சைக்கிளில் சீறும் ஸ்ரீமதி


சைக்கிளில் சீறும் ஸ்ரீமதி
x
தினத்தந்தி 31 July 2022 7:00 AM IST (Updated: 31 July 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

8-ம் வகுப்பு படிக்கும் போதே தூத்துக்குடி மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றேன். தொடர்ந்து திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன். அதையடுத்து ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வானேன்.

ஸ்ரேல் நாட்டில், வரும் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள 'உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப்' சைக்கிள் போட்டியில் கலந்துகொள்வதற்காக, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவியான ஸ்ரீமதி ஜேசுதார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர், சொந்த ஊருக்கு வந்தபோது நம்மிடம் பேசியது இங்கே...

உங்களைப் பற்றி கூறுங்கள்?

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகில் உள்ள கீழமுடிமண் கிராமம்தான் எனது சொந்த ஊர். புதியம்புத்தூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறேன். தாயும்-தந்தையும் தினக்கூலி வேலை செய்பவர்கள். என் தங்கை 9-ம் வகுப்பு படிக்கிறாள்.

சர்வதேச போட்டியில் தேர்வானது எப்படி?

8-ம் வகுப்பு படிக்கும் போதே தூத்துக்குடி மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றேன். தொடர்ந்து திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன். அதையடுத்து ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வானேன். ஆனால், அந்தப் போட்டியில் கலந்து கொள்ள பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிராக் சைக்கிள் தேவைப்பட்டது. அதனால் அந்த போட்டியில் கலந்து கொள்ள இயலவில்லை. அத்தகைய சூழலில் எங்கள் ஊர் கிராம சபை கூட்டத்தில் இது குறித்து எனது அம்மா மனு எழுதிப்போட்டார். மக்களவை உறுப்பினர் உதவியால் 'டிராக் சைக்கிள்' கிடைத்தது.

தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு, ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் சைக்கிள் போட்டிகளில் கலந்துகொண்டு குழுப் போட்டியில் தங்கப் பதக்கமும், தனிப்பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றேன். அதனால் கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆசிய போட்டிக்கு தேர்வாகி, டிராக் சைக்கிளிங் குழுப் போட்டியிலும் பங்கேற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தேன். இதன் மூலம், வரும் ஆகஸ்டு மாதம் இஸ்ரேல் நாட்டில் நடைபெற உள்ள உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா சார்பாக பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளேன்.

சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் வந்தது எப்படி?

சிறுவயதில் இருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம் உண்டு. கபடி விளையாடுவதும், சைக்கிள் ஓட்டுவதும் பிடிக்கும். பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரிடமும் சைக்கிள் கடன் வாங்கி ஓட்டினேன். ஊர் திருவிழாக்களில் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றிருக்கிறேன். வாடகை சைக்கிள் கடையில், சைக்கிளை வாடகைக்கு எடுத்து நன்றாக ஓட்டிப் பழகினேன்.

முதன்முறையாக சர்வதேச போட்டியில் பங்கேற்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தேசிய மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அதனால் கிடைத்த அனுபவம் சர்வதேச போட்டியில் எனக்கு உதவிகரமாக இருக்கும். அதே சமயம் இந்தியா சார்பாக சர்வதேச போட்டியில் விளையாடுவதால் சிறிது தயக்க மும், பொறுப்புணர்வும் உள்ளது. ஆனால், சைக்கிள் டிராக்கிற்கு சென்றவுடன் என் இலக்கு மட்டும்தான் என் கண்ணில் தெரியும். இந்தியாவிற்காக எனது சிறந்த பங்களிப்பை செய்வேன்.


Next Story