'முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளுக்கு பெண்கள் வர வேண்டும்' - ஐஸ்வர்யா லட்சுமி


முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளுக்கு பெண்கள் வர வேண்டும் - ஐஸ்வர்யா லட்சுமி
x
தினத்தந்தி 28 Aug 2024 4:36 PM GMT (Updated: 29 Aug 2024 6:30 AM GMT)

முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளுக்கு பெண்கள் வர வேண்டும் என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், மேற்கு வங்காள நடிகை ஸ்ரீ லேகா மித்ரா, மலையாள நடிகர், இயக்குனர் மற்றும் கேரள திரைப்பட அகாடமியின் தலைவரான ரஞ்சித் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) பொது செயலாளர் நடிகர் சித்திக் மீது நடிகையும், மாடலுமான ரேவதி பாலியல் புகார் கூறினார். இதனை தொடர்ந்து, நடிகைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களை பற்றி விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்பு குழு ஒன்றை முதல்-மந்திரி பினராயி விஜயன் அமைத்து உத்தரவிட்டார்.

இதனிடையே மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான 'அம்மா' அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். மேலும் நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளுக்கு பெண்கள் வர வேண்டும் என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "கேரள திரைத்துறையைச் சேர்ந்த 'அம்மா' அமைப்பு எனக்கு உதவிகரமானதாக இருக்காது என்பதால் அதில் சேரவில்லை. பொறுப்புள்ள நபர்கள் அந்த அமைப்பை தலைமையேற்று நடத்த வேண்டும்.

நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதால், தங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து பதில் சொல்ல வேண்டிய இடத்திலிருந்து நழுவியுள்ளனர். முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளுக்கு பெண்கள் வர வேண்டும். பணியிடங்களில் பெண்கள் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story