விஜய் சேதுபதி நடித்த 'டிரெயின்' படத்தின் சிறப்பு வீடியோ வெளியீடு!


நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடித்து வரும் “டிரெயின்” திரைப்படத்தின் சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

கலைப்புலி எஸ் தாணுவின் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'டிரெயின்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. ஒரே இரவில் ரெயிலில் நிகழும் சம்பவமாக இப்படம் உருவாகி வருவதாகத் தகவல். நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குநர் மிஷ்கினுடன் கைகோர்த்துள்ள படமென்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படத்தில் வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய், அருண் ஆகியோர் நடித்து வருகின்றனர். டெவில் படத்திற்கு பிறகு இந்தப் படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டார்க் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் 47வது பிறந்தநாளான இன்று இந்த திரைப்படத்தின் 'சிறப்பு கிளிம்ஸ்' வீடியோ படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ரயில் ஒன்றில் அவர் நடந்து செல்வதும், பின்னர் படத்தின் டப்பிங் பணியின் போது அவர் உணர்ச்சிப்பூர்வமாக வசனங்கள் பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இறுதியாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி அந்த வீடியோ நிறைவடைகிறது.


Next Story