இன்று ஓ.டி.டியில் வெளியான படங்கள் - 09.08.2024


Movies released on OTT today - 09.08.2024
x
தினத்தந்தி 9 Aug 2024 3:10 AM GMT (Updated: 9 Aug 2024 3:31 AM GMT)

இன்று ஓ.டி.டியில் சில படங்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவும் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. அதன்படி, இன்று சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், இன்று எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.

1. 'டர்போ'

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான மம்முட்டி நடிப்பில் கடந்த மே மாதம் 23-ம் தேதி வெளியான படம் 'டர்போ'. இதில் மம்முட்டியுடன், சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர்,சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தனர். திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் ரூ.70 கோடி வசூலை பெற்றது. இன்று இப்படம் சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

2. 'அன்னபூரணி'

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 'அன்னபூரணி' என்ற படத்தில் நடித்தார். கடந்த வருடம் டிசம்பர் 29-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றிருந்ததால், ஸ்ட்ரீமிங் தளத்தில் இருந்து அகற்றப்பட்டது.

மத உணர்வுகளை புண்படுத்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கினால் மட்டுமே இந்தியாவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து, இன்று இந்தியாவைத்தவிர உலகம் முழுவதும் இப்படம் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

3. 'அவுட் ஆப் எ ஜாம்'

பிரபல விளம்பரத் திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் ஷாலினி ஹர்ஷ்வால். இவர் தற்போது, இமாசல பிரதேசத்தில் உள்ள புய்ரா என்ற சிறிய கிராமத்தில் நடக்கும் ஒரு தனித்துவமான கதையை வழங்கும் ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். இதற்கு 'அவுட் ஆப் எ ஜாம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று இந்த ஆவணப்படம் ஓபன் தியேட்டர் என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

4. '7ஜி'

டிரீம் ஹவுஸ் நிறுவனம் தயாரித்த ஹாரர் படத்தை என்.ஹாரூன் இயக்கியுள்ளார். '7ஜி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், சித்தார்த் விபின், சினேகா குப்தா உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த மாதம்(ஜுலை) 5-ந் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இன்று இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.

5. 'பிர் ஆயி ஹசீன் தில்ருபா'

ஜெய்பிரத் தேசாய் இயக்கி, கனிகா தில்லான் எழுதிய திரைப்படம் 'பிர் ஆயி ஹசீன் தில்ருபா'. டாப்ஸி பண்ணு, விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் சன்னி கவுஷல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

6. 'சந்து சாம்பியன்'

இந்தியாவுக்காக பாராஒலிம்பிக்கில் முதல் முதலில் தங்கப்பதக்கம் வென்ற முரளிகாந்த் பெட்காவின் வாழ்க்கை வரலாறு 'சந்து சாம்பியன்' என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக உருவானது.

கபீர் கான் இயக்கிய இப்படத்தில் முரளிகாந்த் கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடித்திருந்தார். இன்று இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

7. இந்தியன் 2

தமிழகம் முழுவதும் ஜூலை 12 -ம் தேதி 'இந்தியன் 2' படம் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

'இந்தியன் 2' திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.


Next Story