடம் 300 மாணவர்கள் பயில்கின்றனர். எனது பரம்பரையிலேயே, நான்தான் தொழில் முனைவோராக வளர்ந்திருக்கும் முதல் பெண். படித்து முடித்ததும் ஐ.டி. பணிக்கு செல்ல நினைத்தேன். குடும்பத்தினர் அதற்கு சம்மதிக்காததால், எனக்கு பிடித்த ஓவியக்கலையை தொழிலாக மாற்றிக்கொண்டேன்.
இன்று பெண்கள் எல்லாத் துறையிலும் கால்பதிக்கத் தொடங்கிவிட்டனர். இருந்தாலும், இப்போதும் பல கிராமங்களில் பெண்கள் சமையல் அறையில் மட்டுமே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்றும் தமிழகத்தின் பல குடும்பங்களில், படித்து முடித்த பெண்களும்கூட தங்களுக்குப் பிடித்த பணிகளில் ஈடுபட முடியாத சூழல் இருக்கிறது. குடும்பம் அவர்களுக்கு உறுதுணையாக நிற்க நினைத்தாலும், சுற்றியுள்ளவர்கள் அவர்களை குழப்ப மனநிலைக்கு தள்ளும் அவலமும் இருக்கத்தான் செய்கிறது. அதுபோலத்தான் எனக்கும் பல தடைகள் இருந்தன. நான் 'நன்றாக படிக்க வேண்டும்' என்ற லட்சியத்தோடு படித்தேன். எனக்கு பிரபல கல்லூரியில் ஸ்காலர் ஷிப்புடன் இடம் கிடைத்தது. எனினும் 'ஒரு பெண் படித்து என்ன செய்ய போகிறாள்?' என்ற பேச்சு என்னை சுற்றிலும் இருந்தது. அதைத் தாண்டி வருவதற்கு நான் பல்வேறு முயற்சிகளை எடுக்க வேண்டிஇருந்தது.
சிறுவயதில் இருந்தே என்னுடைய அம்மா தேவி எனக்கு ஆதரவாக இருந்தார். நான் இரண்டாம் வகுப்பு படித்தபோது, எனக்கு நன்றாக ஓவியம் வரையும் திறமை இருக்கிறது என்பதை அவர்தான் கண்டுபிடித்தார். அதுமட்டுமில்லாமல் அனைவரின் எதிர்ப்பையும் மீறி, குடும்பத்தினரை சம்மதிக்க வைத்து ஓவிய வகுப்பிற்கு அனுப்பினார். என்னுடைய அம்மா என்னை அதிகமாக ஊக்குவிப்பார். எனக்கு முன்மாதிரியும் அவர்தான். என் தந்தை வெங்கடேசன் எனக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கிறார்.
சிறுவயதில் இருந்தே நான் எனது எல்லா உணர்வுகளையும் என்னுடைய ஓவியங்கள் மூலமாகவே பிரதிபலிப்பேன். அதுவே நாளடைவில் ஓவியத்தின் மீதான எனது ஆர்வத்தை அதிகமாக்கியது. ஒவ்வொரு ஓவியத்தையும் வரைந்து முடிக்க பல மணி நேரங்கள் ஆகும். அதனால் எனது வேலைகளை அட்டவணைப்படுத்தி சரியான நேரத்தில் முடிக்கிறேன். காலை முழுவதும் ஆர்டர் செய்த ஓவியங்களை வரைந்து கொடுப்பேன். மாலையில் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பேன்.
என்னிடம் குழந்தைகள் முதல் 65 வயது உள்ள பெரியவர்கள் வரை பயில்கிறார்கள். கற்றுக்கொள்ள வயது ஒரு தடையில்லை என்பதை அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். ஓவியம் வரையும்போது சில முதியவர்களுக்கு கைகள் நடுங்கும். அத்தகைய நிலையிலும் 'கற்றுக்கொள்ள வேண்டும்' என்ற ஆர்வத்துடன் அவர்கள் செயல்படுவது என்னை வியப்புக்குள்ளாக்குகிறது. அவர்களுக்கு பிடித்த கலையை கற்றுக்கொள்ளும் திருப்தி, அவர்கள் முகத்தில் தெரிவதை என்னால் உணர முடிகிறது.
தங்களுடைய நெகிழ்ச்சியான தருணங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளவும் செய்கின்றனர். அது என்னை மேலும் உத்வேகப்படுத்துகிறது. நான் 'ரியலிசம்' எனப்படும் தத்ரூப ஓவியங்களை வரைவதில் நன்றாக தேர்ச்சி பெற்றிருப்பதால், பலரும் மறைந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் அவர்களை வரைந்து கொடுக்கச் சொல்வார்கள். நானும் தத்ரூபமாக வரைந்து கொடுப்பேன். இத்தகைய ஓவியங்களை இந்தியாவில் வெகு சிலரே வரைந்து வருகின்றனர். அவர்களின் வரிசையில் நானும் இருப்பது மகிழ்ச்சியே.
ஓவியம் மட்டுமில்லாமல், காலிகிராபி எனப்படும் கையெழுத்துக் கலையையும் கற்றுத் தருகிறேன். வெகு சிலரே தமிழில் காலிகிராபி செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
உங்களை போன்று சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?
பெண்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் அதனை குடும்பத்தினர் முன்னிலையில் செய்து காண்பிக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் சம்மதத்துடன் தனக்குப் பிடித்த மற்றும் ஏற்ற தொழிலை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும். தொழிலை ஆரம்பித்து நன்றாக சம்பாதிக்கத் தொடங்கியவுடன், குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முறையான பயிற்சியும், அனுபவமும் பெற்ற பிறகு அடுத்த கட்டத்துக்கு முன்னேறலாம். வாடிக்கையாளரை கையாளும்போது பொறுமை மிகவும் அவசியம்.
என்னுடைய இந்த வெளிப்பாடு, என்னைப்போன்ற பல கிராமத்து பெண்களையும், அவர்களது திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் என்று நம்புகிறேன்.