காமன்வெல்த்: 22 தங்கப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்தது இந்தியா- பதக்கப் பட்டியலில் 4-வது இடம்


காமன்வெல்த்: 22 தங்கப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்தது இந்தியா- பதக்கப் பட்டியலில் 4-வது இடம்
x

இந்தியா மொத்தமாக 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28 ஆம் தேதி மிக பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய இந்த தொடர் நாளை நிறைவு விழாவுடன் முடிவடைகிறது.

இன்றுடன் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெறுகின்றன. விளையாட்டு போட்டிகளின் இறுதி நாளான இன்று இந்தியா தனது அனைத்து விளையாட்டு போட்டிகளையும் விளையாடி முடித்துள்ளது. குறிப்பாக இன்று பேட்மிண்டன் போட்டியில் இந்தியா அசத்தியது.

இறுதி நாளான இன்று பி.வி. சிந்து மற்றும் இளம் வீரர் லக்சயா சென் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதை தொடர்ந்து நடந்த பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர்.

அதே போல் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றுள்ளார். இதனால் இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. இறுதியாக நடைபெற்ற ஆடவர் ஆக்கி இறுதி போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கத்தை வென்றது.

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் கடைசி பதக்கமாக இது அமைந்தது. இறுதியாக இந்தியா மொத்தமாக 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது.


Next Story