ஓ.டி.டி.யில் வெளியாகும் 'அஞ்சாமை'
விதார்த் நடிப்பில் வெளியான ‘அஞ்சாமை’ திரைப்படம் நாளை ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார் விதார்த். கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற விதார்த் பல்வேறு துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மணிகண்டன் இயக்கிய குற்றமே தண்டனை , சுரேஷ் சங்கையா இயக்கிய ஒரு கிடாயின் கருணை மனு , ராதா மோகன் இயக்கிய காற்றின் மொழி , நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கிய குரங்கு பொம்மை கடந்த ஆண்டு வெளியான டெவில் உள்ளிட்ட படங்கள் விதார்த்தின் திறமையை வெளிப்படுத்தும் படங்களாக அமைந்தன.
'அஞ்சாமை' படத்தில் விதார்த்துடன் இணைந்து ரகுமான், வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நீட் தேர்வு சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படத்தை எஸ் பி சுப்புராமன் இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ராகவ் பிரசாத் இதற்கு இசை அமைத்திருந்தார்.
நீட் தேர்வையும், அதன் பாதிப்புகளையும், கோச்சிங் சென்டர்களின் ஆதிக்கத்தையும் 'அஞ்சாமை' படம் அழுத்தமாக பேசியுள்ளது.
இந்த படம் கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதி திரைக்கு வந்த நிலையில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இந்த படம் நாளை ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.