ஓ.டி.டி.யில் வெளியாகும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மேக்கிங் ஆவணப்படம்
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் உருவான விதம் குறித்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி வெளியான இந்தப் படம் ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை வென்றது. சிறந்த அசல் பாடலுக்காக ஆஸ்கர் விருதும் வென்று படக்குழுவினரை பெருமையடைய செய்தது.
தெலுங்கில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சிறந்த இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட 7 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளது. தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோரை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருந்தது.
இந்நிலையில் இத்திரைப்படம் உருவான விதத்தை படக்குழு ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த ஆவண திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதற்கு 'ஆர்.ஆர்.ஆர்: பிஹைண்ட் அண்ட் பியோன்ட்' என தலைப்பிட்டுள்ளனர். இந்த ஆவண திரைப்படம் கடந்த 20-ம் தேதி சில திரையரங்குகளில் மட்டும் வெளியானது.
இந்த நிலையில், தற்போது இந்த ஆவணப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 27-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.