சவால்களை சந்தித்து சாதிக்கப் பழகுங்கள் - பிரீத்தி
சமூக சேவையில் ஈடுபட்டபோது, அதனால் பலன் அடைந்தவர்களின் முகத்தில் உண்டான மகிழ்ச்சி எனக்குள்ளே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக சேவை செய்வது மனதுக்கு நிறைவை தந்தது.
சமூக சேவகி, சுற்றுச்சூழல் ஆர்வலர், இயற்கை விவசாய ஊக்குவிப்பாளர், மாற்றுத்திறனாளிகளின் வழிகாட்டி என பல தளங்களில் இயங்கி வருகிறார் திருச்சியைச் சேர்ந்த ஜேனட் பிரீத்தி. தனது தந்தையின் விருப்பத்திற்காக சமூக சேவையில் ஈடுபடத் தொடங்கியவர், அதனால் மற்றவர் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சியைக் கண்டு, சேவை செய்வதையே தன்னுடைய பணியாக மாற்றிக்கொண்டார். அவருடன் ஒரு சந்திப்பு.
சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
சேவை செய்வதில் ஆர்வம் கொண்ட என்னுடைய தந்தை, தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். நான் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவுடன், தொண்டு நிறுவன பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்படுமாறு கூறினார். அப்போது எனக்கு அதில் விருப்பம் இல்லாததால் தயங்கினேன். அதைக் கண்ட தந்தை "மூன்று மாதங்கள் முயற்சி செய்து பார். உனக்குப் பிடித்திருந்தால் தொடரலாம்" என்றார். அவ்வாறு சேவையில் ஈடுபட்டபோது, அதனால் பலன் அடைந்தவர்களின் முகத்தில் உண்டான மகிழ்ச்சி எனக்குள்ளே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக சேவை செய்வது மனதுக்கு நிறைவை தந்தது. எனவே தொடர்ந்து அதில் பயணித்து வருகிறேன்.
உங்கள் செயல்பாடுகள் பற்றி கூறுங்கள்?
என்னுடைய தந்தை, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் நட்பு வட்டத்தில் இருந்தவர். இருவரும் இணைந்து இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 25 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இயற்கை விவசாயத்தின் நன்மைகளை, அனைத்து விவசாயிகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறோம்.
பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டதன் பலனாக, திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் உள்ள இயற்கை விவசாயிகள், தங்கள் நிலத்தை 'விவசாயத்தைத் தவிர வேறு எதற்காகவும் விற்க மாட்டோம்' என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வேளாண் தொழில் முனைவோராக 3,200 பெண்களை மாற்றி இருக்கிறோம்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக எத்தகைய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறீர்கள்?
தினசரி வாழ்க்கையில் உண்டாகும் மனஅழுத்தத்தைப் போக்குவதற்காகவும், மகிழ்ச்சியாக இருப்பதற்காகவும் பலரும் சுற்றுலா செல்வார்கள். ஆனால் ஏழ்மை நிலையில் இருக்கும், பார்வை மற்றும் கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இது சாத்தியமில்லாதது. அவர்களுக்கு இந்த உலகைப் புதுமையான வகையில் உணர்த்த வேண்டும் என்ற நோக்கில், சில தொண்டு நிறுவனங்களின் உதவியோடு ஒரு அமைப்பைத் தொடங்கினோம்.
அதன் வழியாக பொதுமக்களைச் சுற்றுலா அழைத்துச் சென்று, அதில் இருந்து கிடைக்கும் நிதியின் மூலம் தமிழகத்தில் உள்ள பார்வையற்ற மற்றும் காது கேளாத மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்கிறோம்.
இவ்வாறு, முதல்முதலாக 'உணர் உலா' என்ற பெயரில் பார்வையற்ற குழந்தைகளைக் கன்னியாகுமரி சுற்றுலா தலத்திற்கு அழைத்துச் சென்றோம். அவர்கள் அப்பொழுதுதான் முதல் முதலாகக் 'கடல் எப்படி இருக்கும்' என்று உணர்ந்தனர்.
அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள, 21 பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு இந்தச் சுற்றுலா மூலம் வெளி உலகத்தை உணர்த்த வேண்டும் என்று முயற்சித்து வருகிறோம்.
சுற்றுலா என்பது பொழுதுபோக்காக மட்டுமில்லாமல், நம்முடைய வரலாறு பற்றி தெரிந்து கொள்வதாகவும் இருக்க வேண்டும். எனவே வரலாற்று நினைவிடங்களை நோக்கியே பயணத்தைத் திட்டமிட்டு இருக்கிறோம்.
அதுமட்டுமில்லாமல், இதுவரை 9 ஆயிரம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவி செய்துள்ளோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உங்கள் முயற்சிகள் பற்றி கூறுங்கள்?
நாம் வாழும் பூமியை பாதுகாக்கும் பொறுப்பும் நம்மிடமே இருக்கிறது. இதனை குழந்தைகளிடத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்தற்காக, தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைப்போடு இணைந்து, பல பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் கொண்ட 'சுற்றுச்சூழல் குழு'வை உருவாக்கி இருக்கிறோம். அவர்கள் தங்கள் பள்ளிகளிலேயே 'மூலிகைத் தோட்டம்' அமைக்க உதவி வருகிறோம்.
அதுமட்டுமில்லாமல் மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு, ஏரி, குளம், ஆறுகளை தூர்வாருதல் போன்ற பணிகளையும் செய்து வருகிறோம். திருச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை சமூக அக்கறை கொண்ட குடிமக்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
உங்களுக்குக் கிடைத்த பாராட்டுகள் மற்றும் விருதுகள் பற்றி?
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது கிடைத்தது. அதுமட்டுமின்றி, நான் செய்யும் ஒவ்வொரு சமூகப் பணியினையும் பாராட்டி பலரும் சான்றிதழ் வழங்கி உள்ளனர். 2009-ம் ஆண்டு உலக வங்கி நடத்திய 'இயற்கை விவசாயம்' குறித்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு, இறுதிப்போட்டி வரை பங்கேற்றேன். இதுவரை எனது முயற்சிகள் மூலம் 45 குழந்தைகள் தங்கள் வாழ்வில் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். இதுவே எனக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
'பல சவாலான சூழல்களிலும், கடினமான நேரங்களிலும் சேவை செய்து, மற்றவர் முகத்தில் மலரும் புன்னகையை பார்க்கும்போது வாழ்க்கைக்கான அர்த்தம் தெரிகிறது.
என்னைப் போல மற்ற பெண்களும் தங்களுடைய வாழ்க்கையில், தங்களுக்குப் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுத்து சவால்களை உடைத்தெறிந்து வாழ்க்கையில் சாதிக்கப் பழக வேண்டும்.