ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஜும்பா நடனம் - சுதா


ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஜும்பா நடனம்  - சுதா
x
தினத்தந்தி 5 March 2023 7:00 AM IST (Updated: 5 March 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

ஒரு மணி நேரம் நம்மை மறந்து ஜும்பா பயிற்சி செய்யும்போது எளிதாக 500 முதல் 1000 கலோரிகள் வரை எரிக்க முடியும். நடனம் ஆடத் தெரியாதவர்களும் ஆடலாம் என்பதுதான் இதன் சிறப்பு.

"கணவன், குழந்தைகள், குடும்பம் என்று மற்றவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பல பெண்கள், தங்களின் ஆரோக்கியத்துக்காக பணமோ, நேரமோ செலவு செய்வதை கடைசித் தேர்வாகவே கருதுகிறார்கள். பெண்கள் தங்கள் மீதும் அக்கறை கொள்ள வேண்டும்" என்கிறார் சென்னையில் வசிக்கும் சுதா சந்திரசேகர்.

'காலமும், வயதும் நமது முயற்சிகளுக்கு தடையல்ல' என்பதை உணர்த்தும் வகையில், திருமணத்திற்குப் பிறகு ஜும்பா நடனத்தைக் கற்றுத்தேர்ந்து மற்றவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். சிறந்த தொழில் முனைவோராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதோ அவரது அனுபவங்கள்:

"நான் மனிதவள மேம்பாட்டில் எம்.பி.ஏ., படித்திருக்கிறேன். என்னுடைய கணவர் சந்திரசேகர் மல்டிமீடியா பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். எங்கள் ஒரே மகன் அனிருத் கல்லூரியில் படிக்கிறார்.

நான் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றினேன். அலுவலகத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தபடி வேலை பார்க்கும் நிலை இருந்தது. உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறையால், எனது எடை அதிகரித்தது.

அதன் விளைவாக மூட்டு வலி, குதிகால் வலி என்று பல பிரச்சினைகள் உடம்பில் குடியேறின. ஒரு கட்டத்தில் மனம் விழித்துக் கொண்டது. நடைப்பயிற்சி மட்டுமே செய்வது எனது எடையை குறைக்க உதவாது என்று எண்ணினேன்.

உடற்பயிற்சி ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற உத்வேகம் வந்தது. அப்போதுதான் என் தோழி மோகனா மூலம் ஜும்பா பயிற்சி வகுப்பு பற்றி தெரியவந்தது. ஜும்பா என்பது இசையுடன் நடனம் ஆடியவாறு செய்யக்கூடிய உடற்பயிற்சி.

ஒரு மணி நேரம் நம்மை மறந்து ஜும்பா பயிற்சி செய்யும்போது எளிதாக 500 முதல் 1000 கலோரிகள் வரை எரிக்க முடியும். நடனம் ஆடத் தெரியாதவர்களும் ஆடலாம் என்பதுதான் இதன் சிறப்பு. ஜும்பா பயிற்சி செய்வதற்கு வயது வரம்பில்லை. வேடிக்கையான உடற்பயிற்சியாக இருப்பதால் ஜும்பா மனஅழுத்தத்தைக் குறைக்கும்.

ஜும்பா பயிற்சி செய்வது இதயத்திற்கு நல்லது. மனதையும், உடலையும் ஒருங்கிணைந்து செயல்பட வைக்கும் அற்புதமான வழி இது. தொடர்ந்து ஜும்பா பயிற்சி செய்யும்போது உடல் பருமன் குறையும். பெண்களை சிரமப்படுத்திக்கொண்டு இருக்கும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

2015-ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் ஜும்பா பயிற்சி செய்ய ஆரம்பித்தபோது எனது உடல் எடை 80 கிலோவாக இருந்தது. அதே ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் அது 58 கிலோவாகக் குறைந்தது. மூட்டு வலி, குதிகால் வலி எல்லாம் மாயமானது.

என்னுடைய 38 வயதில் 'நமக்கு இது சரி வருமா?' என்ற சந்தேகத்துடன் தான் ஜும்பா பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். அதனால் நடந்த மாற்றங்களை உணர்ந்ததும் தீவிரமாக கற்கத் தொடங்கினேன். பின்னர் ஜும்பா பயிற்றுநர் உரிமத்திற்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். பல்வேறு கட்ட பயிற்சிகளுக்குப் பிறகு சான்றிதழ் பெற்று பயிற்சியாளராக மாறினேன்.

அதன்பிறகு நானே ஜும்பா பயிற்சி வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். பள்ளிகள், கல்லூரிகள், ஐ.டி கம்பெனிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு சென்று மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஜும்பா பயிற்சி கொடுத்திருக்கிறேன்.

ஜும்பா பயிற்சி பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. தொடர் ஓட்டமான 'மாரத்தான்' போன்று பல ஆயிரக்கணக்கானவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளில், போட்டியாளர்களை ஆயத்தம் செய்வதற்கு ஜும்பா பயிற்சி அளிக்கப்படுகிறது.

நேரடி வகுப்புகள் மட்டும் எடுத்துக்கொண்டு இருந்த காலம் போய், இப்பொழுது இணையவழி வகுப்புகளிலும் ஜும்பா கற்றுத் தருகிறார்கள்.

பெண்கள் பலரும் 'எங்கள் வாழ்க்கை சமையல் அறைக்கும், டைனிங் டேபிளுக்கும் அலைவதிலேயே முடிந்துவிடும் போல இருக்கிறது. எங்களுக்கு உடனடியாக ஒரு மாற்றுவழி தேவை' என்று கூறியதை அடுத்து, எனது பயிற்சி நிறுவனத்திலும் இணையவழி வகுப்புகளை ஆரம்பித்தேன். வெளி மாநிலங்கள் மட்டுமில்லாமல் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் பெண்களுக்கும் இணையவழியில் ஜும்பா பயிற்சி அளித்து வருகிறேன்.

2022-ம் ஆண்டு, 'பேஸ் ஆப் சென்னை' என்ற அழகிப் போட்டியின் பிட்னஸ் சுற்றில் பங்கேற்ற அனைவருக்கும் ஜும்பா பயிற்சி கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. '45 வயதில் பயிற்சி வகுப்பு எடுப்பதே பெரிய விஷயம்' என்று நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது, அந்த அழகிப் போட்டியில் திருமதிகள் பிரிவில் என்னை கலந்து கொள்ளுமாறு கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்டு துணிந்து போட்டியில் பங்கேற்றேன்.

முதலில் கலந்து கொண்ட 'மிசஸ் தமிழ்நாடு 2022' போட்டியில் முதல் 13 இடங்களுக்குள் வந்தேன். அதில் 'மிசஸ் பியூட்டிபுல் ஐஸ் 2022' என்ற பிரிவில் வெற்றி பெற்றேன். என்னை விட வயது குறைந்த பெண்களோடு சரி சமமாக 'ராம்ப் வாக்' செய்தது புதிய அனுபவமாக இருந்தது.

அதை அடுத்து 'பேஸ் ஆப் சென்னை 2022' அழகிப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசுடன் பட்டமும் பெற்றேன். அந்தப் போட்டியில் இடம்பெற்ற திறமைக்கான சுற்றில் அனைவருக்கும் ஜும்பா பயிற்சி அளித்து 'பெஸ்ட் டேலண்டட் 2022' பட்டம் பெற்றேன். அப்போது மடிசார் புடவை அணிந்து நடனமாடி அனைவரின் பாராட்டையும் பெற்றதை என்னால் மறக்க முடியாது.

அதன் பின்னர் 'மிசஸ் பேப்ஸ் ஸ்டார் ஆப் இந்தியா 2022' என்ற போட்டியில் கலந்துகொண்டு ரன்னர் பரிசு பெற்றேன். அந்தப் போட்டியின் அனைத்து சுற்றுகளிலும் நம்பிக்கையுடனும், தைரியமாகவும் நான் பதிலளித்ததாக நடுவர்கள் பாராட்டினர்.

பெண் தொழில்முனைவோருக்காக அவதார் நிறுவனம் வழங்கிய விருது, என்னுடைய சிறப்பான பங்களிப்புக்காகக் கிடைத்தது. பல்வேறு தொலைக்காட்சிகளில் ஜும்பா பயிற்சி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன்.

'தன்னம்பிக்கையும், வாழ்க்கையின் மீது நாட்டமும், வாழும் காலத்தில் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலும் இருக்க வேண்டும். அவ்வாறு செயல்படும்போது மனதில் நிறைவு உண்டாகும் என்பதற்கு நானே ஒரு உதாரணம்" என்று உற்சாகமாக கூறி முடித்தார் சுதா சந்திரசேகர்.


Next Story