'வீரத்தின் மகன்' திரை விமர்சனம்

இயக்குனர் அன்புமணி இயக்கிய 'வீரத்தின் மகன்' திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
ஒரு தீவில் உள்ள ராணுவ முகாமில் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள். பெண் போராளிகளை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். போரில் கொல்லப்பட்ட போராளிகள் குழுவின் தலைவன் மகனான சிறுவனையும் ராணுவத்தினர் பிடித்து வந்து அந்த முகாமில் அடைக்கின்றனர். சிறுவனை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் அன்புமணி தனது மகன் வயதில் இருக்கும் அவனோடு நெருக்கமாகி பாசம் கொள்கிறார். சிறுவன் கொல்லப்பட்டானா? உயிர் தப்பினானா? என்பது மீதி கதை.
ராணுவ வீரராக வரும் அன்புமணி கதாபாத்திரத்தை உள்வாங்கி தேர்ந்த நடிப்பை வழங்கி உள்ளார். முதலில் அவரிடம் வெளிப்படும் வெறுப்பும் பிறகு சிறுவனிடம் காட்டும் அன்பும் கதாபாத்திரத்துக்கு வலிமை சேர்த்துள்ளது. சிறுவனை காப்பாற்ற துடிக்கும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கிளைமாக்சில் உயர் அதிகாரியிடம் பேசும் வசனம் சாட்டையடி.
சிறுவன் அத்வைத் நடிப்பு படத்துக்கு பெரிய பலம். குழந்தைத்தனத்தையும் முதிர்ச்சியான நடிப்பையும் ஒருசேர வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். சிறுவனை விசாரிக்கும் ராணுவ அதிகாரிகள் குழுவினர் மற்றும் சிறையில் தவிக்கும் போராளிகளின் நடிப்பு இயல்பாக உள்ளது. காட்சிகள் ஒரு இடத்திலேயே முடங்குவது பலவீனம். பிஜூ ரவீந்திரன் வசனம் பலம். சானந்த் ஜார்ஜ், ரவி மேனன் இசை கதையோடு ஒன்ற வைத்துள்ளது.
இலங்கை போரை நினைவுப்படுத்தும் கதைக்களத்தில் போருக்கு பின் போராளிகள் அனுபவித்த வலிகளையும் அவமானத்தையும் சிறுவன் மீது ராணுவத்தினர் காட்டிய அரக்கத்தனத்தையும் வைத்து உணர்வுப்பூர்வமான படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் அன்புமணி.