சோதனைகளும் சாதனைகளாக மாறும் - லதா


சோதனைகளும் சாதனைகளாக மாறும் - லதா
x
தினத்தந்தி 30 April 2023 7:00 AM IST (Updated: 30 April 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

கைம்பெண் என்று நினைத்து சுபகாரியங்களில் என்னை ஒதுக்கியவர்கள்கூட, இப்போது தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் ஒப்பனை செய்ய அழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதையே என்னுடைய சாதனையாக கருதுகிறேன்.

முன்னணி இணைய தளங்கள் மற்றும் பிரபல தொலைக்காட்சிகளில் கலை, கைவண்ணம், பெண்களின் அழகு சார்ந்த குறிப்புகள் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனக்கென முத்திரைப் பதித்து வருபவர் லதா அருண்குமார். மாதவிடாய், மார்பகப் புற்றுநோய், தாய்ப்பாலின் பெருமை ஆகியவற்றை குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இந்தியா புக் ஆப் ரெக்கார்ட், பிங்க் அம்பாசிடர் என 25-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். சென்னை அனகாபுத்தூரில் பிறந்து தற்போது டெல்லியில் வசித்து வரும் இவர், அங்குள்ள பிற மொழி சார்ந்த மக்களுக்கு தமிழ் வகுப்புகள், குழந்தைகளுக்கான கோடைகால ஓவியப் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார். முதலீடு இன்றி வாழ்க்கையை தொடங்கி, இப்போது பல பெண்களுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். தன்னுடைய வெற்றிப் பயணம் குறித்து லதா அருண்குமார் நம்மிடம் பேசியதில் இருந்து..

உங்களுடைய கல்விப் பயணம், குடும்ப வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்?

என்னுடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள். நான் மட்டும் தான் பெண் என்பதால் பெற்றோர் மிகவும் செல்லமாக வளர்த்தனர். கல்லூரியில் வணிகவியல் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது காதலித்து திருமணம் செய்து கொண்டேன். ஒரு வருடம் கழித்து இரட்டைக் குழந்தைகள் பிறந்து இறந்தன. மீண்டும் ஒரு மகள் பிறந்த 3 ஆண்டுகளில் மூளை காய்ச்சல் காரணமாக கணவரும் இறந்தார். வாழ்க்கையே இருண்டதுபோல தோன்றியது. அப்போது 'கல்வி ஒன்று தான் நம்மை கரை சேர்க்கும்' என்ற நம்பிக்கையோடு முதுகலை படிப்பு, அழகுக் கலையில் டிப்ளமோ என பல்வேறு விதமான படிப்புகளையும் முடித்து பட்டங்களும், சான்றிதழ்களும் பெற்றேன்.

கடன் பெறாமல் தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்து, தோழி ஒருவரோடு மணப்பெண் அலங்காரம் செய்ய ஆரம்பித்தேன். சிறிது சிறிதாக பணம் சேர்த்து ஒப்பனை செய்வதற்கான பொருட்களை வாங்கி, இணையம் மூலமாக வீட்டிலேயே இருந்து பணியைத் தொடங்கினேன். அதில் வெற்றி பெற்றவுடன், தற்போது குழந்தைகளுக்கான ஓவியப் பயிற்சி, கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்ற கோடைகால பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன்.

காகித அலங்காரம், நூலிழை அலங்காரம், மண்பாண்டங்களில் கலை வேலை, வாஸ்து மரம் போன்ற கைவினைப் பொருட்களை தயாரித்து விற்பனையும் செய்கிறேன். கண்ணாடி ஓவியம், ஜரிகை ஓவியம் போன்ற பல ஓவியங்களை வரைந்து வருகிறேன்.

மாதவிடாய், மார்பக புற்றுநோய் பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து சொல்லுங்கள்?

தற்போதைய காலகட்டத்தில் பல பெண் குழந்தைகள் ஒன்பது வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள். 'என்ன நடந்தது?' என்று அவர்களிடம் சொல்லி புரிய வைப்பதற்கு அவர்களின் தாய்மார்கள் சிரமப்படுகிறார்கள். மாதவிடாய் பற்றிய தெளிவு இல்லாததால், தேர்வு நேரங்களில் ரத்தப்போக்கு ஏற்படும் வேளையில் அந்தக் குழந்தைகள் தடுமாறும் நிலை உண்டாகிறது.

பல தாய்மார்கள் இதைப்பற்றி வேதனையுடன் என்னிடம் பரிமாறிக் கொள்வார்கள். நான் அந்தக் குழந்தைகளுக்கு புரியும் வகையில் நட்புணர்வுடன் மாதவிடாய் பற்றிய விஷயங்களை எடுத்துரைக்கிறேன். அடுத்து, மார்பகப் புற்றுநோய் பெண்களை மட்டுமில்லாமல் ஆண்களையும் தாக்கி வருகிறது. இதற்காக சில சமூக அமைப்புகளோடும், தனியாகவும் சென்று பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

மணப்பெண் ஒப்பனையில் ஏதாவது புதிய யுக்திகளை கையாள்கிறீர்களா?

தற்போது மணமக்கள் இருவருமே திருமணத்திற்கு ஒப்பனை செய்து கொள்கின்றனர். அதனால் ஒரே நாளில், ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் ஒப்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகையால் என்னிடம் பணியாற்றும் சக தோழிகளையும் அழைத்துக் கொள்வேன். இப்போது அனைவரும் 'நியூட் மேக்கப்' எனப்படும் முகத்தின் சாயல் மாறாமல் இயற்கையாகவும், அழகாகவும் காட்டக்கூடிய ஒப்பனையை விரும்புகின்றனர். அதை நான் சிறப்பாக செய்வதால் பாராட்டும், வர்த்தக ரீதியான மதிப்பும் கிடைக்கிறது.

இது ஒருபுறம் இருந்தாலும் கலை சார்ந்த கருப்பொருள் ஒன்றை மையமாக வைத்துக்கொண்டு ஒப்பனை செய்வதையும் தொடர்ந்து வருகிறேன். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மூன்று பெண் தெய்வங்கள், நோய்க்கிருமியை திரிசூலத்தால் குத்துவது போன்ற கருப்பொருளை சித்தரித்து காட்சிப் படுத்தினேன். அதற்கு சமூக வலைத்தளங்களில் வரவேற்பு கிடைத்தது. தமிழர் பாரம்பரியத்தில் மறந்து போன விளையாட்டுகளை மையமாகக் கொண்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் பல்லாங்குழி, பரமபதம், நொண்டி விளையாடுவது, வீட்டுப் பணிகள் செய்வது, குளத்தில் இறங்கி குளிப்பது, இடுப்பில் தண்ணீர் குடம் தூக்குவது போன்ற காட்சியமைப்புகளை கட்டமைத்திருக்கிறேன். இனிவரும் காலங்களில் பாலியல், பெண்களின் வளர்ச்சி போன்ற கருப்பொருட்களை காட்சிப்படுத்த முடிவு செய்திருக்கிறேன்.

வெளி மாநிலத்தில் தமிழை வளர்ப்பதற்கு நீங்கள் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து சொல்லுங்கள்?

இலக்கிய, அறிவியல் சான்றுகளால் 'உலகில் மனிதன் பேசிய முதல் மொழி தமிழ்' என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். 'அரிக்க மேடு' அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மண்பாண்ட ஓடுகளில் 'பிராமி' எழுத்துகள் இருப்பதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியின் மீது எனக்கு தீராத காதல் உண்டு. சென்னையில் இருந்து டெல்லிக்கு புலம்பெயர்ந்த பிறகு நம்முடைய அடையாளம் தனிப்பட்டதாகவும், தமிழ் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். 'டெல்லி தமிழச்சி' என்ற பெயரில் சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழ் சார்ந்த பதிவுகள், படைப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறேன்.

தனிநபராக முயற்சித்து சாதனைகளை உங்கள் வசமாக்கும் அனுபவம் பற்றி கூறுங்கள்?

தன்னந்தனியாக, ஒரு பெண் குழந்தையின் தாயாக, இந்த சமூகத்தில் நான் கடந்து வந்த பாதைகள் எனக்கு வெற்றியை பரிசளித்தது. விருதுகளையும், புகழையும் கடும் உழைப்பினால் பெற்றிருக்கிறேன். கைம்பெண் என்று நினைத்து சுபகாரியங்களில் என்னை ஒதுக்கியவர்கள்கூட, இப்போது தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் ஒப்பனை செய்ய அழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதையே என்னுடைய சாதனையாக கருதுகிறேன்.


Next Story