யோகி ஆதித்யநாத்தை சந்தித்த 'சபா்மதி ரிப்போா்ட்' திரைப்பட நடிகர்


யோகி ஆதித்யநாத்தை  சந்தித்த  சபா்மதி ரிப்போா்ட் திரைப்பட நடிகர்
x
தினத்தந்தி 19 Nov 2024 8:58 PM IST (Updated: 19 Nov 2024 9:01 PM IST)
t-max-icont-min-icon

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி சந்தித்துள்ளார்.

மும்பை,

கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி சபர்மதி ரிப்போர்ட்'. இந்தப் படம் வரும் நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் விக்ராந்த் மாஸ்ஸி நாயகனாக நடித்துள்ளார். இவர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற '12த் பெயில்' படத்தின் மூலம் பரவலான ரசிகர்களைப் பெற்றவர்.

இந்நிலையில், 'தி சபர்மதி ரிப்போர்ட்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுப்பட்டுள்ள விக்ராந்த் அளித்த பேட்டியில், "மோசமாக இருக்கும் என கருதும் விஷயங்கள் உண்மையில் மோசமாக இருப்பதில்லை. எனது கண்ணோட்டம் தொடர்ந்து பரிணாமம் அடைந்து வருகிறது. முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்; இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் யாரும் ஆபத்தில் இல்லை. எல்லாமே இங்கு சரியாக தான் இருக்கிறது. உலகில் நிம்மதியாக வாழ சிறந்த நாடு இந்தியா தான். நம் நாடுதான் உலகில் எதிர்காலத்திலும் வாழ்வதற்கு தகுதியாக நாடாக இருக்கும். நம் நாடு தொடர்ந்து வளர்ந்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி, குஜராத்தைச் சோ்ந்த கரசேவகா்கள் அயோத்திக்கு சென்றுவிட்டு சபா்மதி விரைவு ரயிலில் சொந்த ஊா்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். கோத்ரா ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு சிலா் தீ வைத்தனா். இதில் 59 கரசேவகா்கள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் பரவிய வன்முறை பல இடங்களில் கட்டுக்கு அடங்காத மதக் கலவரமாக மாறியது. வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். அப்போது நடைபெற்ற தொடா் சம்பவங்களைத் தழுவி ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட சபா்மதி ரிப்போா்ட் திரைப்படம். இந்தப் படத்தை தீரஜ் சர்னா இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு பா.ஜ.க அரசியல் தலைவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விக்ராந்த் மாஸ்ஸி சந்தித்துள்ளார். இது குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில், " மரியாதை நிமித்தமாக இன்று நடிகர் விக்ராந்த மாஸ்ஸி லக்னோவில் உள்ள அரசு அலுவலகத்தில் என்னைச் சந்தித்தார்" எனக் கூறியுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், "முதல்வரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது கௌரமாக கருதுகிறோம். தி சபர்மதி ரிப்போர்ட் படக்குழுவை பாராட்டினார். இதற்காக நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்" என்றார்.

இந்த படம் குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில், உண்மை தற்போது வெளிவந்துள்ளது சிறப்பு. பொய் பிரசாரங்கள் நீண்ட காலம் நிலைக்காது. காலப்போக்கில் உண்மை வெளிவந்தே தீரும்' என்றதும் குறிப்பிடத்தக்கது


Next Story