விமர்சனத்தை வெற்றியாக மாற்றிய விஜய்... தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லுமா கோட்?


விமர்சனத்தை வெற்றியாக மாற்றிய விஜய்... தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லுமா கோட்?
x
தினத்தந்தி 4 Sept 2024 10:53 PM IST (Updated: 6 Sept 2024 10:36 AM IST)
t-max-icont-min-icon

ஆயிரம் கோடி வசூலிக்குமா 'தி கோட்?' பெரும் எதிர்பார்ப்புகளுடன் நேற்று வெளியானது.

சென்னை,

விஜய்யின் தொடக்கமும் வளர்ச்சியும்

நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் பெரும்பாலான படங்களில் சிறு வயது விஜயகாந்த்தாக நடித்தார். பின்னர் கடந்த 1992-ல் வெளிவந்த 'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், இப்படத்தில் இவரது தோற்றம், நடனம், நடிப்பு என அனைத்தும் விமர்சிக்கப்பட்டன. ஆனாலும், எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்து செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா என பல படங்களை விஜய்யை வைத்து இயக்கினார்.

ஆனாலும், விஜய் ஏற்றுக்கொள்ளப்படாத நடிகராகவே இருந்தார். பின்னர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளிவந்த 'பூவே உனக்காக' படம்தான் விஜய்யைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக தமிழகத்தில் பலரும் நினைக்க வைத்தது. இதன் தொடர்ச்சியாக விஜய் காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தார்.

பின்னர் 'திருமலை' படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாகவும் விஜய் உருவெடுத்தார். திருமலை தொடங்கி வைத்த ஆட்டம், கில்லி, திருப்பாச்சி, சிவகாசி என தொடர்ந்தது . பிறகு நண்பன், துப்பாக்கி என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிகளைக் கொடுத்தார் விஜய். கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி வெளியான 'லியோ' திரைப்படம் விஜய்யின் 67-வது படமாகும். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப்படைத்தது. அதனைத்தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் 68-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

கட்சி பெயர், கொடி, பாடல் அறிமுகம்

இந்தநிலையில், தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இன்னும் 1 படத்துடன் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்தார். இது தமிழ் சினிமா மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் நமது இலக்கு என்று தெரிவித்த விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார். கட்சி கொடிக்கான விளக்கம், கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து முதல் மாநாட்டில் தெரிவிப்பதாக கூறினார்.

இதனிடையே தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை மிக பிரமாண்டமான முறையில் நடத்த கட்சியினர் முடிவு செய்தனர். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் வருகிற 23-ந் தேதி (திங்கட்கிழமை) கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு அதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது. மனு கொடுத்து 5 நாட்கள் ஆகியும் மாநாட்டுக்கான அனுமதி வழங்குவதில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மவுனம் காத்து வருகிறது.

தி கோட் திரைப்படம்

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 68-வது படத்திற்கு 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரையரங்குகளில் நேற்று இந்த படம் வெளியானது. இப்படத்தை ரசிகர்கள் திருவிழாபோல் கொண்டாடி வருகின்றனர். கட்சி தொடங்கிய பின் வெளியான முதல் விஜய் படம் தி கோட்.

டீ ஏஜிங் தொழில்நுட்பம்

'தி கோட்' படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானநிலையில், ஸ்பார்க் பாடலில் இடம்பெற்றிருந்த விஜய்யின் டிஏஜிங் தோற்றம் விமர்சனத்திற்கு உள்ளானது. பார்ப்பதற்கு விஜய்போல் இல்லையென சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவின. இந்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட படக்குழு டிஏஜிங் வரும் காட்சிகளை மேலும் பணிசெய்து மேம்படுத்தியது. இதன் முடிவுகளை டிரெய்லரில் காணமுடிந்தது. டிரெய்லர் வெளியான பிறகு இந்த விமர்சனம் ஓரளவு ஓய்ந்தது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

அதிநவீன தொழில்நுட்பத்தில் வெளியான தி கோட்

தி கோட் படம் ஐமேக்ஸ் (IMAX) மற்றும் எபிக் (EPIQ) தொழில்நுட்பத்தில் வெளியாகி உள்ளது. சாதாரண திரைகளை விட ஐமேக்ஸ், எபிக் தொழில்நுட்பத்துடன் மேம்பட்ட திரைகளில் பார்த்தால் நல்ல திரை அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தி கோட் திரைப்படம் லண்டனில் உள்ள புகழ்பெற்ற விளம்பர திரையான லெய்செஸ்டர் ஸ்கொயர் ஸ்கிரீனில் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரையில் வெளியாகும் முதல் தென்னிந்திய திரைப்படம் பெருமையை 'தி கோட்' திரைப்படம் பெற்றுள்ளது. இங்கிலாந்து முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரைகளில் இந்த படம் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் முதல் காட்சி காலை 4 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் முதல் இரண்டு நாட்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரப்பட்டநிலையில், முதல் ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நேற்று காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கி 5 காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இப்படம் கேரளாவில் மட்டும் சுமார்700 திரையரங்குகளில் தி கோட் வெளியாகி இருக்கிறது.

கடைசி திரைப்படம்

நடிகர் விஜய் 69-வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குவதை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எச்.வினோத், "இந்தப்படம் 200 சதவிகிதம் விஜய் படமாக இருக்கும். இந்தப்படம் அரசியல் படமில்லை. முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். இந்தப்படத்தை ஒப்புக்கொள்ளும்போதே விஜய் சாரை அனைத்துவிதமான அரசியல் தலைவர்களும் அனைத்து விதமான வயதினரும் பார்ப்பார்கள் என்பதால், இதில் யாரையும் தாக்காமல் மேலோட்டமான விஷயங்களை வைத்து ஒரு நல்ல கமர்ஷியல் படமாக திட்டமிடப்பட்டுள்ளது." எனக் கூறியிருந்தார்.

மேலும், இப்படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ம் தேதி துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் அல்லது ஐதராபாத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இதன்மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் கோடி சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான எந்த திரைப்படமும் ரூ. 1,000 கோடிக்கு மேல் வசூலித்ததில்லை. விஜய் இன்னும் 1 படம் மட்டுமே நடிக்க இருப்பதால் தி கோட் படம் அந்த சாதனையை படைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story