விமர்சனம் இல்லாவிட்டால் சிறிய படங்கள் காணாமல் போய்விடும் - இயக்குனர் சீனு ராமசாமி


விமர்சனம் இல்லாவிட்டால் சிறிய படங்கள் காணாமல் போய்விடும் - இயக்குனர் சீனு ராமசாமி
x

சில கட்டுப்பாடுகளோடு திரையரங்க வாசல்களில் விமர்சனம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சீனு ராமசாமி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் தற்போது முதல் நாள் முதல் காட்சி விமர்சனம் என சொல்லப்படும் பொதுமக்களின் கருத்துகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்குகின்றன. திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அது திரைப்படத்தை பற்றி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக இருக்க கூடாது.

ஒரு திரைப்படத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். விமர்சகர்கள் தங்களின் கருத்துகளை அனைவரின் கருத்தாக மக்களிடம் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்ப்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. இது சம்மந்தமாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், யூடியூப் சேனல்களை விமர்சனம் செய்வதற்காக திரையரங்குகளுக்குள் அனுமதிக்கக் கூடாது என திரையரங்குகளுக்கு அறிவுறுத்தல் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்தநிலையில் இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் சீனு ராமசாமி, "சில கட்டுப்பாடுகளோடு திரையரங்க வாசல்களில் விமர்சனம் எடுக்க அனுமதிக்க வேண்டும். விமர்சனம் இல்லை என்றால் சிறிய பட்ஜெட் படங்களுக்குக் கவனம் கிடைக்காமல் போய்விடும். மேலும், படம் பார்த்தபின் விமர்சனங்களை படிப்பது என் வழக்கம். இப்படத்தை நாம் பார்க்காத கோணத்தில் விமர்சகர் பார்த்துள்ளார் என ஆச்சரியப்படுவேன்" என்று கூறியுள்ளார்.


Next Story