முயற்சி கை கொடுக்கும் - கீர்த்தனா


தினத்தந்தி 3 July 2022 7:00 AM IST (Updated: 3 July 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு காலத்தில், மற்றவர்களைப் போலவே நேரத்தை பயனுள்ளதாக்கி கொள்வதற்காக யூடியூப் பதிவுகளை பார்த்து கைவினைப் பொருட்கள் செய்யத்தொடங்கினேன். பென்சில் ஊக்கை செதுக்கி, கைவினைப் பொருட்கள் செய்யும் ‘பென்சில் கார்விங்’ மீது ஆர்வம் அதிகமானது.

வாழ்க்கையில் எந்த நேரத்திலும், எதுவும் நடக்கலாம். அவற்றை முயற்சியாலும், மன உறுதியாலும் எதிர்கொண்டு, முன்னேறி வருபவர்கள் மட்டுமே சாதனையாளர்களாக திகழ்கிறார்கள். அந்த வகையில், தனது வாழ்க்கை அனுபவத்தையே ஒரு சாதனையாக மாற்றியவர்தான் கீர்த்தனா.

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரைச் சேர்ந்த இவர் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்தவாறே பென்சில் கார்விங், ஓவியம், குங்கிலியம் எனும் ரெசின் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்வது என தனது திறமை மூலம் சுய தொழில் செய்து வருகிறார். அவரது அனுபவங்கள் இங்கே...

"என் பெற்றோர் தமிழ்வேந்தன் - சாமுண்டீஸ்வரி. எனக்கு ஒரு தங்கை இருக்கிறார். நான் எம்.சி.ஏ. பட்டதாரி. 11-ம் வகுப்பு படிக்கும்போது டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். அருகில் இருந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற பின்பு காய்ச்சல் குணம் அடைந்தது. ஆனால், அந்த மருந்துகளின் பக்கவிளைவால் 11-ம் வகுப்பு முடிக்கும் தருவாயில், எனக்கு அடிக்கடி தலைவலி உண்டானது.

சாதாரண தலைவலி என்று நினைத்த அது, தீவிரமாக ஆரம்பித்ததால் மற்றொரு மருத்துவமனையில் பரிசோதித்தோம். அங்குதான் டைபாய்டு காய்ச்சலுக்காக சாப்பிட்ட மருந்துகளின் வீரியத்தால் எனக்கு மூளையில் ரத்தம் கட்டியிருப்பதும், அதன் விளைவாகவே அடிக்கடி தலைவலி உண்டானதும் தெரியவந்தது. பரிசோதனை மேற்கொண்டு சில நாட்கள் கடந்தது. திடீரென ஒரு நாள் காலையில் எழுந்திருக்க முயற்சித்தபோது, எனது உடலில் வலது பக்கம் முழுவதும் செயலிழந்து போனதால், நிற்க முடியாமல் கீழே விழுந்தேன்.

மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் மூளையில் ரத்தம் உறைந்திருப்பது குணமானது. ஆனால், கை கால்கள் செயல் இழந்து இருப்பது எனது முயற்சியால் மட்டுமே குணமாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

எனவே தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றேன். அங்கே மருத்துவர்கள் சொல்லித்தரும் பயிற்சிகளை விடாமல் தொடர்ந்து செய்து வந்தேன். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக எனது உடல் நிலை தேற ஆரம்பித்தது.

11-ம் வகுப்பில் நான் பெற்ற மதிப்பெண்கள் மூலம், 12-ம் வகுப்புக்கு செல்ல தேர்ச்சி பெற்றேன். ஆனால், உடல்நிலை காரணமாக பள்ளியில் ஒரு வருடம் கழித்து 12-ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என்று கூறினார்கள். ஒரு வருட காலத்தை வீணாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே பள்ளியில் தெரிவித்து 12-ம் வகுப்பு சேர்ந்தேன்.

தேர்வு நெருங்குவதற்குள் எனது கை கால்களை குணப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உறுதியோடு முயற்சித்தேன். சிரமமாக இருந் தாலும் நானே மிதிவண்டியை மிதித்தபடி பள்ளிக்குச் சென்றேன். பொதுத்தேர்வு எழுதுவதற்கு கையை தயார் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து எழுதிப் பழகினேன். மணிக்கட்டு அருகில் அதிக வலி உண்டாகி, எழுதுவதற்கு சிரமம் ஏற்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து எழுதினேன்.

தொடர் முயற்சியாலும், கடவுளின் அருளாலும் 12-ம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்தேன். மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால், மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் போனது. எனினும் தளராமல் எம்.சி.ஏ. படித்து முடித்து, தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.

கொரோனா ஊரடங்கு காலத்தில், மற்றவர்களைப் போலவே நேரத்தை பயனுள்ளதாக்கி கொள்வதற்காக யூடியூப் பதிவுகளை பார்த்து கைவினைப் பொருட்கள் செய்யத்தொடங்கினேன். பென்சில் ஊக்கை செதுக்கி, கைவினைப் பொருட்கள் செய்யும் 'பென்சில் கார்விங்' மீது ஆர்வம் அதிகமானது. அதில் விதவிதமாக பெயர்களை செதுக்க ஆரம்பித்தேன். பின்னர் சிறு சிறு பொருட்களில் ஓவியம் வரையத் தொடங்கினேன்.

அதன்பின்னர்தான் குங்கிலியம் எனும் ரெசின் மூலம் கைவினைப்பொருட்கள் செய்யும் கலையைக் கற்றுக்கொண்டேன். கீ செயின், போட்டோ பிரேம், டீ கோஸ்டர், புக் மார்க் போன்றவற்றை செய்தேன். நான் செய்த பொருட்களை நண்பர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளுக்கு பரிசாகக் கொடுக்க ஆரம்பித்தேன். நண்பர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றேன். நாளடைவில் அவர்கள், தங்களது நண்பர்களுக்கு சிபாரிசு செய்ய ஆரம்பித்தனர்.

முதன் முதலில் நான் பெற்ற வருமானம் மனதளவில் ஊக்கமும், தன்னம்பிக்கையும் கொடுத்தது. அப்போதுதான் 'இதை ஒரு கைத்தொழிலாகவே மாற்றலாம்' என்று முடிவு செய்தேன்.

கொரோனா காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக அனைவருமே சிரமப்பட்டோம். கைவினைப் பொருட்கள் மூலம் கிடைத்த வருமானம், அந்த நேரத்தில் எனக்கு பெரிதும் உதவியது. முதலில் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் தான் எனது படைப்புகளை விற்பனை செய்து கொண்டிருந்தேன். தற்போது ஆர்டர்கள் வரும் வகையில் தொழில் முன்னேறி உள்ளது. நான் செய்யும் கீ செயின், போட்டோ பிரேமுக்கு வரவேற்பு அதிகம். வாடிக்கையாளர் கேட்கும் வண்ணங்களிலும், அவர்கள் எண்ணத்தின் அடிப்படையிலும் புரிந்து கொண்டு கைவினைப் பொருட்களை தயார் செய்து தருகிறேன்.

என்னைப் போல ஆர்வமுள்ளவர்கள் முதலில் சிறு பொருட்களை செய்து முயற்சித்துப் பார்க்கலாம். நல்ல முறையில் செய்தால் நிச்சயம் வருமானத்தை ஈட்ட முடியும். நம்மால் என்ன செய்ய முடியும் என்று தயங்கும் பெண்களே, நம்மால் எல்லாமே செய்ய முடியும். பொறுமையோடும், நம்பிக்கையோடும் முயற்சித்து பாருங்கள். பலன் நிச்சயம்" என்று தன்னம்பிக்கையோடு தெரிவித்தார் கீர்த்தனா.


Next Story