தன்னம்பிக்கையே நிஜமான அழகு - வித்யா
என்னை பொறுத்த வரையில், மேக்கப் போடுவதன் மூலம் நான் யாருடைய முகத்தோற்றத்தையும் மாற்றுவதில்லை. மாறாக, அவர்களை அவர்களாகவே மெருகேற்றுகிறேன். இயற்கையாக அவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே அவர்களை அழகாக உணர வைக்கும்போதுதான் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
"உங்களை நீங்கள் நேசியுங்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களை அழகாக பிரதிபலித்து காட்டும். மேக்கப் போடுவதில் மட்டுமே அழகு இருக்கிறது என்பதில்லை. மனதளவில் உங்களை நீங்கள் அழகாக உணர்வதுதான் முக்கியம். தன்னம்பிக்கையே உண்மையான அழகு" என்கிறார் வித்யா விஸ்வேந்த்ரா.
சர்வதேச மணப்பெண் ஒப்பனை கலைஞர், யூடியூபர், கல்வியாளர் என பன்முகத்திறமை கொண்டவர் வித்யா. இலங்கைத் தமிழரான இவர் வளர்ந்தது ஜெர்மனி நாட்டில். பின்னர் இங்கிலாந்து சென்று 20 ஆண்டுகள் வாழ்ந்த வித்யா, தற்போது மலேசியாவில் வசித்து வருகிறார். அழகுக் கலை நிபுணரான இவர், மேக்கப் சார்ந்த வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ஆயிரக்கணக்கானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
பிரபலமான தமிழ் பெண் யூடியூப்பராக அறியப்படும் வித்யாவின் தனிப்பட்ட மேக்கப் ஸ்டைல் 'கொஞ்சம் மேக்கப் நிறைய அழகு' என்பதுதான். அவருடன் நடந்த சுவாரசியமான உரையாடல் இதோ…
உளவியல் படித்த உங்களுக்கு அழகுக் கலையின் மீது ஆர்வம் வந்தது எப்படி?
சிறுவயதில் இருந்தே அழகுக்கலை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் எல்லோரையும் போலவே என்னுடைய பெற்றோரும் அழகுக் கலை எல்லாம் பயனற்றது எனக்கூறி கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை எடுத்து படிக்கும்படி அறிவுறுத்தினார்கள். அவர்களின் விருப்பப்படியே பி.எஸ்சி. உயிரியல் மற்றும் உளவியல் படித்தேன். பின்னர் என்னுடைய விருப்பத்திற்கு அனுமதி பெற்று லண்டன் காலேஜ் ஆப் பேஷனில் 'ஹேர் அண்ட் மேக்கப்' டிப்ளமோ படித்தேன். பிறகு காஸ்மெட்டிக் துறையில் சில ஆண்டுகள் பணியாற்றினேன். இந்த அனுபவங்களும், அதீத ஆர்வமும்தான் எனக்கு 'சர்வதேச தமிழ் பிரைடல் ஹேர் அண்ட் மேக்கப் ஆர்டிஸ்ட்' என்ற அடையாளத்தை கொடுத்திருக்கிறது.
மேக்கப் போட்டுக்கொள்வதால் பெண்களின் தன்னம்பிக்கை அதிகரிக்குமா?
நிச்சயமாக அதிகரிக்கும். என்னை பொறுத்த வரையில், மேக்கப் போடுவதன் மூலம் நான் யாருடைய முகத்தோற்றத்தையும் மாற்றுவதில்லை. மாறாக, அவர்களை அவர்களாகவே மெருகேற்றுகிறேன். இயற்கையாக அவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே அவர்களை அழகாக உணர வைக்கும் போதுதான் தன்னம்பிக்கை அதிகரிக்கும். என்னுடைய வாடிக்கையாளர்களுக்கும் நான் அதைத்தான் செய்கிறேன்.
பேஷன் மற்றும் மாடலிங் துறையைப் பற்றிய பெண்களின் கண்ணோட்டம் மாறி இருக்கிறதா?
சமூக வலைத்தள பயன்பாடுகள் இல்லாத காலங்களில் பெண்களுக்கு தங்களைச் சுற்றி இருக்கிற சிலரை பற்றி மட்டுமே தெரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இப்போது கிராமத்து பெண்களும் ஆர்வத்துடன் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். அந்த வகையில், பேஷன் மற்றும் மாடலிங் துறையைப் பற்றிய பெண்களின் கண்ணோட்டமும் மாறி இருக்கிறது. பலர் இந்த துறைகளில் ஆர்வம் செலுத்துகிறார்கள்.
பேஷன் மற்றும் மாடலிங் துறையில் சிறப்பாக செயல்படுவதற்கு உளவியல் படிப்பு உங்களுக்கு எந்த வகையில் உதவுகிறது?
நான் உளவியலில் பாடங்களாக படித்தவைகள் எல்லாம் பேஷன் மற்றும் மாடலிங் துறையில் எனக்கு மிகவும் உதவுகிறது. என்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் உணர்வுகளையும், விருப்பங்களையும் எளிதாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு மேக்கப் போடுகிறேன். இதனால் எனக்கு, வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேற்பும் கிடைக்கிறது.
உங்களுடைய டுட்டோரியல் வீடியோக்கள், பெண்களுக்கு எந்த வகையில் உதவுகிறது என்று நினைக்கிறீர்கள்?
என்னுடைய உறவினர்தான் சமூக வலைத்தளங்களில் அழகுக் கலை பற்றிய வீடியோக்களை பகிருமாறு ஊக்குவித்தார். புடவை அணிவது பற்றி நான் யூடியூப் சேனலில் 2016-ம் ஆண்டு பதிவிட்டு இருந்த வீடியோ அதிக அளவிலான பார்வையாளர்களைப் பெற்றது. அழகுக் கலை பற்றிய எனது ஒரு வீடியோ இதுவரை 6 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. அதன் மூலமாகத்தான் நான் யூடியூப்பில் பிரபலமானேன். பார்வையாளர்கள் அதிகரிக்கும்போது அவர்கள் தெரிந்துகொள்ள அல்லது கற்றுக்கொள்ள நினைக்கும் புதிய விஷயங்கள் என்னிடம் உள்ளதாக நினைக்கிறேன்.
புடவை பற்றி அதிகமாக சொல்கிறீர்களே? வெளிநாட்டில் புடவைக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
தமிழ் பாரம்பரிய உடையான புடவை அணிவதை கனடா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் பிரபலமாக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதற்காக புடவை அணிந்து போட்டோ ஷுட் பல எடுப்பதுண்டு. என்னைப் பார்த்து இங்கு பலரும் புடவை அணிவது மகிழ்ச்சி அளிக்கிறது. புடவை அணிய வேண்டும், புடவை அணிந்து நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும், புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆசைப்படும் பெண்கள் பலர் இங்கு உள்ளனர். நாம் எங்கு சென்றாலும் நம்முடைய பாரம்பரியத்தை பின்பற்றுவது அவசியமானது என்று நினைக்கிறேன்.
புடவை அணியும் பெண்களுக்கான டிப்ஸ்
♦ புடவையை உடுத்துவதற்கு முன்பு உங்கள் காலணிகளை அணிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் காலணியின் உயரத்துக்கு தகுந்தவாறு, புடவையின் உயரத்தை சரியாக அளந்து அணிய வசதியாக இருக்கும்.
♦ அகலமான உள்பாவாடைகள் உங்களை பருமனாகக் காட்டக்கூடும். எனவே அவற்றை தவிர்த்து ஷேப்வேர் அணியுங்கள். இதன்மூலம் புடவையில் உங்கள் தோற்றமும் மேம்படும்.
♦ உடலைச் சுற்றி புடவையை அணிந்தபிறகு மடிப்புகள் வைப்பதைவிட, முந்தைய நாள் இரவே புடவையை இஸ்திரி செய்து, அழகாக மடிப்புகள் எடுத்து சேப்டி பின் போட்டு வைப்பது உங்கள் சிரமத்தை குறைக்கும்.
♦ புடவை அணிய உதவும் 'பின்'களை புடவையின் நிறத்திற்கேற்ப வாங்கி பயன்படுத்துங்கள். தரமான 'பின்'களை மட்டுமே வாங்குங்கள். இதன் மூலம் புடவை சேதம் அடையாமல் பாதுகாக்க முடியும்.
♦ உங்கள் உடலுக்கு ஏற்ற துணி வகையைத் தேர்ந்தெடுங்கள். சில துணி ரகங்கள் உடல் பருமனை மேலும் அதிகரித்துக் காட்டும். அதிக எடை கொண்டவர்கள் அத்தகைய ரகங்களை தவிர்ப்பது நல்லது.
♦ புடவையைப் போலவே அதற்கு சரியாக பொருந்தக்கூடிய ரவிக்கையை தேர்ந்தெடுப்பதும் முக்கியமானது.